Saturday, December 8, 2018

கஜா புயலும் செல்ல பிராணிகளும்

மனிதனின் பாதிப்புகள் அதிகம் என்றாலும்…… அதை தாண்டி மிருகங்கள் படும் அவஸ்தைகள் அதிகம்!!!!
எனது வீட்டில் இருக்கும் ஆடுகள் மட்டுமே இருக்கிறது. வாயற்ற ஜீவனின் வாயாக(ஆட்டின்) கருத்தை தெரிவிக்கிறேன்.
ஆட்டிற்கு தேவையான பசும்தழைகள் கிடைப்பதில்லை. எங்களது ஊரில் சவுக்கு தழையே ஆடுகளுக்கு அதிகம் பயன்படும், அது முழுவதும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவிற்கு திண்டாட வைக்கிறது. ஆடுகளினை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொசு கடியினால், மனிதனே எவ்வாறு தற்காத்து கொள்ள முடியாத நிலையில், ஆடுகளின் நிலை சொல்லி மாளாது!!!!
தினமும் 3 கொசுவர்த்தி சுருள் கொசு அடிக்கும் பேட்……. இவ்வாறாக பல யுத்திகளை பயன்படுத்தியும் பிரயோஜனமில்லை!!!! ஆடுகள் படுத்து உறங்குவதும் கிடையாது!!! பரிதாப நிலையே மிஞ்சுகிறது!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, December 5, 2018

கஜா புயலும் பின்நவீனத்துவ புரிதலும்

கஜா புயல் மொத்த வாழ்வதாரத்தை புரட்டி போட்டாலும், இயற்கை நமக்கு கற்று தந்திருக்கின்ற பாடங்கள் ஏராளம் என்பேன்!!!!
சுயசார்பையும் இயற்கையையும் விட்டு விலகி பல வருடங்களாகி விட்டது. அதை உணர்த்தும் வகையில், இப்புயல் அமைந்தது எனலாம்.
மின்சாரம் இல்லாத நிலையினை, துக்கமாக கருதாமல்…. நம்முடைய தந்தையும் தாத்தாவும் வாழ்ந்த காலத்தினை எண்ணி பார்க்க வேண்டும். மின்சார மோட்டர் இல்லாமல்… கை பம்பின் மூலம் தண்ணீர் அடித்து உபயோகம் செய்ததை புரிய வைத்திருக்கிறது. மிக்சி, கிரைண்டர் இல்லாமல், அம்மி மூலம் அரைத்து காலத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
உடனே…. நான் அறிவியல் சாதனத்தை எதிர்க்கிறேன் என்று எடுத்து கொள்ள வேண்டாம். முழுவதும் அறிவியல் சாதனத்தையே நம்பி… நம்முடைய சுயத்தை இழந்து, செய்வதுறியாது திகைத்து நிற்கிறோம்!?!?! அதை புரிந்து கொள்ள வேண்டும்.
புயல் அடித்து, ஒரு வாரம் கழித்து, திருநாரணயனன் சார், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். “நகர் புறங்களில் பால் கிடைப்பதில் பிரச்சனையிருக்கும். ஆனால், கிராம புறங்களில் ஏன் பால் கிடைப்பதில்லை??” என்றார். சற்று சிந்திக்க வைத்த கேள்வி. கிராம புறங்களில் மாடு வளர்க்கும் பழக்கம் முழுவதும் மறைந்து விட்டது. அனைவரும் பால் பாக்கெட்டினை நோக்கி தாவி விட்டனர். எனது வீட்டில் கூட, 10-15 வருடங்களுக்கு முன்னரே வளர்த்த மாடுகளினையே விற்றாயிற்று. இது தான்….. கிராமம் தன்னுடைய சுயத்தை இழந்ததன் எடுத்து காட்டு!!!!
புளூ கலர் டாடா சீட், ஆஸ்பெடஸ் சீட் போன்ற பாதிப்புகளை எற்படுத்தும் பொருட்களை, இப்புயல் மூலம் இயற்கை சற்றே குறைத்திருக்கிறது எனலாம், புத்தம் புதிய மரங்களையும் செடிகளையும் வளர்க்கும் எண்ணத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வெள்ளம், உத்ரகாண்ட் வெள்ளம், கேரளா வெள்ளம்……. இப்படியாக பல வெள்ள பாதிப்புகள், பல ஆக்கிரப்புகளை அகற்றியது. அந்த வகையில், கஜா புயல் இயற்கையை புதுப்பித்து கொண்டதாக கூட புரிந்து கொள்ளலலாம்!!!!
” இருக்க இடம், சாப்பிட உணவு, உடுத்த ஆடை…… இதெல்லாம் கிடைக்காம எல்லாரும் கஷ்டப்படுறாங்க……… நீ என்னாடன்னா…. இப்படி கிறுக்கு மாதிரி பேசுற “ நீங்க நினைக்கிறது புரியது……. என்ன பண்றது…. மூளை கிறுக்கு மாதிரி யோசிக்கிதே!!!! (கொஞ்சம் பின் நவீனத்துவமாக யோசித்து பார்த்தேன். அவ்வளவு தான்)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Sunday, December 2, 2018

