Thursday, December 31, 2015

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்



2015 ஆம் ஆண்டு இன்றோடு முடிவடைந்து, நாளைய தினம் புதிய வருடமாய் புத்துயிர் பெற இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில், எனக்கு பெரிய உடன்பாடு கிடையாது. இருந்தாலும், நண்பர்களுக்கு ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துகள்!!! 2016 ஆம் ஆண்டு, எல்லா சிறப்பையும் பெற வாழ்த்துகள்.
2015 ஆம் ஆண்டில் அதிகமாக பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘சகப்பின்மை’ என்றால் மிகையாது. அது உண்மையா ?? என்பதெல்லாம் தாண்டி, காங்கிரஸ் கையிலெடுத்த வார்த்தையை, எழுத்தாளர், கலைத்துறை சார்ந்தவர்கள் என்று பெரிய பட்டாளமே கையில் எடுத்து, தன்னையும் முன்னிறுத்தி கொண்டனர்.
இப்படியாக அரசியல் நிலவரம், ஆண்டு முழுவதும் வியாபித்திருக்க, இயற்கைக்கு, இந்த பதத்தின் மீது சகப்பின்மை இல்லாமல் போய் விட்டது போலும். வருட இறுதியில் சென்னையில் வெள்ளத்தை ஏற்படுத்தி, சகப்பின்மை என்கிற வாதத்தை, தவிடு பொடியாக மாற்றி விட்டது.
வளர்ச்சி என்ற கானல் நீருக்கு, மனிதன் கொடுக்கும் இழப்புகள் ஏராளம். அதனை புரிந்து கொள்ளமாலே, மீண்டும் மீண்டும் நாம் இயற்கையை சிதைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலை வரை தான் இயற்கை பொறுத்து கொள்ளும். அதன் பிறகு, தன்னுடைய சுய ரூபத்தை காண்டி, தன்னை தானே சீர்படுத்தி கொள்ளும்.
அப்படி சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகள் 1. 2013 ஆம் ஆண்டில் நடந்த உத்ரகாண்ட் வெள்ளம். 2. 2015 ஆம் ஆண்டில் நடந்த சென்னை பெருவெள்ளம். இன்னும் நாம் இயற்கையை புரிந்து கொள்ளாமல் இருப்போமானால், மீண்டும் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
கடந்த கால நிகழ்வுகளிலிருந்து, நாம் பாடம் கற்று கொண்டு, செயல்பட துவங்கினால், வருகின்ற 2016 ஆம் ஆண்டில், ஜனவரி 1 மட்டுமல்ல. ஒவ்வொரு தினமும் புது வருடம் தான்…..
.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

பயணங்களும் வாழ்க்கை பயணங்களும்

மாம்பலம் இரயில் நிலையம்..

தாம்பரம் செல்லக் கூடிய மின்சார ரயில் ப்ளாட்பாரத்தை வந்தடைந்தது. காலியான இருக்கைகளில் அமர, படிக்கட்டுகளில் கவனம் செலுத்தி பயணிகள் ஏற முயற்சி செய்தனர். ஆனால் படிக்கட்டுகளில் அருகிலேயே, ஒருவர் கால்நீட்டி உறங்கி கொண்டிருக்கிறார். தூக்க மாத்திரை கொடுத்தால் கூட, நாம்மால் அப்படி தூங்க இயலாது என்று நினைக்கிறேன். அவரின் உடலினை தாண்டி, எதோ ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை புரிந்த்து போல், இருக்கைகள் நிரப்பப்படுகின்றன. இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றன.

இவனுக்கு அறிவு இருக்கா??? முட்ட பயலா…. பீப்….பீப்பீப் …” என்றெல்லாம் மனத்திற்குள் தீட்டி கொண்டே, அவரவர் இருக்கையை ஆக்கிரமிப்பு செய்திருக்க வேண்டும். எனக்கும் முதலில் கோபம் வந்தது உண்மை என்றாலும், பிறகு  அந்த நபரினை செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த மாதிரியான ஆச்சரியமான பல விஷயங்களை , வாழ்க்கையில் பயணங்கள் வழியே பெற்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ரூசி பார்ப்பது தான் கிடையாது.

பழங்கால நடைப்பயணம் முதல் இன்றைய செவ்வாய் கிரகம் பயணம், ஏதேனும் ஒர் வகையான உள களிப்பை தாண்டி, அனுபவத்தையும், அறிவினையும், பண்பினையும் தந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவற்றில் சில மட்டுமே, நங்கூரமாய் மனதில் பதிகிறது. மற்றவையெல்லாம் காலை நேர பனி போல் நொடி பொழுதில் மறைகிறது.

பேருந்திகளிலும் புகை வண்டியிலும் காதில் கெண்ட் செட்டை மாட்டி, பாடல் கேட்டு ரசிப்பவர்களும், செல்போனை உலகமாக கருதுபவர்களும்  தான், இன்றைய உலகில் அதிகம். அதை தாண்டி, புற உலகில் வாழ்க்கையை தேடுபவர்கள் வெகு சிலரே.

