”சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ ஆகிட்டார். அதனால, நம்ம
அவர் சொல்றத கேட்டு, நம்பி தான் ஆகணும் போல……” என்ற
மனவோட்டம், அந்த போத்தீஸ் விளம்பரம் பார்க்கும் போதெல்லாம் என்னுள்
எழும். ”சூரத், ஆகமதபாத் போன்ற நகரங்களில், உங்களுக்காக
அடிச்சு பேசி….. விலையை குறைச்சு வாங்கி விற்கிறது யாரு??....”
என்று சிவகார்த்திகேயன் கேட்பார். “அது
போத்தீஸ் தான் ….” என்று அவரே பதில் சொல்லி கொள்வார்.
ஆனி மாதம் தொடங்கி விட்டாலே, இப்படி
பல ஹீரோ, ஹீரோயின்கள் டிவியில் புகுந்து, ஏதாவது
ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார். ” தரமானது, விலை
குறைவு, 5- 50 சதவீதம் வரை ஆடி கழிவு, ஒன்று
வாங்கினால் இரண்டு இலவசம்…..” என்று ஏதாவது ஒன்றை மைக்கை பிடித்து விளம்பரம் செய்ய
ஆரம்பித்து விடுவார்கள். இவர்களின் பார்வையில் நகைக்கடை, எலட்ரானிக்
சாதனங்கள் விற்பனை கூடங்கள் கூட தப்பவில்லை.
புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஆடி சிறப்பு விற்பனை
பற்றிய நிகழ்ச்சியினை அண்மையில் காண நேர்ந்தது. மார்கெட்டிங் பிரிவு தலைவர், “
நாங்கள் ஆடி சிறப்பு விற்பனைக்காக, துணிகளை
மிகவும் குறைந்த விலைக்கு, வாங்கி விற்பனை செய்கிறோம்…” என்றார்.
என் மனதில் சில கேள்விகள் எழுகின்றன. கடைகளும், மொத்த விற்பனையார்களும் வியாபாரிகள் தான். எனவே, உங்களுக்காக(அதாவது
கடைக்களுக்காக) குறைத்து விற்க, அவர்கள் என்ன ஏமாளிகளா???? அல்லது
சமூக நலனில் அக்கறை கொண்டவர்களா???? சரி, மொத்த
விற்பனையார்களே குறைத்து கொடுக்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும், இப்போது
மட்டும் குறைத்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன??? ஒன்று, விற்பனையாகாத
துணியாக தான் இருக்க வேண்டும்.
அப்படியென்றால், எனக்குள்
இன்னொரு கேள்வி எழுகிறது. ”மொத்த விற்பனையாளர்கள், எப்போதும்
குறைத்து கொடுப்பதை, கடைகள் ஆடிக்காக மட்டும் குறைத்து கொடுக்கிறார்கள் என்று
பொய் பிரசாரம் செய்கிறீர்கள்” என்று எண்ண தோன்றுகிறது.
சரி…விடுங்கள்…. இப்போதும்
மட்டும் குறைத்து கொடுக்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும், தீபாவளி, பொங்கல்
போன்ற பண்டிகை தினங்களில் கூட தள்ளுபடி வழங்க முடிகிறதே, அது
எப்படி???
எனக்கு தெரிந்த வரை, துணி
கடை மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை நிலையம் போன்றவற்றில் 100 சதவீதம் இலாபம்
என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அதாவது ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்கி, 200
ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். இதனால், இலாப சதவீதம்
மிக அதிகம்.
ஆடி கழிவு என்பது பெரும்பாலும் வியாபார தந்திரமாகவே
இருக்கிறது. அது பல வகையாக செயல்படுத்தப்படுகிறது. விற்பனையாகாத துணிகளை குறைத்து
விலைக்கு விற்கப்படுகின்றது. ஆனால், அவர்களுக்கு
நட்டமில்லை. ஆனால் இலாப சதவீதம் குறையும்.
