Friday, July 26, 2019

இட ஒதுக்கீடும் எனது புரிதலும் 2


இட ஒதுக்கீடு முறையில் நிறைய சிக்கல்கள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை சதவீத மக்கள் இருக்கிறார்கள் என்று முறையாக அறிய முடியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பற்றி புள்ளி விவரங்கள் மட்டுமே முழுமையாக இருக்கின்றனர். மற்றைய பிரிவுகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு முறை என்பது யூகத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகின்றன. 2021 கணக்கெடுப்பில் சாதிய ரீதியாக கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அது மட்டுமல்ல, மாநிலத்திற்கு மாநிலம் வாழும் பிற்படுத்தப்பட்டோர்/அட்டவணை பிரிவினர் போன்றவர்களின் விகிதாச்சாரம் மாறுபடும். இதனால் மாநிலம் சார்ந்த இட ஒதுக்கிட்டில் பிரச்சனையில்லை. மத்திய அரசு வேலைகளில் பிரச்சனையை உண்டு பண்ணும். எ.கா. தமிழ்நாட்டில் உயர் ஜாதி இந்துகள் மிக குறைவு. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் அதிகம். வட இந்தியாவில் உயர் ஜாதி இந்துகள் அதிகம். அவ்வாறு இருக்கையில் இந்திய முழுமைக்கும், ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு நிறைய பிரச்சனை வருகிறது.

ஒரு நற்செயல் செய்யும் போது, சில பாதிப்புகள் ஏற்படும். அது போல் இடஒதுக்கீடு சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியினர், இட ஒதுக்கீடு மூலம் பயனடையும் போது…. அதே பிரிவுகளில் உள்ள மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அது போல் பொது பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இட ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை விட அதிகமாக கொடுக்கப்படும் போது, சமூக நீதி காப்பாற்றப்படுவதாக தோன்றலாம். ஆனால், சமூகம் சிறந்த பல அறிஞர்களை இழக்கலாம். வளமான எதிர்கால சமுதாயத்திற்கு திறமை சார்ந்த அங்கிகாரங்கள் தேவை. ( நவீன உலகில் திறமைக்கான அங்கிகாரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் இட ஒதுக்கீடு மட்டுமல்ல. பொது மக்களின் கண்ணோட்டமும் அப்படி…)

என் கருத்தின் படி, இந்திர சகானி வழக்கோடு உடன்படுகிறேன். அதாவது இட ஒதுக்கீடு என்பது 50% தாண்ட கூடாது. ஒரு சமூகம், சமுதாயத்தில் 20 % இருக்கிறது என்றால், 10 % இட ஒதுக்கீடு அளிக்கலாம். திறமையும் அங்கிகாரம் செய்யப்படும்; சமூக நீதியும் காக்கப்படும்.

இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது(என்னை பொறுத்தவரை). ஆனால் நீதிமன்றம் உரிமை என்று கூறியதாக நினைவு. இத்தகைய சூழ்நிலையில், பத்தாண்டு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதுவும் நடப்பதில்லை.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதும், கல்வியில் இட ஒதுக்கீடு என்பதையும் சமூக நீதி பார்வையோடு மட்டும் ஒதுக்கி விட முடியாது. நிச்சயமாக பொருளாதாரம் சார்ந்த நீதியை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பின் ஒன்றாவது சட்டத்திருத்தமும் அதனை தான் சொல்கிறது.

முந்தைய காலத்தில் சாதியம் சார்ந்த பாகுபாடு சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பெருமளவு குறையவில்லை யென்றாலும், பெரியளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு குறைய தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக பொருளாதாரம் சார்ந்த பாகுபாட்டை நோக்கி சமுதாயம் பயணிக்க ஆரம்பித்து விட்டது.

ஆதலால் சமூக காரணிகள் மற்றும் பொருளாதார காரணிகளை கொண்டு இடஒதுக்கீடு( அட்டவணை பிரிவினரை தவிர்த்து) பற்றி சிந்திக்க வேண்டும். இதனை உச்சநீதிமன்றமும், பல்வேறு தருணங்களில் எடுத்து சொல்லியிருக்கிறது. முறையான தரவுகள் அடிப்படையில், இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும். பத்தாண்டு ஒருமுறை மறு ஆய்வு செய்ய பட வேண்டும்

அடுத்ததாக……..

தற்சமயத்தில் எஸ்பிஜ தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மிக குறைவான மதிப்பெண்ணோடு தேர்வாகி இருந்தனர். இதற்கு எனக்கு தெரிந்த காரணங்களை முன் வைக்கிறேன். தமிழ்நாட்டில் உயர் சாதி இந்துகள் வெகு குறைவு. தேர்வு எழுதியவர்களில் குறிப்பிட்ட சதவீத்தை எடுத்தாக வேண்டும். மேற்கண்ட தேர்வு என்பது மாநில அளவிலான மதிப்பெண் பட்டியல். ஆனால் இந்திய அளவிலான பட்டியலில் குறைவான மதிப்பெண் இல்லை.

பொருளாதார அளவீடாக, 8 லட்சத்திற்கு குறைவு என்று வைத்துள்ளனர். தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் படி, இந்தியாவில் 99 சதவீத மக்கள் 8 லட்சத்திற்கு குறைவானவர்களே!!! இது மத்திய அரசின் இதர பிற்படுத்த வகுப்பினரின் அதிகபட்ச உச்ச வரம்பின் அடிப்படையில் முன் வைக்கப்பட்டதே!!! ( இந்த வரம்பை உயர்த்த சொல்லி அரசியல்வாதிகள் யார் என்பதை , நீங்களே யோசித்து கொள்ளுங்கள்) . என்னை பொறுத்த வரை, 8 லட்சம் என்பது அதீத அளவீடு தான்.

வருமான வரி விலக்கு 2.5 லட்சத்தில் இருக்கும் போதும், இந்தியாவின் தனிநபர் வருமான சராசரி, தோராயமாக 1,10,000 இருக்கும் போது, 8 லட்சம் என்பது அதீதம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


இட ஒதுக்கீடும் எனது புரிதலும் 1


இடஒதுக்கீடு குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எனது புரிதலில் சிலவற்றை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.

அரசியலமைப்பின் முன்னுரையில், சமூக, அரசியல், பொருளாதார என்று மூன்று வகையான நீதியை மக்கள் அடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற் போல்……. அரசியல் மக்களாட்சியை ஏற்படுத்த அடிப்படை உரிமைகளும், சமூக மற்றும் பொருளாதார மக்களாட்சியை ஏற்படுத்த அரசின் நெறிமுறை கோட்பாடுகளும் உள்ளது.

ஷரத் 15 என்பது பொது வெளியில் பாகுபாடு காட்ட கூடாது. அதே சமயத்தில் பெண்கள், பிற்படுத்த வகுப்பினர் மற்றும் அட்டவணை வகுப்பினருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு பற்றி பேசுகிறது. சமூக நீதியை ஏற்படுத்த, இந்த இட ஒதுக்கீடு முறை பரிந்துரைக்கிறது. ஷரத் 16 என்பது வேலைவாய்ப்பில் சமத்துவத்தை பேசுகிறது. மேற்கண்டதை போல் பிற்படுத்த வகுப்பினர் மற்றும் அட்டவணை வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி கூறுகிறது.

முன்னது முழுவதும் சமூக நீதியென்றாலும், பின்னதை முழுவதும் சமூக நீதி என்ற பார்வையோடு மட்டும் பார்க்க முடியாது. அதில் பொருளாதார நீதியும் அடங்கியே உள்ளது.
அதோடு மட்டுமில்லாமல், 1951 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதல் சட்டத்திருத்திலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் சிறப்பு சலுகைகள்(இட ஒதுக்கீடு) வழங்க வழிவகை செய்தது. இதோடு ஷரத் 46 ல், அட்டவணை வகுப்பினர் மற்றும் இதர நலிந்த பிரிவினரை மேம்படுத்த, கல்வி மற்றும் பொருளாதார வளத்தினை அதிகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் தான் புதிதாக, 15(6), 17(6) முறையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

நிற்க……

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி, 1990 ஆம் ஆண்டு இதர பிற்படுத்த வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1991 பொது பிரிவில் பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கும், கூடுதலாக 10 சதவீத ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்திர ஜாகனி வழக்கில்(1992), இட ஒதுக்கீடு முறை 50 சதவீதத்திற்கு கூடுதலாக இருக்க கூடாது என்றும், பொது பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு முறையும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. (ஆனால், மீண்டும் சட்டமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது)

நிற்க….

1994 ஆம் ஆண்டும், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதுவும் அரசியலமைப்பில் 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் 9 வது அட்டவணை என்பது நீதி மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல என்று சொல்லியிருந்தனர். தற்சமயம்…. நீதி மறு ஆய்வு என்பது நீதிமன்றத்தின் அடிப்படை கட்டமைப்பில் ஒன்று என்று மினர்வ மில் வழக்கு, பொம்மை வழக்கு போன்ற பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆதலால் நம்முடைய 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு, நீதிமன்ற நிலுவையில் உள்ளது.

மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்….. 50 சதவீதத்திற்கும் அதிகமான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எ.கா- ஹரியானா- 70%, ஜார்கண்ட்- 60%, ராஜாஸ்தாந் 54%

மத்திய அரசு இட ஒதுக்கீடு முறைக்கும், மாநில அளவிலான இட ஒதுக்கீடு முறைக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளது. இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்.

ஜாதியை அடிப்படையாக கொண்டு மட்டும், மத்திய அரசின் ஒட ஒதுக்கீடு கொண்டு வர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எ.கா- ஜாட் இனத்தை இதர பிற்படுத்த வகுப்பினரில் மத்திய சேர்த்த போது, நீதிமன்றம் மறுத்து விட்டது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Sunday, July 21, 2019

கல்வி நிலையங்கள்- அரசுடமை சாத்தியமா?


கல்வி குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் வியாபித்து இருக்கின்றது. இதில் நிறைய பரிமாணங்கள் உள்ளது. அதில் ஒன்றுகல்வியை அரசுடமையாக்குவது ஒரு தரப்பினரின் வாதம்!!! இன்னொரு புறம் தனியார் மயமாக்குவது சிறந்தது , மற்றவரின் வாதம்!!!

என்னை பொறுத்துவரை, இரண்டையும் கலந்து செய்வது சிறந்த முறை என்பேன்!!! அதாவது இப்போது இருக்கும் முறையே நல்லது தான்!!!

கல்வியை கற்பித்தல், பாடத்திட்டங்களை வடிவமைத்தல், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துதல், பள்ளிகூடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துதல் போன்ற கோணங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய உள்ளதே தவிர, கல்விகூடங்களினை யார் நிர்வகிப்பது? என்பது முக்கியமான பிரச்சனையாக தோன்றவில்லை!!!

இன்று தமிழ்நாடு பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வியில் இந்திய அளவில் முன்னேறி இருப்பதற்கு காரணம், அரசு பள்ளி மட்டுமல்ல!!! சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே, கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை கொண்டுவந்தது தான்!!! உங்கள் ஊரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளி, அல்லது உதவி பெறும் கல்லூரி என்பது தனியார் மயத்தின் முதல் படி!!!!

50 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், அரசுடைமை என்பது சிறந்த கூறாக அமைந்தது. ஆனால்இன்றோ …. உலக நிலைமை நேர் எதிரான நிலைமை!!! சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுடமையை கையிலெடுத்த வெனிசுலா நிலைமை நீங்களே கவனித்து இருப்பீர்கள்!!! அதோடு மட்டுமல்லாமல்…. அரசுடமை ஆக்குவதற்கான நிதியை சேர்த்தே யோசிங்க மக்களே!!

எனக்கு தெரிந்த வரை, வேதாரண்யம் பகுதிகளில் 15-20 வரையான தனியார் பள்ளி கூடங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த மதிப்பும், சுமார் 50 லட்சம் முதல் 5 கோடி வரை கூட இருக்கும். அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் மொத்த பள்ளிகளை அரசுடைமையாக்கினால், எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!!!!( தமிழ்நாட்டின் கடன் அளவு ஜிடிபி ஒப்பிட்டால் 23 சதவீதம் உள்ளது என்பது உபரி தகவல்)

அப்படியே வாங்குவதாக இருந்தாலும், பள்ளி நிர்வாகிகள் விடுவார்களா??? இல்லை, சட்டம் தான்…… அதற்கு துணை நிற்குமா???

அடுத்துமுழு தனியார் மயத்திற்கு வித்திட்டால் நிலைமை இன்னும் மோசம்!!! லாபத்திற்காக ஆசிரியர்கள் முழுமையாக சுரண்ட படுவார்கள்!!! முழுவதும் கிணத்து தவளைகளாக வெளி வருவார்கள்!!! இன்னும் நிறைய சொல்லலாம்!!!

மேலும்….

1981 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 3.4 சதவீதம், 2016 ஆண்டு 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. நீங்களே நன்கு அறிந்து இருப்பீர்கள்.!!! இன்றைய தம்பதிகள் ஒரு குழந்தைக்கு அதிகமாக பெற்று கொள்ள விரும்பவில்லை!!!!. இப்படியிருக்க எப்படி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும்????

இது ஒருபுறம் இருக்க!!! நான் பள்ளி படிக்கும் போது, ஒன்றிரண்டு தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ 15-20 நிறுவனங்கள் வரை பெருகி விட்டன!!! அதிலும் ஆங்கில மோகம் அதிகமாகி விட்டதால்…… தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகமாகி விட்ட நிலையில், அரசு பள்ளிகளில் குழந்தைகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்!!!

தெரு தோறும் தொடக்க பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி என்பது காமராஜரின் நிலைப்பாடு. இந்த புரிதல் என்பது, 50 ஆண்டுகளுக்கு இருந்த சாலை போன்ற அடிப்படை வசதிகள் அடிப்படையில் அமைந்தது. ஆனால்இன்றோ…. 20 கிமீ தூரமாக இருந்தாலும், அரை மணி நேரத்தில் செல்லும் அளவிற்கு சாலை வசதியும், வாகன வசதியும் உள்ளது. இதனையும் மாற்றி சிந்திக்க வேண்டி உள்ளது!!!!

இப்படியே சொல்லி கொண்டே போகலாம்!! சம கால புரிதலோடு புரிந்து கொள்ளுங்கள்!!! அதை விடுத்து அரசுடமையோ, தனியார் மயமோ சிறந்தது ……. எங்ஙனம் என்று புரிந்து கொள்ள இயலவில்லை!!!!

உனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூட நீங்கள் நினைக்கலாம். சொல்வதில் தவறிப்பின், முழுமையாக தரவுகளோடு நிருபியுங்கள்!!! ஒத்து கொள்கிறேன்!!! மாறாக கம்பு சுத்துவதில் பயனில்லை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Sunday, July 14, 2019

கஜா புயலும் ஆஸ்பெடஸ் சீட்டும்


கஜா புயல் வந்து, சுமார் 8 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்!!! மரங்கள் மற்றும் வீடுகளினை அதிகமாக பாதித்தது.

அவ்வாறு முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கான செலவுகள் அதிகம்!!! அதனால் தான், தமிழக அரசு கூட, தென்னமரத்திற்கு 600 யும், அதனை அப்புறப்படுத்துவதற்கு 500 வழங்கியது. இவ்வாறு செலவு அதிகமாவதால், சில இடங்களில் அப்படியே கிடக்கிறது. அது கால போக்கில் மக்கி, மண்ணோடு கலந்து விடும். சுற்றுபுற சூழலிற்கு பிரச்சனையில்லை.

வீடுகளும் அதிகமாக சேதமாகி இருக்கிறது. வீட்டின் கூரையாக வேய்ந்திருந்த ஆஸ்பெடஸ் சீட், தகர சீட், ஒடுகள் முழுவதும் சேதமடைந்து விட்டது. இதில் தகர சீட்களை, பழைய இரும்பு கடைகளிடம் கொடுத்து விட்டார்கள். ஆதலால், பிரச்சனையில்லை.