பொருளாதாரம் சார்ந்து வாழும் சமூக நிலையில், பயணங்களை பொருளீட்டுதல் அடிப்படையில் களம் கண்பது இயற்கையே. ஆனால், அதை தாண்டி, வாழ்வியலை செம்மைப்படுத்துவதற்கான பாடமாக எடுத்து கொள்பவர்கள் சிலரே. அந்த படிப்பினை சதுரகிரி மலைப்பயணம், எனக்கு தந்தது என்றால் மிகையல்ல. (http://adakonjamnillupa.blogspot.in/2014/11/blog-post_65.html )

வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மட்டுமல்லாது, வெளி உலக தேடுதலும் முக்கியம். அதில் பயணமும் ஒன்று. “ நடிப்பு என்பது காசு கொடுத்து கற்று கொள்வதல்ல…. வெளியே நிறைய கொட்டி கிடக்கு… நாம தான் தேவையான அளவு எடுத்துகணும் “ என்று நடிகர் சந்தானம் ,ஜெய்யிடம் சொல்வார். அதை போல், பயணங்களிலிருந்து பெற்று கொள்ள கூடிய வாழ்வியல் புரிதல் தனி மனிதனை பொறுத்தது.


பயணங்கள் ஆத்மார்த்தமானவை: அலுவலகங்களிலும், இல்லங்களிலும் மனதை திறந்து யோசிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. பயணங்களிலாவது, சிறிது நேரம் மனதினை திறந்து வையுங்களேன்!!!!  

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார் 

Friday, December 25, 2015

கிரிக்கெட்டும் போலி பெண்ணடிமைவாதியும்

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால், கேட்பன் தோனியையோ அல்லது கங்குலியையோ புகழ்ந்து தள்ளுவோம்... அதற்கு பின்னால் உழைத்த பேட்ஸ்மேனையோ அல்லது பவுலரையோ நினைத்து பார்க்க மறந்து விடுவோம். அதை போல்...

தோற்றால், தோனி அல்லது கங்குலியை மட்டுமே விமர்சிப்போம். அதற்கு பின்னால் இருந்தவர்களை, நமக்கு வசதியாக மறந்து விடுவோம்.....
இதே மனநிலை, எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும் நீக்கமற நிறைந்தே இருக்கிறது. அதற்கு சமீப கால உதாரணம் சிம்புவின் பீப் பாடல்!!!! நிர்பயா பாலியல் தொல்லையும்!!!

வேத காலம் தொடங்கி, இன்று வரை பெண்களின் மீதான வன்முறைகளின் வடிவங்கள் மாறுகிறதே தவிர தன்மைகள் மாறவில்லை.

ஒர் தமிழ் பதத்திற்காக, சிம்புவை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது, நான் பெண்ணடிமைத்தனத்திற்கு ஏதிரானவன் என்ற போலித்தனத்தை தவிர வேறு எதுவும் இல்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, November 28, 2015

எது அழகு#3

“நான் அழகு” எனும் போது
உன்னில்
மனக்களிப்பை உண்டாக்கிய
நைய்யாடித்தனம் அழகு!!!

சுவையற்ற உணவானாலும்
சுவையான வாழ்க்கைக்காக
தலைவிக்காக
தலைவன் சொல்லும்
பொய் அழகு!!!

பெண்மையை கவர்வதற்காக
ஆண்மையின்
வெகுளித்தனமான
நாணம் அழகு!!!!

சுவையற்ற நகைக்காக
நகைச்சுவையென புன்னகைக்கும்
பெண்ணின்
வெகுளித்தனம் அழகு!!!!

மூத்தோர் முன்னிற்கையில்
ஆண்மையின்
அதிகார பேச்சிற்கு
பெண்மையின்
பொய்மையான பயம் அழகு!!!!

உள்ளத்தில்
ஊடல் இருந்தாலும்
புறத்தில்
கணவினை விட்டு கொடுக்காத
மனையாளின் அன்யோன்யம் அழகு!!!

குழவியின்
மழலை முகத்தை காண
பொறுக்க முடியாத பிரசவ வலியை
பொறுத்து கொள்ளும்

தாய்மை அழகு!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

எது அழகு#2

கடற்கரையிலே
யாருமான வேளையிலே
யாருமற்ற மனநிலையோடு
காதலர்களை படைத்த
இறைவனின் படைப்பியல் அழகு!!!!

தாய் பசுவினை பார்த்து
’அம்மே’ என்றழைக்கும்
கன்றின் தமிழ் அழகு!!!!

மக்களின் அறியாமையை
தேர்தலில்
வாக்குகளாக மாற்றும்
அரசியல்வாதியின் தொழிலழகு!!!

எத்தகையான
வெறுப்புகளை தாண்டி
நோயாளியிற்கு
பணிவிடை செய்யும்
செவிலியின் கடமை அழகு!!!!

எளியவனின்
வயிற்று அக்கினியை அணைக்க
அண்ணமிடும்
தாயின் ஈகை அழகு!!!!

வயிற்று பிழைப்புக்காக
உடல் மூடமானாலும்
சுமை தூக்கும் தொழிலாளியின்
தன்னம்பிக்கை அழகு!!!!

பெற்ற உணவினை
மற்றவரும் பெற்றிட
கரையும் காகத்தின்

பகிர்தல் அழகு!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

எது அழகு#1

மார்கழி மாத பனியில்
நடுங்கும் ஜந்துகளுக்கு……..
ஞாயிறு தரும்
வெப்பம் அழகு!!!!!

சூரியன் தலை சாய்ந்து
கதிரவனை வரவேற்கும்
சூரியனின்
செங்கதிர்கள் அழகு!!!!!

முழுமுதிர் நிலவில்
காதலியின்
முக அழகினை காட்டும்
மதியின் ஒளியழகு!!!!!

தன் குஞ்சுகளிடம்
இரை தேட
விடைபெற்று செல்லும் பறவையின்
கிச்சுக்குரல் பேச்சழகு!!!!

தாயை தேடி
தவழ்ந்து வரும்
சின்ன குழந்தையாம்
ஆற்றின் வேகம் அழகு!!!!

எங்களுக்காக
உங்களுக்கு சண்டையிட்டு
கண்ணீர் சிந்தும்
மின்னல் ஒளி அழகு!!!

இனப்பெருக்கத்திற்காக
மதுவை சிந்தி
வண்ணத்துப்பூச்சியினை வரவழைக்கும்
மலரின் வண்ணம் அழகு!!!!

இதழோடு
இதழ் சேர துடிக்கும்
சூரியகாந்தி பூவின்
பகலவனின் மீதான

மோகம் அழகு!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, November 26, 2015

ஈழம்- கவிதை

பலிக்கூடம்
ஆம்….. பலிக்கூடம் தான் அது
உறுப்புகளை பிரித்தறிய முடியாமல்
ஓன்றாகவே கொத்துகின்றன
பருந்துகளும் காகங்களும்…..

பொட்டல் காடுகளில்
தினம் தினம் தீபாவளி
நரகசுரனை
கொன்றதற்காக அல்ல….
ஈன தமிழனின்
இன படுகொலைக்காக…….

தாயின் மார்பு கூட
குருதியாகவே சிந்துகிறது
குழவிக்கு…….

காமனின் பார்வையில்
விரயம் ஆகாத
விவாகங்கள் தினந்தோறும்……


ராவணின்
காம மயக்கத்திற்கு
இலங்கையை அழித்த
அனுமானின் தீப்பொறி
இன்றும்

அழித்து கொண்டிருக்கிறது……..
(ஈழம் இறுதி கட்ட போரின் போது எழுதியது)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, November 23, 2015

சித்த மருத்துவத்தில் அறிவியல் வளர்ச்சி-நீயா நானா

சுமார் 6 மணிநேரம் நடந்த விவாதத்தினை, ஒரு மணி நேரமாக கத்திரித்து விஜய் டிவி ஒளிப்பரப்பியது. எல்லா டிவிக்களும் தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்காக, பல கத்திரிகளையும், பல நாடகங்களையும் நடத்துவது உண்மை. இந்த காரணத்திலே, ” நான் நீயா நானாவில் கலந்து கொள்வதில்லை “ என்று உளவியல் மருத்துவர் ரூத்ரன், தனது முக நூலில் தெரிவித்து இருந்தார். இந்த நிதர்சனத்தை யெல்லாம் தாண்டி தான், விவாத்தை காண வேண்டியுள்ளது.

” பொது மக்களின் நல்லதோரு புரிதலை ஏற்படுத்தும் ” என்ற மனநிலையோடு, நேற்றைய இரவு பொழுது கழிந்தது. சமூக பார்வையாளர்கள் மத்தியில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தியதாக உணர்கிறேன். ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது, சித்த மருத்துவர்களின் பார்வை எதிர்மாறான நிலையே உள்ளது.

” சித்த மருத்துவன் என்ற புரிதலை தாண்டி, சித்த மருத்துவத்திடம் சமூகம் என்ன எதிர்ப்பார்க்கிறது ”  என்ற தெளிந்த நிலையும் தேவை என நினைக்கிறேன். இந்த புரிதலை கொண்டததால் தான், எதிர்தரப்பு கேட்ட வினாக்களுக்கு சிவராமன் சார், திருநாராயணன் சார் மற்றும் குட்டி ரேவதி மேடம் போன்றவர்கள் தெளிவான பதிலை அளிக்க முடிந்தது. பொதுவாக சித்த மருத்துவன் என்பவன், சமூகத்தோடு ஒட்டி வாழாத, சித்த மருத்துவன் என்ற சுய கர்வத்தோடு வாழ்வதாகவே நினைக்கிறேன். இதுவே சித்த மருத்துவனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதை தடுக்கிறது என்று நினைக்கிறேன்(இதில் மாறுபாடுகள் இருக்கலாம்). 

” மூட்டி வலிக்கு மருந்து இல்லை என்று சொல்லிட்டாங்க??”

” சிறுநீரக செயலிழப்பிற்கு மருந்து இல்லை என்று சொல்லி விட்டார்கள்??”,

“ அறிவியல் வளர்ச்சி இல்லாத மருத்துவம் சித்த மருத்துவன்”

” ஹார்ட் அட்டாக் கல்லுப்பே போதும்???”

போன்ற உரையாடல்கள், பொது மக்களிடம் சென்று அடையும் போது, சித்த மருத்துவத்தின் மீது அவநம்பிக்கை எழும் என்று நினைக்கிறார்கள். அதை நானும் ஒத்து கொள்கிறேன். அந்த அவநம்பிக்கை மக்கள் மனதில்,  சில வாரத்தை கடந்து நிற்காது; மறந்து விடுவார்கள்.

சித்த மருத்துவத்தில் அனைத்திருக்கும் மருந்து உண்டு என்று நம்புவதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. உங்களிடம் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது என்பதை உண்மையென்றால், அதை சமூகத்தின் முன் முறையான பிண்ணனி தகவல்களோடு எடுத்து சொல்லுங்கள். அதை சொல்லாமல், என்னிடம் மருந்து உள்ளது!!மருந்து உள்ளது!!! என்று நீங்களே சொல்வது எவ்வளவு நகைப்பிற்கு உரியதாக இருக்கும்.

சித்த மருத்துவத்தின் limitation பற்றி, நாம் தெளிவாக தெரிய வேண்டியது அவசியம்

சித்த மருத்துவத்தில் உள்ள பிரச்சனைகளை இளங்கோ கல்லனை தெரிந்த அளவிற்கு, நம்மில் எந்தளவு தெரிந்து இருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுப்பும் நிதியை நாம் எந்தளவிற்கு, உபயோகம் செய்திருப்போம். நிதியாண்டின் கடைசி நாளில் செலவு செய்ததாக  கணக்கு காட்ட மட்டும், மாநாடு நடத்திய அவலங்களை எங்கு போய் சொல்வது??

பி ஏ கிருஷ்ணன் கேட்ட yes or no போன்ற கேள்விகள், விவாதங்களில் நிச்சயமாக தவிர்க்க பட வேண்டியவை. அவற்றின் பதிலை வைத்து, ஒரு மருத்துவத்தின் மீதான விவாத்தை நகர்த்தி செல்வது அபத்தமானது. அந்த கேள்விகளை, சிவராமன் நிதானத்துடன் அருமையாக  .கையாண்டார்.

தேள்கடிக்கு ஒத்த மருந்துகளை சித்த மருந்துவர்களிடம் ஏதிர்பார்க்க முடியுமா?? என்று ஒருவர் கேட்டார். ” நிச்சயம் முடியாது ” என்று சட்டென்று சொல்லி இருப்பேன். பரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையை புரியாமல் கேட்கப்பட்ட கேள்வி என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நிலப்பகுதிகளுக்கு கிடைக்கும் மூலிகைகளை பொருத்தே, ஒவ்வொரு நோயிற்கான மருந்துகள் தீர்மானிக்க படுகின்றன. எடுத்துகட்டாக, சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு vitex agnus castus என்ற ,மூலிகை மருந்து வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்ட மூலிகை நமது ஊரில் கிடைக்காது. எனவே, நொச்சியை பயன்படுத்தி, அதே நோயினை குணப்படுத்தலாம்: குணப்படுத்தியும் இருக்கின்றனர்.

நிச்சயமாக மருந்து செய்முறைகளையும், மூலிகை மற்றும் தாது சரக்குகளையும் ஒழுங்கு முறைப்படுத்த அரசு ஆவணப்படுத்த வேண்டும்.
எழுத்தாளர்கள் பி.ஏ கிருஷ்ணன், ஆழி செந்தில்நாதன் மற்றும் மருத்துவர் முருகன் வைத்த கருத்துகளை முழுவதும் புறக்கணிக்க இயலாது. நவீன உலகத்திற்கு ஒட்டத்திற்கு ஏற்ப, நமது மருந்துகளையும் அறிவியலுக்கு உட்படுத்த வேண்டும். அதை விடுத்து, சித்த மருத்துவத்தை ஏன் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்கேள்வியினால் புண்ணியமில்லை. அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை மருத்துவர் சிவராமன் தெளிவாக எடுத்துரைத்தார்.  

இந்தியாவில் ஆராய்ச்சி துறைக்காக செலவிடப்படும் தொகை GDP யில் 1 சதவீத்த்திற்கு குறைவு. அப்படி இருக்கையில், அறிவியல், விஞ்ஞானம், வானியல் ஆகிய துறைகளை தாண்டி சித்த மருத்துவத்திற்கு மிக சொற்ப பணமே கிடைக்கும். அதை கொண்டு எவ்வாறு ஆய்வு செய்வது??? தனியார் நிறுவனங்களுடன் அரசும் கூட்டு முயற்சியாக ஆய்வு செய்ய வேண்டும்.

அறிவியல் பூர்வமான ஆய்வுகளை சித்த மருத்துவர்களால் மட்டும் எடுத்து செல்ல இயலாது. மற்ற துறை வல்லுனர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம். அதோடு மட்டுமல்லாமல், நவீன ஆய்வுகளுக்கு ஏற்ப நமது உள்கட்டமைப்பு வசதிகள் பெருகவில்லை.

சித்த மருந்துகளை அறிவியலுக்கு உட்படுத்துவதில் உள்ள கடினத்தை அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர் குறைந்த பட்ச புரிதலை, இந்த நீயா நானா ஏற்படுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

சித்த மருத்துவம் என்ற தேரினை சித்த மருத்துவர்கள் எனும் வடத்தினால் மட்டும் இழுத்தால் நகராது. சித்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஆகிய வடங்கள் அனைத்தும் சேர்ந்து இழுத்தால் மட்டுமே சித்த மருத்துவம் வள(நக)ரும்.

 உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Sunday, November 22, 2015

மனித சிந்தனை- அறிவுபூர்வமனதா? உணர்வு பூர்வமனதா?

மனிதன் எப்போதும் ஒரு விஷயத்தை, இரண்டு கோணங்களில் யோசிக்கிறான். ஒன்று உணர்வு பூர்வமானது(உளம் சார்ந்தது). மற்றொன்று அறிவு பூர்வமானது(பகுத்தறிவு- கல்வி சார்ந்தது ).

படிக்காத மக்கள் பெரும்பாலும், உணர்வு பூர்வமானாக யோசிக்கின்றான். ஆனால், படித்தவன் இரண்டையும் போட்டு குழப்பி கொள்கிறான். எனினும் பல இடங்களில் அறிவு பூர்வமாக யோசித்து, தான் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என போலி வேஷத்துடன் வாழ்கிறான்.

ஊழல் குற்றச்சாட்டுகளில், அரசியல்வாதிகள் தண்டனை பெறும் போது, அதை உணர்வு பூர்வமாக கிராம புற மக்கள் அணுகும் போது, ஊழலை மக்கள் ஏற்று கொள்கிறார் என்று எடுத்து கொள்கிறோம். படித்தவர்களும், தன்னுடைய கட்சித் தலைவரும் தண்டனை பெறுவதை, அதே உணர்வு பூர்வமாக அணுகின்றனர். மாற்று கட்சியினரும், மற்ற படித்தவ்ர்களும் அறிவு பூர்வமாக அணுகின்றனர்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 250 மக்கள் இறந்த போது, கடுமையான மனநிலையொடு குற்றவாளியை அணுகி இருப்போம். ஆனால், அவரது உயிரையே எடுக்க வேண்டும் என்றால், அதையும் உணர்வு பூர்வமாகவே மனம் அணுகிறது.

அப்துல் கலாம் இறப்பிலும் இதே மனநிலையே தொடர்கிறது. ஒருவருடைய மரணத்தில், அறிவு பூர்வமாக யோசிக்க வேண்டியதில்லை. ஆனால், சிலரது வக்கிர மனம் அறிவுப்பூர்வமாக யோசித்து குறை கூறி கொண்டிருக்கிறது.

போலியான வாக்குறுதிகளை தந்து, பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டி, கட்டாயப்படுத்தி கடையெடுப்பு நடத்தி போலியான தலைவனாக முன்னிறுத்தும் பிம்பத்தையே அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். கட்சி தலைவர்களின் போலியான பிம்பத்தை விடவா..... அப்துல் கலாமின் உண்மையான பிம்பம் போலியானது???? சற்று சிந்தியுங்கள்!!!

உணர்வுகளை விற்று, அறிவை முன்னிறுத்தாதீர்கள்.....

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


காதலும் அளவுகோலும்

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற விதி, காந்தத்திற்கு மட்டுமல்ல. மனித வாழ்வியலிலும், ஆண்- பெண் ஈர்ப்பை போலவே உள்ளது. இன கவர்ச்சி என்ற பெயரில் ஹார்மோன்கள் செய்யும் அற்புதங்கள் அதிகம். காதல் என்ற வார்த்தை கூட போதை தருவதாக அமைந்து விட்டதில் ஆச்சரியம் ஏதுவுமில்லை.

காதலை எது தீர்மானிக்கிறது???  என்ற கேள்வி, நம்முள் எப்போதும் ஒலித்து கொண்டிருக்கிறது. ஹார்மோன் என்று ஒற்றை வரியில் அறிவியல் பதில் சொன்னாலும், அதன் தாண்டி சில விஷயங்களை ஆராய்வோம்.

பெண்ணின் மீதான ஒரு ஆணின் காதலை முன்னிலைப்படுத்துவதாக, பெரும்பாலும் பெண்ணின் உடல் அழகு அமைகிறது. அந்த காதலை நிலைநிறுத்தப்பட்டு அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கு, பல்வேறு காரணங்களை கூறலாம். பெண்ணாவள் அழகு தேவதை என்ற காப்பிய காலத்து அளவுகோல்களே, இன்று வரை ஆணின் காதலுக்கு முதற்காரணமாகிறது.

ஆணிற்கு வீரமே அழகு ”  என்ற அளவுகோல் பன்னெடும் காலமாக சமூகத்தில் உலாவி வருகிறது. தன்னிடம் இல்லாத ஒன்றை நோக்கிய மனதின் பயணம், பெண்ணிற்கு அழகு என்ற அளவுகோலினால், ஆணினால் ஈர்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், பெண்ணின் காதலை தலைகீழாகவே உள்ளது. பெண்ணடிமை சமுதாயத்தில், பெண்ணுக்கு அழகு முக்கியமில்லை. அதை தாண்டிய, தன்னுடைய சுய பாதுகாப்பே முக்கியம் என்று பெண் எண்ணுகிறாள். அதற்கான ஆணையே தேடுகிறாள் (பொருளாதார பாதுகாப்பு சேர்த்து). ஆணின் வீரமே அழகு ”  என்ற சமூக அளவுகோல், பெண்ணிற்கு ஈர்க்கப்படுகிறது.

காதலை வெளிப்படுத்துவதற்கான ஆணின் சமூக சுதந்திரம், பெண்ணிற்கு நிச்சயம் இல்லை. சுய பாதுகாப்பு என்ற பெண்ணின் அளவுகோலை ஆராய்வதற்கு காலம் தேவைப்படுகிறது. அதனால் தான், பெண் காதலை ஏற்று கொள்வதற்கு தாமதம் ஆகிறது. ஆனால், ஆணிற்கு உடலழகை ஆராய்வதற்கு, நிமிட நேர புன்னகை போதும்.

எனவே காதலீப்பீர்!!!
ஆண்-பெண் இன கவர்ச்சி மட்டுமே காதல் அல்ல
உள பூர்வமான காதலை,,,

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Saturday, November 21, 2015

ஊதிய குழு பரிந்துரையும் விலைவாசி ஏற்றமும்

மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதிய குழு தனது அறிக்கைகளை , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிடம் அறிக்கையை தாக்கல் செய்தார். சுமார் 24 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக 18,000 முதல் அதிக பட்சமாக 2.5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன். இதன பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றால் போல, அமையவில்லையென கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் , இந்த ஊதிய உயர்வு மிகவும் குறைவு என வருத்தம் தெரிவித்து உள்ளன.

CPI குறியீட்டு எண்கள் 4 சதவீதம் அளவில் உள்ளன. ஆனால் WPI குறீயிட்டு எண்கள் பல மாதங்களாக மைனஸாகவே உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி செய்த போது இருந்த பணவீக்கம், இப்போது வெகுவாக குறைந்து உள்ளது. ஆதலால் ஊதிய உயர்வும் குறைவாகவே உள்ளது.

சங்கங்களின் பேச்சுகளை கேட்டால், பொதுமக்களின் முகங்களில் நிச்சயமாக கோபக்கனலை பார்க்கலாம். ஏனெனில் இந்தியாவின் வாழும் ஒவ்வொரு இந்தியனின் நிலையும் மோசமாகவே உள்ளது. ஏறத்தாழ 90 சதவீத மக்கள் முறைப்படுத்தப்படாத தொழிலில் தான் ஈடுப்பட்டுள்ளனர். அதிலும் விவசாயிகள், இந்தியாவில் சுமார் 60 சதவீதமாக உள்ளனர். அவர்களின் மாத வருமானம் 5000 ரூபாய் என சமூக பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது. கடந்த நிதியாண்டின் படி, இந்தியனின் தனிநபர் வருமானம் 88,000 மாகவே உள்ளது.

ஊதிய குழு பரிந்துரைகளை  நிறைவேற்றும் பட்சத்தில், விலைவாசி ஏற்றம் இன்னும் அதிகமாகும் என்பது  மட்டும் உண்மை. இதனால், பொதுமக்கள் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். விலைவாசி ஏற்றம் என்பது இரண்டு காரணங்களினால் ஏற்படும். ஒன்று பொருளின் தேவை அதிகமாகும் போது விலையேற்றம் நடக்கும். இரண்டு பணம் புழுக்கம் அதிகமாகும் விலைவாசி அதிகமாகும். ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது , இரண்டாவது வகையினால் நிச்சயமாக பொருள்களின் விலை ஏறும் என்பது மட்டும் உண்மை.