1+1, 2+1, 3+2 என்று, ஏதாவது கூட்டல்
கணக்கு வகைகளை போட்டு இருப்பதை, கடைகளில் காணாமல் இருக்க முடியாது. 1+1 என்றால், இரண்டின்
விலையையும் கூட்டி, ஒரு விலையாக காண்பித்து, ஒன்றிற்கு
ஒன்று இனாம் என்று விற்பனை செய்யப்படுகின்றது. இதனை தாண்டி, இன்னொரு
உச்ச கட்ட மோசடியும் நடக்கிறது. ஒரு சர்ட்டின் விலை 100 ரூபாய் என்றால், அதனை
200 ரூபாய் என காட்டி, வாடிக்கையாளர்களுக்காக, 100
ரூபாய் தருகிறோம் என்று பொய் பிம்பம் காண்பிக்கப்படுகிறது.
விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களை கவர, பல
தந்திர வழிகளை மேற்கொள்கிறது. அதில் ஒன்று தான், அதிக
விற்பனை, குறைந்த
லாபம். இந்த வழிமுறை தான் ஆடி கழிவு என்று சொல்லப்படுகிறது.
அது ஏன்….. ஆடியில்
ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் ஆராய வேண்டி உள்ளது. ”ஆடி
பட்டம், தேடி விதை…” என்ற பழமொழி
அனைவரும் அறிந்ததே. முன்பெல்லாம், நெல் பயிரிடுவதற்கு ஆடி மாதத்தில் தான் விதை
விதைப்பார்கள். விவசாயத்திற்கு, அதிக அளவு பணம் செலவிட வேண்டும். அதனால், எந்தவொரு
நல்ல விஷேங்களை செய்யாமல் தவிர்த்து வந்தனர். இது, பல
வியாபார நிறுவனங்களில் விற்பனை படுக்க வைத்தது. இதனை தவிர்க்க, ஆடி
கழிவு என்ற புது உத்தியை ஆரம்பித்து விட்டனர். இந்த வியாபார உத்தி, இன்றும்
கடைகளுக்கு பணம் கொழிக்கும் திருவிழாவாக மாறி உள்ளது என்பதில் ஐயமில்லை. இதே மாதிரி, அஷ்ய
திருதியை என்ற விற்பனை உத்தியும், ஆன்மிக சாயம் பூசப்பட்டு வெளிப்பட்டு இருக்கிறது.
இன்று ரெங்கநாதன் தெருவில் காலடி வைத்தால் போதும், நீங்கள்
நடக்காமலே அடுத்த தெருவிற்கு சென்று விடலாம். அந்த அளவுக்கு கூட்டமும் விற்பனையும்
சூப்பர்.
”ஆடி மாதத்தில், துணி
எடுப்பதற்கு, இவ்வளவு அக்கப்போரா?...” என்று
உங்கள் மனசாட்சி கேள்வி கேட்பது எனக்கு புரிகிறது. உங்களை துணி எடுக்க வேண்டாம்
என்று சொல்லவில்லை; என்னால் கூறவும் முடியாது. ஆடி கழிவு என்ற பெயரில்
நடக்கும் வியாபார உத்திகளையும், உங்களை ஏமாற்ற நினைக்கும் நிறுவனங்களை பற்றியும்
தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதனை போல், விற்பனையாகாத
துணிகளை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து, நல்ல துணிகளை
தேர்ந்தெடுக்கவும்.
”ஒரு செருப்பு வாங்கினால் ,இன்னொன்னு
இலவசம் ….” என்று விளம்பர படுத்தி, conditions
apply என்று கீழே போட்டு, ”ஒரு ஜோடி செருப்புல, ஒன்னு
வாங்கின, இன்னொரு செருப்பு இலவசம் தானே……” என்ற
பதிலும் ஆடி கழிவு என்ற பெயரால் வரலாம். ஜாக்கிரதை.
||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment