Friday, July 31, 2015

மரமும் உணர்வுகளும்

இந்த இரண்டு படங்களை பாருங்கள். ஒன்றில், தென்னை மரமும் மாமரமும் ஒரு இடத்தில் உற்பத்தியாகி வெவ்வேறு திசையை நோக்கி வருகிறது. மற்றொன்று, ஒரே நேர்கோட்டில் வைக்கப்பட்டவை. ஆனால், அதுவும் வெவ்வேறு திசையை நோக்கியே பயணிக்கிறது.
இதற்கு காரணம் என்ன??? சூரிய ஒளியை நோக்கிய சார்பசைவு இயக்கம்(phototrphism) ஆகும். 

தாவரங்கள், ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. ஆனால் ஒளி, நீர், புவியீர்ப்பு விசை போன்றவற்றை நோக்கி தாவரத்தின் பாகங்கள் அசையும். நீரினை நோக்கி செல்வது(hydrotrophism) மற்றும் புவியீர்ப்பு விசையை நோக்கி செல்வது(geotrophism) போன்றவை வேர்களுக்கு உள்ள குணங்கள்.

பொதுவாக நம் மனதில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என்ற எண்ணத்திலே இருப்போம். ஆனால் தாவரங்கள் ஒரறிவு உடையவை. அதாவது உறக்க அவத்தை உடையவை என தத்துவ நூல்கள் கூறுகிறார். உணர்ச்சியை உணர்ந்து செயல்படுபவை. இதானல் தான் தொட்டாற்சிணுங்கியும் சுருங்கிறது. இதற்கு எடுத்து காட்டுகளாகத்தான் ஒளி, நீரினை நோக்கி இயங்குகிறது.

இந்த கருத்தினை, இந்திய தாவரவியல் அறிஞர் சி.போஸ் அவர்கள், சிஸ்மோகிராப் என்ற கருவியின் மூலம் நிருபித்தார். சங்க கால நூலாகிய தொல்காப்பியத்தில்,
புல்லும் மரமும் ஒன்றறி வதுவே
பிறவும் உளவும் அக்கிளை பிறப்பே
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
என்று குறிப்பிட படுகிறது.

இதனால் தான், வீரசைவர்கள் மரங்களில் இருந்து கனிகளை பறிக்கமால், வீழ்ந்த பழங்களை உண்கின்றனர். சமண சமயமும் தாவரங்கள் உற்பட்ட அனைத்திற்கு உயிர் உண்டு என குறிப்பிடுகிறது.

தாவரங்களினை உலகில் உள்ள உயிர்களில் ஒன்றாகவே கருதுவோம். அவற்றை வெட்டுவது, கொலை குற்றமாகவே கருதுவோம். அப்துல் கலாமின் கனவினை நினைவாக்க, மரத்தினை நட்டு, நாமும் வளர்ப்போம்.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!!!
இல்லையேல்....
இயற்கை நம்மை தனித்து அனுப்பி விடும்....
மேல் உலகத்திற்கு....

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, July 27, 2015

பெண் சுதந்திரமும் சமூக வலைதளமும்

பொது உலகில் பெண் சுதந்தரம் எந்தளவிற்கு இருக்குமென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பெண்களின் கருத்து சுதந்தரம் பெரிதும் மதிக்கப்படுகிறது.

வீட்டில் அம்மா, மனைவி, அக்கா..... இப்படி யார் சொன்னாலும் கேட்காத ஆண்மகன், சமூக வலைதளங்களில் மட்டும், முகம் தெரியாத முகப்புத்தகத்தில் உள்ள பெண்ணிற்கு, வாழ்த்துகளையும், லைக்குகளை போடுகிறான்; அவர்களை சொல்வதை வழி மொழிகிறான். இதையே வீட்டிலும் கேட்டு நடந்தால், நன்றாக தான் இருக்கும்.

பெண்ணின் மீதான ஆணின் இனக்கவர்ச்சியே இதற்கு காரணம். ஆனால், இந்த கருத்து சுதந்தரத்தில் போலி கவர்ச்சியே உள்ளது. இதையெல்லாம் தாண்டி, சமூக வலைதளங்களில் நடைபெறும், பெண்களின் மீதான வக்கிரங்களும் அதிகம்.