பார்த்து சூதனாமான இருங்கா மக்களே!!!
அம்புட்டு தான் சொல்லிட்டேன்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
.



Thursday, November 19, 2015

மருத்துவனின் பலிகடா நோயாளியா???

ஒவ்வொரு செயலையும், செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் நோக்கங்களை தெளிவான தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் வெற்றிக்கனியை எளிதாக எட்டி பிடிக்க முடியும். பல நேரங்களில், ” மற்றவர்கள் செய்கிறார்கள், நாமும் செய்து பார்ப்போம்….” என்று ஒழுகற்ற மனநிலையோடு தொடங்கிறோம்.

கல்வியின் நோக்கம் தான் என்ன?? ஒரு மனிதன் செம்மையாக வாழ்க்கை நடத்துவதற்கான வழிமுறைகள் கூறுவது எனலாம். ஆனால், நாம் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வதே என்று எண்ணி கொண்டிருக்கிறோம். பிறப்பின் நோக்கத்தை கண்டவர்கள் சித்தர்கள் ஆனார்கள். அந்த அளவிற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும், நோக்கத்தை தெரிந்து கொண்டு செயல் புரிவது  நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் தான் செய்யும் தொழிலின் நோக்கத்தையாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நான் மருத்துவனாக, ” நோயாளியின் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, படித்த சித்த மருத்துவத்தின் வழி தீர்வு காண முயல வேண்டும். இல்லையெனில் வேறொரு மருத்துவத்தில் நல்ல தீர்வு கிடைக்குமெனில், அந்த மருத்துவ முறைக்கு அனுப்பி விட வேண்டும் “ என்று எண்ணி செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். ஏனெனில் நோயாளிக்காகவே நான் சித்த மருத்துவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறனே தவிர, எனக்காக எந்த நோயாளியையும் பிறக்கவில்லை.

இன்றைய மருத்துவ உலகில், நடைமுறைகள் வெகுவாக மாறி விட்டது. நோயாளிக்காக மருத்துவன் என்ற நிலை மாறி, மருத்துவனுக்காக நோயாளி வாழ்வதும் பிறப்பதுமாக மாறி விட்டது  போல் தோன்றுகிறது. ” நான் கோடிகளை கொட்டி மருத்துவனாகி விட்டேன். ஆதலால், எனக்கு சிறு நூறுகளை பணிக்கொடையாக தர வேண்டும். நான் பல நூறு கோடிகளை போட்டு மருத்துவமனை கட்டி விட்டேன். ஆதலால், நோயாளி நிச்சயமாக அறுவை சிகிச்சைகளையும், பரிசோதனை செய்தாக வேண்டும் “ என்று நோக்கம்  மாறி விட்டது.

ஒவ்வொரு மருத்துவ முறைக்கு சில சிறப்பு அம்சங்களும் சில குறைகளும் இருக்கும். எந்தவொரு மருத்துவ முறையும், நோயாளிக்கு முழுமையான தீர்வை கொடுத்து விட முடியாது. எனவே நோயாளிக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முறையே (integrated system ) சிறந்த தீர்வாக இருக்கும். அதை விடுத்து, மற்ற மருத்துவ துறையை எதிரி போல் பாவிப்பது கடுமையானது. சீனாவில் இருப்பதை போல், பராம்பரிய சீன மருத்துவத்தோடு கூடிய ஆங்கில மருத்துவ முறை சிகிச்சை முறை இந்தியாவில் தோன்ற வேண்டும்.

அதெல்லாம் புரியாமல், என்னுடைய மருத்துவ முறையே சிறந்தது என்ற வெட்டி வேதாந்தகள் பேசுவதை நிறுத்த வேண்டும். மற்ற மருத்துவ முறைகளை போலிகள் என்று வாதிடுவது, மருத்துவ துறையை பணமாக மாற்றும் முயற்சியே தவிர வேறொன்று இல்லை. மருத்துவ படைப்பின் இலக்கணமே தவறாகி விடும்.

மருத்துவ படிப்பின் போது, மற்ற மருத்துவ துறை பற்றிய விவரங்களை கற்பிக்கப் பட வேண்டும். கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். அனைத்து மருத்துவ துறைகளும் இணைந்து, வெளிப்படையான கருத்து பரிமாற்றங்களோடு, ஒவ்வொரு நோயிற்கு வழி முறைகளை உருவாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.     
ஏற்கனவே இந்திய மருத்துவ துறையின் புள்ளி விவரங்கள் பல் இளிக்கின்றன. இந்தியன் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் 20 முதல் 30 சதவீதம் வரை மருத்துவதுறைக்காக செலவிடுவதாக கூறுகின்றனர். அதிலும் 70 சதவீதம் மக்கள் , தன்னுடைய சொந்த செலவிலே மருத்துவ சிகிச்சைகளை பெறுகின்றன. மருத்துவ துறைக்கு, 2014-15 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் அளவு நிதியே இந்தியா ஒதுக்கி உள்ளது. உலகின் அனிமீயா பாதிப்பில் இந்தியாவில் தான் பெருமளவு உள்ளனர்.