கஜா புயல்

கஜாவின் கோர தாண்டவம், சொல்லான துயரினை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இதை எங்ஙனம் விவரிப்பது என்று கூட தெரியவில்லை. சொன்னால் கூட, எத்தனை பேர் முழுமையாக தெரிந்து/புரிந்து கொள்வார்கள் என்று கூட யூகிக்க முடியவில்லை.
வாழ்க்கையினை பூஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை!!! பணக்காரர், எழை என்ற பாகுபாடெல்லாம் இல்லை!!! பணக்காரனுக்கு லட்சங்களில் இழப்பு என்றால், ஏழைகளுக்கு பத்தாயிரங்களில் இழப்பு!!! பலருக்கு வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது.
கடந்த பல வருடங்களாகவே…. இந்தியாவே பொருளாதார ரீதியாக சிக்குண்டு இருக்கும் போது, டெல்டா பகுதிவாசிகளின் பொருளாதாரத்தினை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்றிருக்கிறது,
கஜாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், மத்திய தர வர்க்கத்தினரே!!! அவர்களே குடிசை வீடுகளை விடுத்து ஒட்டு வீடுகளை, ஆஸ்படாஸ் சீட்டுகளை பயன்படுத்தி வந்தனர். பழைய நிலைமைக்கு திரும்ப 5-10 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவும் நிச்சயமானதல்ல!!!
மனித உயிர்களின் இழப்பு குறைவு என்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், புயலினை தொடர்ந்த மரணங்கள் அதிகம் என்பது கவனிக்க தக்கது.
மனிதனின் நிலைமையே மோசம் எனும் போது, மிருகங்கள் மற்றும் பறவைகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. புயலின் மறுநாள் காலையில், புயலில் தப்பித்து ஒன்றி நின்ற அணில் குஞ்சின் பயம், இன்றும் ரணமாய் மனதில் நிற்கிறது.
அப்படியே தப்பி பிழைத்தாலும், அதற்கு உணவில்லாமல் அல்லாடும் நிலைமையே காணப்படுகிறது. அதிலும் பறவைகளில் நிலைமை இன்னும் மோசம்!!! காகங்களும், அணில்களில் திசையறியாது நிற்கிறது. மாடுகளுக்கு வைக்கோல் இல்லை!!! ஆடுகளுக்கு பசுங் தழைகள் இல்லை!!! எங்களது வீட்டில் கூட, அதற்குள் மூன்று ஆடுகளையும் விற்றாகி விட்டது.
ஒரு தலைமுறையின் உழைப்பான மரங்கள் அனைத்தும் சருகுகளாக மண்ணில் நிற்கின்றன. அதிலும் தென்னை, மா மற்றும் முந்திரி மரங்கள் அதிகம்!!! தென்னையையே நம்பி இருக்கும் விவசாயிகள் எண்ணி பாருங்கள். வேதாரண்யத்தில் அனைத்தும் வீடுகளில், மேற்கண்ட அனைத்திலும் ஒன்றிரண்டு மரமாவது இருக்கும். ஒட்டு மொத்த உபரி வருமானமும் கட்!!! அதனையே முழு வருமான கொண்ட, புஷ்பவனம், பட்டுகோட்டை பகுதிவாசிகளின் நிலையை, சொல்லி தெரியவேண்டியதில்லை!!!
உண்மையிலேயே உணவிற்கு வருந்தும் மக்கள் ஒருபுறம், தேவையான பொருட்கள் ஒருந்தும், இன்னும் அதிகமான பொருட்களை சேர்க்க வேண்டும் என்று எண்ணும் மக்கள் மறுபுறம்!!!!
என்னுடைய தனிப்பட்ட பாதிப்புகள் ஒருபுறம்!!! மொத்த சமூகத்தின் பாதிப்புகள் மறுபுறம்!!!! அரசு ஊழியராக, மருத்துவ பணி ஆற்ற வேண்டிய கடமை மற்றொரு புறம்!!! இப்படியாக ஒய்வற்று நிற்கிறேன் 15 தினங்களாக!!! பல தினங்களில் மதிய உணவை பற்றி யோசித்ததே யில்லை!!!
பல துயரங்களை தாண்டி, அனுபவங்கள் அதிகம்!!!! பலருக்கு பதில் கூட அளிக்க இயவில்லை!!!
கஜா புயலை பாதிக்கப்பட்டவர்களுக்காக, பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் வலு சேர்த்தவர்களுக்கு நன்றிகள் பல!!! கஜா புயலின் போது பணியாற்றிய அனைத்து துறை நண்பர்களின் களப்பணியும் பாராட்டிற்குரியது!!!!
வாழை மரமானது, புயலினால் ஒடிந்தாலும், அது திரும்ப துளிர்த்து வரும் தன்மை உடையது!!!! அந்த மனநிலை, டெல்டா பகுதி வாசிகளுக்கு தேவைப்படுகிறது. இழப்புகள் அதிகம் என்பது உண்மை…. அதை தாண்டியும், அடுத்த அடியை எடுத்து வைப்பது அவசியம்!!!! மனம் உறுதி கொள்வோம்!!! மீட்டு எடுப்போம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, November 2, 2018

ஆடை தேர்வும் பெண்களும்


தீபாவளி நெருங்கி விட்டது. புத்தம் புது ஆடைகள் வாங்குதல், பலகாரங்கள் தயாரிப்பு என அனைவரும் மும்முரமாகி விட்டனர். அதிலும் புத்தம் புது ஆடைகள் வாங்குவதற்கு, ஐவுளி கடைகள் நிரம்பி வழிகின்றன.

பெண்கள் ஆடை தேர்வு செய்வதில், அதிக நேரம் எடுத்து கொள்கின்றனர்என்ற பொது சமூக கருத்தாக்கம் அதிகமாக இருக்கிறது. அது சார்ந்த புரிதல் உண்மையா? என்று ஆராய்வோம்.

பெண்களின் மனநிலை பற்றி ஆராய்வதற்கு முன்னர்..... ஆடைகளின் வியாபாரம் பற்றி ஆராய்வது அவசியம்.

பன்னெடும் காலமாக... பெண்கள் அழகு பதுமைகளாக சமூகம் கருதி வந்தது. ஆதலால், பெண்களின் அழகினை மேம்படுத்துவதற்கு ஆடை, அணிகலன் ஆகியவற்றிற்கு முக்கியம் தரப்படுகிறது. இதனால் பெண்களுக்கான துணி வகைகளும், துணி நிற வகைகளும் இயற்கையே அதிகமாகி இருக்கிறது.

சமூகத்தில்.... இன்றளவும் பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறியவர்களாகவும் இருந்தாலும், பொருளாதார சுதந்திரமும் இருந்ததில்லை!!!! ஆண்களை சார்ந்திருப்பவர்களாகவே உள்ளனர்.
ஆதலால், வியாபார நிறுவனங்களும் பெண்களை குறிவைத்து வியாபாரத்தில் அதிக மாடல்களை அறிமுகம் செய்கின்றனர்.

மேற்கண்ட காரணங்களினால்..... ஆண்களை விட, பெண்களை அதிக துணி வகைகளும் உள்ளன. ஆதலால், அதிக துணிகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதில், இயற்கையாகவே பிரச்சனைகள் உள்ளது. அடுத்து உளவியல்!!!

காலம் காலமாக...... ஆண்களை ஒப்பிடும் போது , முடிவு செய்யும் இடத்தில்,பெண்கள் குறைவாகவே இருந்தனர். இதனால்...... முடிவு எடுக்கும் அனுபவம் குறைவாகவே இருக்கும். ஆகையால், ஆரம்ப காலங்களில் குழப்பங்கள் இருக்க தான் செய்யும். அது போக போக சரியாகவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் பெண்களுக்கு ஆடை வாங்கி தரும் உரிமை.... கடந்த காலங்களில் ஆண்களுக்கே இருந்து வந்தது. இதுவும் மற்றொருமொரு பிரச்சனை!!! இதையெல்லாம் தாண்டி, புதிய மனநிலைக்கு வருவதற்கு பரிணாம வளர்ச்சிபடி நோக்கினால், 50- 100 வருடங்களும் ஆகலாம்.

ஆண்கள் துணி எடுப்பதற்கு, குறைவான நேரம் எடுத்து கொள்வதில்லையா??? அவர்களிலும், அதிக நேரம் எடுத்து கொள்பவர்களும் உண்டு. ஆனால், ஒப்பிடும் போது குறைவு!!! அவ்வளவு தான்!!!

பின்குறிப்பு: என் புரிதலில், சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் நோக்கில், கப உடலினர் துணிகளை தேர்வு செய்வதில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றனர்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, November 1, 2018

சம கால புரிதலும், தற்காப்பு கலைகளும்


சமீப காலங்களில், சில செயல்களை அதிகமாக காண முடிகிறது. அதில் ஒன்று தான் காரத்தே வகுப்புகள்!!!! ஞாயிற்று கிழமைகளில் காலையிலே காரத்தே வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், காரத்தேவில் பரிசு பெற்றதாக காணப்படும் சுவரெட்டிகள் என பல தருணங்களில், காரத்தே கண்டிருக்கிறேன்.

காரத்தே, நிச்சல், சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று கொள்வது அவசியம்!!! அதில் தவறில்லை. ஆனால், அது ஒரு பேஷனாக மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது.

முன்னரெல்லாம், மியூசிக் கிளாஸ், பரதநாட்டியம் கிளாஸ் போன்று, இன்றைய தற்காப்பு கலை சார்ந்து வகுப்புகள், பேஷனாகவும் வணிகமாகவும் மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது.

இதையெல்லாம் தாண்டி.... தற்காப்பு பயிற்சிகளை செயல்படுத்துவதற்கு அளவிற்கான மன புரிதல்.... நமக்கு இருக்கிறதா??? என்ற கேள்வி எழுகிறது.

எதாவது பிரச்சனைகள் நடக்கும் போது, அந்த பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி செல்லவே, பெற்றோர்கள் அறிவுரை கூறுகிறார் , ” நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை, பெரிய இடத்து பொல்லாப்பு எதுக்குஎன்ற அறிவுரைகளே அதிகமாக இருக்கும்.

இன்றைய திரைப்படங்களும், சிறுகதைகளும் .... மனிதர்களுக்கு அநியாயத்தினை எதிர்க்கும் தன்மையை உருவாக்குவதில்லை!!!