நானும், ஒரு பெண்ணின் பெயரில், போலியான முகப்புத்தக அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு முன் உருவாக்கினேன். அப்பப்பா முடியல..... ஆண்மகனின் தொல்லகள்.... ஒரு வாரத்தில் 1000 நண்பர்கள். 1000 பாலோயர்கள்... மார்க் பார்த்தார்..... ஏதோ கேள்விகளை கேட்டு என்னை முடக்கி விட்டார்..... குட் மானிங் க்கே 50 லைக் வருமுன்னா பார்த்துகங்களேன்!!! இன்பாக்ஸ் தொல்லைகள் வேற.....

பெண்ணிற்கு கருத்து சுதந்திரம் இருந்தாலும், பாலியல் தொடர்பான வக்கிரங்கள் அதிகம்... பெண்கள், முகப்புத்தகத்தை கவனமாகவே உபயோகிப்பது நல்லது...

உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Tuesday, July 21, 2015

உலக யோகா தினமும் அரசியலும்

இன்று உலகம் முழுவதும், உலக யோக தினம் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேதா என்ற பிரிவினை தாண்டி, இந்தியாவின் பாரம்பரிய(பண்பாடு) கலையினை, உலக நாடுகளனைத்தும் ஏற்று கொண்டுள்ளன. இது மகிழ்ச்சியான செய்தி என்பதில் சிறிதும் ஐயமில்லை. சித்த மருத்துவன் என்ற முறையிலும், அதை பயின்றவன் என்ற முறையிலும், யோகாவை உலக நாடுகளில் புகழடைய செய்த இந்திய அரசிற்கு, எனது நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

யோகா என்பதற்கு இணைதல்என்பது நேரடியான பொருள். அதாவது ஆன்மாவானது, இறைவனுடன் இணைந்து இரண்டற்ற இறவா நிலையை அடைய கூடியது ஆகும். அதனை வெறும் இருக்கை நிலை(posture) என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

யோகா என்பது, அஷ்டாங்க யோகம் என்றே நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதாவது இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிராத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு படி நிலைகளை உடையது. இந்த படி நிலைகளில், ஆசனம் பிராணயாமம், தியானம் என்பவைகளே மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.

திருமூலரும் திருமந்திரத்தில் யோக நிலைகளை தெளிவாக விளக்கி உள்ளார். அதே போல, பதஞ்சலி முனிவரும் யோக நிலைகளினை விளக்கி உள்ளார். இதில் எது, அரசாங்கத்தினால் முன்னிறுத்தப்படுகிறது? என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக, பதஞ்சலி முனிவருடையதே.  இருவரும் யோக நிலையில் நன்கு கற்றுணர்ந்தவர்கள் என்பதினால், அடிப்படையில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில், இரண்டு நிலைகளினையும் ஒப்பிட்டு வெளிகொணர்ந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். யோகாவினை ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி என்று மட்டும் என்று வெளிகொணரப்படுவது, எந்நிலையிலும் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல.

யோகா மதம் சார்ந்தது என்று, எதிர்கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது நிச்சயமாக, இந்து மதத்தின் ஒரு பகுதி தான். ஒம் என்ற பிராணவ மந்திரமும், சூர்ய நமஸ்காரமும் மூஸ்ஸிம் மற்றும் கிருத்துவ மதம் சார்ந்தவர்களுக்கும் மன சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இதுவும் எதார்த்தமான ஒன்று தான்; அதுவும் மறுப்பதற்கில்லை. வெளி நாடுகள் பலவற்றில்(மூஸ்ஸிம் நாடுகளும் சேர்த்து) யோக பயிற்சி கற்பிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உள மற்றும் உடல் பயிற்சியாக, யோக பயிற்சியைனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ப, யோக பயிற்சியின் சில வடிவங்கள் மாற்றப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. (ஷில்பா ஷெட்டி யோகா உள்பட)

இறைவனை அடைவதற்கான இந்து மதத்தின் ஒரு வழியே யோக பயிற்சியாகும். அதில் சில படி நிலைகளினை, நாம் உள மற்றும் உடல் பயிற்சிகளுக்காக எடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது. அதே போல், ஒவ்வொரும் மதமும், இறைவனை அடைவதற்கான பல படி நிலைகளினை வகுந்துள்ளது. இவ்வாறு அனைத்து மதங்களுமே, உள(அக)  வளர்ச்சிக்கான படி நிலைகளையே கூறி வந்துள்ளது. தொழுகை நடத்துவதும், ஜெபம் பண்ணுவதும் நிச்சயமாக, ஆசன நிலையில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