ஆனால்…. ஆஸ்பெடஸ் சீட் மற்றும் ஒடுகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி, சாலை ஒரங்களில் கொட்டி வைத்துள்ளனர். வீட்டிலிருந்து அப்புறப்படுத்திய திருப்தி!!! ஒடுகள் சாலை ஒரங்களில் கொட்டுவதால், சுற்றுபுற சூழலுக்கு பெரியளவிற்கு பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ….ஆஸ்பெடஸ் சீட் பெரியளவிற்கு பெரியளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எளிதில் மக்காது. மண் வளத்தை பாதிக்க கூடியது. ஏற்கனவே பல வழிகளில் சுற்றுபுற சூழல் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கையில், இது கூடுதல் பிரச்சனை!!

தூய்மை இந்தியா இயக்கத்தினை பேசி கொண்டிருக்கும் தருணத்தில், திட கழிவு மேலாண்மை பற்றி பேச வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். மறுசுழற்சி வாய்ப்பிருப்பின் செய்யலாம். இல்லையென்றால், முறையாக அகற்றுவதை பற்றி யோசிக்க வேண்டியதும் அவசியம்!!!

சுத்தமாக இருக்க வேண்டியது, நமது வீடு மட்டுமல்ல!!! சுற்றுபுறமும் தான்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, July 11, 2019

ஆண்- பெண் புரிதல் நிலை


ஆண்களினை எளிதாக புரிந்து கொள்ளலாம். பெண்களை புரிந்து கொள்ள இயலாது??? ” என்பது போன்ற புரிதல்கள்!!! அவ்வப்போது வருவது வழக்கம்!!! அதில் இதுவும் ஒன்று!!!

ஆண் பெண் உடலமைப்பில் இனப்பெருக்க மண்டலத்தை தவிர, அனைத்துமே ஒன்று தான்!!!! இடுப்பு எலும்பில் சிறிய மாற்றம், உடல் தசையில் சிறிய மாற்றம் போன்ற சிற்சில மாற்றங்களே உள்ளது.

இதனை தாண்டி....... ஆணையும் பெண்ணையும் வேறுப்படுத்துவது ஹார்மோன் மற்றும் X Y குரோமோசோம்கள் மட்டுமே!!! மேலும் சுற்றுபுற சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் ஜீன்கள் தான்!!!! genetic adaptation எனலாம்!!!

ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான சிந்திக்க தெரிந்தவர்கள் தான்!!! ஆனால் வாழ்க்கை முறை, ஆண் மற்றும் பெண்ணிற்கான வேலைகள், பொறுப்புகள், பெறப்பட்ட கல்வி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணும் சிந்தனை முறையில் பல வேறுபாடுகள் கால போக்கில் மாறி விட்டன!!!!

ஆணினை உலகத்தை பெண் புரிந்து கொள்வது எவ்வளவு கடினமோ, அந்தளவிற்கு பெண்ணை உலகத்தை ஆண் புரிந்து கொள்வது கடினம்!!! இதை விடுத்து பெண்ணை புரிந்து கொள்ளவே ,முடியாது என்பதெல்லாம் வெற்று பிதற்றல் என்பேன்!!!!

பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்ற உங்கள் வாதத்தை வைத்து கொண்டால், ஆணை மட்டும் புரிந்து புரிந்து கொள்ள இயலுமா??? அவனையும் புரிந்து கொள்வது கடினமே!!!

நாம் பெரும்பாலும் ஆணின் உலகத்தில் இருந்து, இவற்றையெல்லாம் பேசி கொண்டிருக்கிறோம்!!! அதை விடுத்து வெளி வந்து ஆண் மற்றும் பெண்ணின் சார்பு நிலையற்ற பொது மனநிலையில் யோசித்தால், இரண்டுமே ஒன்று தான்!!!!!

எப்படி இருந்தாலும், எக்காலத்திலும் ஆண் மற்றும் பெண்ணின் மனநிலையை முழுவதும் புரிந்து கொள்ள இயலாது??? முயற்சிக்கலாம்!!!

முடிந்தால்.... ஜான் கிரே எழுதிய, ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்ற நூலை வாசித்து பாருங்கள்!! சிறிது தெளிய/தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு..