இல்லெயெனில், மருத்துவ துறை வளர்ச்சியடைந்தாலும், இந்தியா நோயாளி நிலை கவலைகிடமாகவே இருக்கும். இரண்டு திராவிட ஆட்சியின் லாபியினால் சென்னை மக்கள் வெள்ள நீரில் தத்தளிப்பதை போல், நோயாளிகள் மருத்துவர்களுக்கு இடையே பலிகடா ஆக்கப்படுவதை யாராலும் தடுக்க இயலாது.

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
  


Saturday, November 14, 2015

பெண் கல்வியும் பொருளாதார மேம்பாடும்

பெண் கல்வியே, பெண்ணடிமைத்தனம் விடுப்பட்டு விடுதலை அடைவதற்கான வழி என்றார் பெரியார். அந்த போராட்டம், இன்றைய நிலையில் பெரிதளவு மாற்றத்தை ஏற்படுத்து இருக்கிறது எனலாம். கல்வியினால் வேலைவாய்ப்பு பெற்று, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்து இருக்கிறது. இந்திரா நூயி, அருந்ததி பட்டசாரியா, உஷா சங்குவான் போன்ற பெண்கள் அதிகாரத்தின் உயர்நிலையில் இருக்கின்றனர். செபி கூட, கம்பெனிகளில் பெண் இயக்குனர்கள் நியமனத்தை கட்டாயப்படுத்தி உள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றதன் மூலம், பெண்ணடிமைத்தனம் நீக்கப்பட்டு விட்டது என்று கூப்பாடு போட முடியாது. சிறிதளவு பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை மட்டுமே தந்திருக்கிறது. முழு சுதந்திரத்திற்கு, சில காலம் கடந்து போக வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் வேலைக்கு போகிற பெண்கள், அதற்காக அதிகளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.

பெண்கள் வேலைக்கு செல்கிறார். அதனால், பெண்களுக்கு முழு பொருளாதார சுதந்திரம் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியவில்லை. இன்றும் பொருளாதார விஷயத்தில் ஆண்களை சார்ந்த நடக்க வேண்டி உள்ளது என்பதை நீயா நானா நிகழ்ச்சி தெளிவுப்படுத்தியது.

மேற்கண்டதை விவாதிப்பதற்கு முன்னர், சில விஷயங்களை ஆய்வோம். இந்திய சமுதாய கட்டமைப்பில், ஆண்கள் வருமானம் ஈட்டுபவர்களும், பெண்கள் வீட்டை நிர்வாகிப்பவர்களும் உள்ளனர். இதனால் தான், ஆண்களின் மீதான பொறுப்பு பெரிதாக பேசப்பட்டது (அது ஒரு வித மன அழுத்தமும் கூட). இதனால் தான், ஆண்கள்  எப்போதும் பொருளாதார நிலை சார்ந்தே யோசிக்க வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 ஆனால், பெண்களின் மனநிலை, பொருளாதாரம் சாராதாகவே இருந்தது.
அப்படிப்பட்ட நிலையில், இன்றைய நிலையில் பொருளாதார சுதந்திரமும் கேள்விக்குறியாகவே உள்ளது. விலைவாசி உயர்வு என்ற காரணத்தினால் , இருவரின் சம்பளமும் குடும்ப செலவுகளுக்கு பயன்படுகிறது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதனைத் தாண்டி நம்முடைய தேவைகளை அதிகரித்து கொண்டோம் என்பதை மறுக்க இயலாது. 
பெண்களின் கல்வியை வைத்து நடக்கும் பொருளாதார சுரண்டலையும் சொல்ல வேண்டிய சொல்ல வேண்டிய அவசியமாக உள்ளது, பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், பெண்களே பணியமர்த்தப்பட்டு, குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது.

பெண்கள் வேலைக்கு செல்லுவதால், அதற்கு இணையான கணவனை தேடவே, இந்த சமுதாயம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில், ஏற்கனவே உள்ள கணவன் சம்பளத்துடன் கூடுதலாகவே, பல நேரங்களில் அமைகிறது. மாறாக, ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையினை முற்றிலும் தங்குவதாக அமையவில்லை. இதனால், சமூக பொருளாதார ஏற்ற தாழ்வு அதிகரிக்குமே தவிர, சமூகத்தில் பொருளாதார நிலைக்கு வித்திடாது.

எப்படிப்பட்டதாய் அமையினும், பெண் கல்வி சமூகத்தில் பெரியதோரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டும். (அதற்கு பிறகு, ஆண் அடிமைத்தனம் போராட்டம் ஆரம்பிக்கும்- வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்)  

||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||||||
|||||||||||உங்களை போல் ஒருவன்|||||
||||||||||||||||||||வேதை குமார் |||||||||||