யோக பயிற்சியை யாரிடம் கற்பது? என்பது, அடுத்த  மிகப்பெரிய பிரச்சனை. ஏனெனில், இன்றைய நிலையில், அனைத்தும் வணிகமாக மாறி விட்ட நிலையில், யோக பயிற்சியும் தப்பில்லை. இதுவும் எதிர் கட்சிகளினால், முன் வைக்கப்படுகிற மிக முக்கியமான குற்றச்சாட்டு. இதில் உள்ள உண்மையை மறுப்பதற்கில்லை. தன்னை யோக பயிற்சியில் அறிவந்தவர் என்று முன்னிறுத்தப்படுவர்கள் அனைவரும், வணிக நோக்கத்தையே முழு முதற்பொருளாக கொண்டவர்கள். அவர்களுடைய யோக பயிற்சிக்கு, உண்மையான யோக பயிற்சிக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளதை, கற்றுணர்ந்தவர்களால் நிச்சயமாக உணார்ந்து கொள்ள முடியும்.

யோக பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம், யோக பயிற்சியை மேற்கொள்ளலாம். நோயை தீர்க்கும் யோக பயிற்சிகள், பொதுவான உடல் மற்றும் உள நிலைக்கான யோக பயிற்சிகள் என்று பயிற்சிகள்  பலவுள்ளன. இதில் உங்களுக்கு எது என்பதை முடிவு செய்து, பயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகத்தை தவறாக பயிற்சி செய்யப்பட்டு, மன வேறுபாடு அடைந்த நபர்களையும், நான் பார்த்து இருக்கிறேன். ஆகவே, உங்கள் குருவை தெளிவாக தேர்ந்தெடுங்கள்.

இந்திய அரசு, யோக பயிற்சி முழுவதும், மதம் சார்ந்து எடுத்து செல்லுமானால், அது நல்பயனை நிச்சயமாக தந்து விடாது. இந்திய பண்பாட்டை குலைக்கும் செயலாகவே அமையும். இந்துவத்துவ எண்ணம் கொண்ட பாஜக கொண்டு வருகின்றது என்ற ஒரே காரணத்தினால், கண்ணை மூடி கொண்டு எதிர்கட்சிகள் எதிர்க்குமானால், சமூகத்திற்கு நல்லதல்ல. யோக பயிற்சியில் உள்ள நற்பலன்களை மட்டுமே மனதில் கொண்டு, நல்வாழ்க்கைக்கு வித்திடுவோம்!!!

பல ஆண்டுகளுக்கும் பிறகு, நானும் யோக பயிற்சியினை தொடங்கி விட்டேன். நீங்க எப்போ!!!!

||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||||||
|||||||||||உங்களை போல் ஒருவன்|||||
||||||||||||||||||||வேதை குமார் |||||||||||





Sunday, July 19, 2015

அடுத்தவன் ஊழைப்பை திருடாதே

கடைத்தெருவில் நடந்து செல்லுகையில் துணிக்கடையிலோ, நகைக்கடையிலோ விளம்பர பலகையில் நடிகரோ அல்லது நடிகையின் புகைப்படத்தை பார்த்திருப்போம். நடிகரின் மீதான அன்பினால், அந்த கடைக்கு செல்ல மனம் விழையும் என்ற நம்பிக்கையில் அமைக்கப்பட்டிருக்கும். அதை கடையின் முதலாளி, வியாபார உத்தி என்ற பெயரிலும் நம்பிக்கையிலும் செய்து வருகிறார்.

இதையெல்லாம் தாண்டி, இன்னொரு விஷயம் உள்ளது. அந்த புகைப்படத்தை, தன்னுடைய விளம்பர போர்டில் வைப்பதற்கு, அவர் அனுமதி வாங்கினரா? என்று கேள்வி எழுகிறது. இது பெரும்பாலும் பெரும் நகரங்களில் நடைபெறுவதில்லை. ஆனால் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் நடைபெற்று வருகின்றன. இதை நடிக நடிகைகளும் பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ரோமியோ ஜிலியட் திரைப்படத்தில் டி. ஆர் பெயரை, அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியாக வழக்கு தொடர்ந்திருந்தார். பிறகு பஞ்சாயத்து மூலம் தீர்க்கப்பட்டது என்பது வேறு கதை.