சமூகம் சார்ந்த அறசீற்றத்தினை, இன்றைய கல்விமுறையும், வழி காட்டும் நெறிமுறைகளையும் உருவாக்குவதில்லை. அப்படி இருக்கும் போது, மேற்கண்ட தற்காப்பு பயிற்சிகள் ...... போட்டிகளில் பரிசு வெல்வதற்கு மட்டும் பயன்படும்!!!! நிஜ வாழ்க்கையில் அல்ல!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, October 11, 2018

கார்பரேட்டும், வெகுஜன புரிதலும்


” வெள்ளைக்காரன்னா பொய் சொல்ல மாட்டான் “ மாதிரியான கருத்தாக்கங்கள் மனித சமூகத்தில் அதிகம். படிக்காதவர்களை போன்று படித்தவர்களிடம் அதிகம். இன்னும் சொல்ல போனால், பகுத்தறிவு பேசுபவர்களிடம் கூட அதிகமாக இருக்கும். எ.கா. ” பெரியார் சொன்ன சரியாத்தான் இருக்கும்

சரி... விஷயத்திற்கு வருவோம்!! அதில் கார்ப்ரேட் என்றாலே தப்பு தான்!!! என்கிற புரிதல்.... இந்த உலகத்தில், 100 சதவீதம் சரியான விஷயம் உண்டா???? நிச்சயமாக கிடையாது. சில விஷயங்களை காலம் நல்லவையாக காட்டும். அவ்வளவு தான்!!!!

1900 களில் முதலாளித்துவ(கார்பரேட்) பொருளாதாரம் சிறந்தது என்பது போன்று தோற்றமளித்தது. 1930 ஆண்டுகளில், முதலாளித்துவம் பொருளாதாரம் விழுச்சியடைந்தது. 1940 களில் பொதுவுடமை பொருளாதாரம் சிறந்ததாக தோன்றியது. இன்றைய சூழ்நிலையில்..... முழு பொதுவுடைமை நாடு என்று எதுவுமில்லை.

கார்பரேட் என்பது நல்ல கருத்தாக்கம் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அதே சமயத்தில் முழு மோசம் என்று கூற்றும் தவறு. இன்று செல்போன் விலை குறைவிற்கும், அதில் குறைவான செலவில் பேசும் ஜியோ நெட்வெர்க்க்கும் கர்பரேட்டின் பிரதிபலனே!!!

இன்னும் சொல்ல போனால்....நாம் தொடங்குகின்ற சிறிய கடைகள் கூட,கர்பரேட்டின் மினியேச்சர் தான்!!! உங்களுடைய வருமானத்தை.... அனைத்தும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறார்களா?? என்ன!! நிச்சயம் கிடையாது. மனதளவில் அனைவரும் முதலாளிகளே!!! அம்பானி 100 கொடி சம்பாதிக்கிறார் என்றால், நாம் 1000 ரூபாய் சாம்பாதிக்கிறோம்... அவ்வளவு தான் வித்தியாசம்!!!!

உடனே!!! நாம் கார்ப்ரேட் ஆதரவாளன் என்று முத்திரை குத்தி விடாதீர்கள்... இவ்வுலகம் கார்பரேட்டால் ஆனது. அதில் வாழும் மனித மனம்... கார்பரேட் மனத்தினால் தான் ஆனது!!! ” கார்பரேட்டினை எதிர்த்தால்.... நம்மை நல்லவனாக உலகம் ஏற்கும் ” என்று போலி கற்பிதங்கள் எதற்கு???

கடைசியாக ஒன்று தான்..... கார்பரேட்டினால், இந்தந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் சொல்லலாம். நானும் அதை மறுக்க போவதில்லை!!! கார்பரேட் என்பது நன்மை தீமை கலந்த கருத்தாக்கம் தான் !!! அதில் தீமை மட்டுமே கிடையாது என்பது என்னுடைய புரிதல்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, October 9, 2018

குழந்தை வளர்ப்பும் கட்டுபாடுகளும்


ஒய்வு பெற்ற அரசு ஊழியரிடம் இருந்து போன்!!! அவருடைய பேரனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைத்திருந்தார். பிரச்சனைகளை பற்றி… .அவர் ஆரம்பித்து வைக்க, அவருடைய மகன் முடித்து வைத்தார்!!! நீண்ட உரையாடல்!! சுருக்கி தருகிறேன்.