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Sunday, July 7, 2019

சம கால அரசியல் புரிதல்


எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று அரசியல்!!!! ஆனால் சில ஆண்டுகளாக அரசியல் பேசுவதை குறைத்தே வருகிறேன். குறைவாக பேசுவேன்/மெளனமே/புன்னைகையே பதிலாக கடந்து விடுவேன்.

சம காலத்தில் அரசியலை புரிந்து கொள்கிற தன்மை குறைவு ஒரு காரணம்!!! சமூகவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், வரலாறு ஆகியவற்றோடு அரசியலை சேர்த்து பார்க்கும் போது அரசியல் பேசுவதும் வெட்டி வேலையாக கூட தெரிகிறது( அதாவது அரசியலை தனித்து மட்டும் பேசுவதால்)

மக்கள் எதிர்பார்ப்பது தூய்மை வாத அரசியல்!!! பொதுநல எண்ணம் குறைந்து சுய நல எண்ணம் அதிகமாகி விட்டது!!! அதில் எங்கே தேடுவது தூய்மை வாத அரசியலை!!!! நடைமுறை அரசியலுக்கும், மக்கள் எதிர்ப்பார்க்கிற அரசியலுக்கு இடைவெளி அதிகமாகி விட்டது. இது குறைவது சாத்தியமே இல்லை!!! ஏனெனில் எதிர்பார்ப்பில் நடைமுறைக்கு ஒத்து வராதே அதிகம்!!!

தலைவர் வந்து எல்லாவற்றையும் சரி செய்து விடுவார் என்பது போன்ற அறிவற்ற புரிதல் எதுவுமில்லை. அது போல் தான்….. கம்யூனிசம் வந்தால் நல்லாயிருக்கும்!!! மாக்சினியம் வந்தால் நல்லாயிருக்கும்!!! திராவிடம் வந்தால் நல்லாயிருக்கும்!!! தலித்தியம் வந்தால் நல்லாயிருக்கும்!!! அம்பேத்காரிசம் வந்தால் நல்லாயிருக்கும்!!!

வரலாற்று ரீதியாக பார்த்தால், எந்த கருத்தியலும் குறிப்பிட்ட காலத்தில் சிறந்ததாக இருக்கும். காலம் செல்ல செல்ல…… அதே கருத்தியல் சமூகத்தினால் நிராகரிக்கப்படும்!!!! இது கருத்தியல் மட்டுமல்ல!!! அனைத்திற்கு பொருந்தும்!!! சூழ்நிலையும் காலமும் தான், அதன் தேவையை முடிவு செய்யும்!! இது புரியாமல் பேசி கொண்டிருப்பதில் பயனில்லை!!!

இதையெல்லாம் விட முக்கியமானது!!! பொதுமக்களின் அரசியல் சார்பு நிலை!!! அனைவரும் ஒரு கருத்தியலோ/கட்சியானலோ ஈர்க்கப்பட்டு இருக்கின்றனர். சிலருக்கு நிலையாக இருக்கலாம்!!! சிலருக்கு மாற கூடியதாக இருக்கும்.
ஒரு கட்சி தலைவன் சொன்னால், 100 சதவீதம் நல்லது என்று முட்டு கொடுப்பதும்…. அதே சமயத்தில் எதிர்கட்சிகள் சொன்னால் முழுவதும் கெட்டது என்று வாதிடதும் அதிகமாகி வருகிறது. அரசியல் சார்ந்த சுய சிந்தனை இல்லாத போது விவாதித்து என்ன பலன்??

கட்சி தொண்டனாக இருந்து, ஆயிரம் விஷயங்களை கேட்க முடியும். ஆனால் கட்சி தலைவராக இருந்தும் ஒரு விஷயத்தை செய்ய முடியுமா?? குழந்தையாக தந்தையிடம் ஆயிரம் விஷயங்களை கேட்கலாம். ஆனால்அக்குழந்தையே தந்தையாகும் போது, தன் குழந்தைக்கு அனைத்தினையும் செய்ய முடியுமா??

புரிந்தவனுக்கு….. அரசியலில் உள்ள நுண்ணரசியல் புரியும்!!! ஏன் பேச வேண்டாமென்பதற்கு!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்