ஆனால், ஒருவருடைய திறனை புகழை, அவருடைய அனுமதியில்லாமல், மற்றவர்கள் தன்னுடைய சுய லாபத்திற்காக எடுத்து பயன்படுத்துவது திருட்டுக்கு மேலானது. இந்த இடத்தில் தான் காப்புரிமை என்பது அவசியமாகிறது. ஆனால், தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் காப்புரிமை வழங்க முடியாதல்லவா? அந்த இடங்களில், முன் அனுமதி பெறுவது அவசியம் என்பதை உணர வேண்டும்.

சமீம காலங்களில், காப்புரிமை பற்றிய விவாதம் சினிமா துறையில் அதிகமாகி வருகிறது. தசாவதாரம், லிங்கா படப்பிரச்சனைகளுக்கு காப்புரிமை தான் காரணமாக அமைந்துள்ளது. இளையராஜாவும் இதே காப்புரிமைக்காக தான் நீதிமன்றத்தின் அணுகினார்.

ஒருவருடைய திறனையும் பொருளையும், அவருடைய அனுமதியில்லாமல் எடுத்து கொள்வதென்பது அனைத்தும் துறைகளிலும் நிறைந்தே இருக்கிறது. கம்யூட்டரில் சாப்ட்வேர், திருட்டு டிவிடிக்கள் என பட்டியல் நீளும்.

முழுவதும் திருட்டை ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!!! ஆனால், நம்மால் முடிந்தவரை குறைக்க முயற்சிப்போம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, July 18, 2015

அழகும் பெண்மையும்

பெண் அழகின் உருவம்; அழகு தேவதை; நாணம் தான் பெண்ணிற்கு அழகு இவையெல்லாம் பன்னெடும் காலமாக இலக்கியத்திலும், கவிஞர்களும், சமூகமும் சொல்லி வந்த வார்த்தை பதங்கள். அதோடு பொன் நகைபெண்ணின் அழகினை கூட்டவல்லது என்று கூறியும் வந்துள்ளனர்.

இல்வையெல்லாம் பெண்ணின் அறிவை மழுங்க கூடியது என்று எண்ணுகிறேன். இந்த பெண்ணை அடிமைப் படுத்துவதற்காக ஆணின் ஆதிக்க மனநிலையே என்று எண்ண தோன்றுகிறது. இக்கால பெண்கள், அழகு என்ற ஆசை வார்த்தையிலிருந்து வெளியே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். (ஆணிற்கு வீரம் தான் அழகு என்பதும் மறைய ஆரம்பித்திருக்கிறது)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Wednesday, July 15, 2015

ஐபில் சூதாட்டமும் ரசிகரின் மனநிலையும்

நேற்று, சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டும் அணிகளும் இரண்டு ஆண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் பணம் சார்ந்த அரசியல் பற்றி சொன்ன போது யாரும் ஏற்று கொள்ளவில்லை. இப்போதும், அதே மனநிலையில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தோனி இல்லாத ஐபிஎல்லை நினைத்து கூட பார்க்க முடியாது என்கிறார் கவாஸ்கர். எந்தவொரு பெரிய விளையாட்டு வீரர்களும், இதைப் பற்றி வாயை திறக்க மறுக்கிறார்கள்.

ஒவ்வொரு சராசரி கிரிக்கெட் ரசிகரும், தோனி வேற அணியில் சேர்ந்து விளையாட வாய்ப்பிருக்கிறதா? சென்னை அணியை வேறொரு நிறுவனம் வாங்கி, நடத்த முடியுமா??? என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

பெரிய அளவில் குற்றம் நடந்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும், பெரிய அளவில் ஏமாற்றப்பட்டிருக்கிறான் என்ற புரிதல் இல்லாமல், குற்றம் புரிந்தவரை தூக்கி வைத்து கொண்டாடுவது, என்ன மனநிலையோ????

சானியா மிர்சாவும், லியாண்டர் பெயர்ஸும் விம்பிள்டன் போட்டியில் ஜெயித்த சந்தோஷத்தை விட, தோனி ஐபிஎல்லில் விளையாட முடியாது, சென்னை அணி அடுத்த ஐபிஎல்லில் விளையாட முடியாது என்பதையே பெரிய வருத்தமான செய்தியாக எடுத்து கொள்கிறார்கள். நம் எதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். குற்றம் செய்தவரை பாராட்ட சென்று கொண்டிருக்கிறோம்..இதே நிலையில் போனால், குற்றம் செய்தவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடும் நேரம் வந்து விடும் போலும்..

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்