அவருடைய பேரனுக்கு மூன்று வயதாகிறது. பிரிகேஜிக்கு சென்று கொண்டிருக்கிறான். சரியாக சாப்பிடுவதில்லை!!! கோபம் அதிகமாக வருகிறது!!! கோபம் வந்தால் சுவற்றில் மூட்டி கொள்கிறான் அல்லது வீட்டில் உள்ள பொருளை உடைத்து விடுகிறான்என்பது அவனது பிரச்சனையின் சாரம்…..

வருமானதிற்காக…. கிராமத்தினை வீட்டு வெளியேறி, நகரத்தில் குடியேறி இருக்கிறார்கள். கணவன் மனைவி, மகன் என மூன்று பேரை தவிர வேறு யாருமில்லை!!! செல்ல மகன்எது கேட்டாலும் வங்கி தரும் பெற்றோர்கள்!! தாத்தாவும் பாட்டியும்!!! சுற்றுபுறத்தாருடன் அதிகமாக பழக்கம் இல்லை!!! புட்டிய வீட்டிற்குள்ளே அடைப்பட்டு கிடக்கிறான்!!! “ இது தான் அவர்களுடைய சூழ்நிலை!!!

ஆங்கில மருத்துவம் பார்த்திருக்கார்கள்!! இது ஒரு பிரச்சனையில்லை என்று சொல்லியிருக்கிறார்…. ஹோமியோபதியும் பார்த்து இருக்கிறார்கள்!! சிறிதளவு முன்னேற்றம் இருக்கிறது. அடுத்தது தான்எனக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. “

தினமும் 4-6 வரைக்கும் பெரிய சாக்லேட் சாப்பிடுகிறான். ஆதலால், உடலிற்கு தேவையான சக்தி முழுவதும், சாக்லேட்டின் மூலம் கிடைத்து விடுகிறது. அதை தாண்டி பசிக்கும் போது, பூரி கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அதை தாண்டி எப்படி பசிக்கும்????……

வீட்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறான். வீட்டிற்கு வெளியே சென்று விளையாட ஆசைப்படுகிறான்; அனுமதி மறுக்கப்படுகிறது. அதனை கோபமாக வெளிப்படுத்துகிறான்; பொருட்களை உடைக்கிறான்;
சுவற்றில் முட்டி கொள்கிறான். ஆனால் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்ததும், பிரச்சனையின் தன்மை சற்று குறைகிறது; அவனை வீட்டினை அடைப்பட்ட சூழ்நிலையை விட்டு விலகி, அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாலே, அவனுடைய பிரச்சனை குறைந்து விடும்இது தான் தீர்வாக, அவருக்கு முன் வைத்தேன்!!!

--------------------------------------------------

இன்றைய சூழ்நிலையில்மேற்கண்ட பிரச்சனை என்பது ஒரு சாம்பிள்!!! இது போல்ஆயிரம் குழந்தைகளை தினமும் பார்க்க இயலும்.

நம்முடைய குழந்தை பருவ காலத்தை போல்இன்றைய குழந்தைகளின் காலத்தை எடுத்து கொள்ள கூடாது!! அவர்களினை மனதினை புரிந்து கொள்ளுங்கள்!!!! அவர்களின் உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்!!! அதற்காககெட்ட விஷயங்களுக்காக வளைந்து கொடுக்காதீர்கள்!!!

மேற்கண்ட நிகழ்விலும், ஒரு நகை முரண் உள்ளது. அவனுடைய சாக்லேட் வாங்கி கொடுப்பதில், அதீத சுதந்திரமும், அருகிலுள்ள குழந்தைகளுடன் விளையாடுவதில், அதீத கட்டுபாடும் விதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் கட்டுபாடுகளும்சில இடங்களிலும் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும். அதன் எல்லைகளை வரையறுக்க தெரிந்திருக்க வேண்டும். அந்த புரிதல் பெற்றொருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனை கண்டறிவதில் உள்ள சவால்களை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.

ஒரு வளமாக சமுதாயம் உருவாக்கம் என்பது இன்றைய குழந்தைகளின் வாழ்வியலை கட்டமைப்பதிலேயே உள்ளது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, October 2, 2018

பிக்பாஸ்_2


முன்குறிப்பு: பிக்பாஸ் பிடிக்காதவர்கள், டேக் டைவஜன் எடுத்து கொள்ளலலாம்.

பிக்பாஸ் 1 அளவிற்கு, பிக்பாஸ் 2 வெற்றி பெறவில்லை. போன வருடம் பிக்பாஸின் இறுதியில் எழுதிய கருத்துரை!!!

///// தமிழில் முதல் பாகம் அளவிற்கு, அடுத்தடுத்த பாகங்கள் வெற்றியடையுமா??? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!!!! முதற்பாகத்தை பார்த்த பிறகு, நிகழ்ச்சிக்கு வர தயங்குவார்கள் அல்லது அப்படியே வந்தாலும், பிக்பாஸ் வீட்டில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்!!! போட்டியாளர்களிடையே சண்டை மூட்ட பிக்பாஸ் நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கலாம்!!! பொறுத்திருந்து பார்க்கலாம்!!!/////

தன்னுடைய பெயர் கெட்டு விடுமோ என்ற காரணத்தினால், அனைவரும் safe game விளையாடினார்கள். வெளியுலகத்திற்காக நடித்தார்கள் என்றால் மிகையாது!!! நாம் பொது வாழ்விற்கு நடிக்காத நடிப்பு என்ன????

இது ஒர் வணிக நிகழ்ச்சி!! இதில் அறமெல்லாம் எதிர்பாக்க கூடாது. அவர்களுக்கு வணிகமே முக்கியம்!!! ஐஸ்வர்யாவினை வெளியேற்றாமல் வைத்திருந்தது அது தான் காரணம்!!! ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேலும் அறம் தவறும் பட்சத்தில், அந்த வணிகத்தின் மீது நம்பிக்கையில்லாத நிலை ஏற்படும். அந்த நிலை பிக்பாஸ் 2 விற்கு ஏற்பட்டது. “ நான் நேர்மையானவன் என்று நிருபீக்க, இறுதி போட்டியிற்காக ஒட்டுகள், update செய்து வெளியிட்டது.

மேலும் இதுவும் கலை வடிவத்தின் அடுத்த நிலை தான் !!!! இது தனிமனிதனின் உரிமைகள்/சுயம் சார்ந்ததாக இருந்தாலும், அந்நிகழ்ச்சியில் ஒப்பு கொள்ளும் போதே. அந்த தனி மனித சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றது!!!

இதை பார்ப்பதால் என்ன நன்மை ஏற்பட போகிறது என்றால்,….. தனிமனித புரிதல் சார்ந்ததே என்பேன்!!! பள்ளி கல்லூரிக்கு சென்று, நல்லவை கற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது. எந்தவொரு சாதனமும், அதனை முழுமையாக உபயோகப்படுத்த தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! ஒரு சினிமாவிற்கு செல்கிறோம் என்ன கிடைக்கிறது ஒரு அக மகிழ்ச்சி மட்டுமே!!! ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னொரு வக்கிரம் நிறைந்திருக்கிறது. அடுத்தவனின் அந்தரத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம்!!! இதுவும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கும், மனித வாழ்வியல் வெற்றிக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. நிஜ வாழ்க்கையில் சில போலி தனங்களோடு தான் வாழ்ந்தாக வேண்டும். முழு போலித்தனமே சிறப்பாக வழிக்கு எடுத்துகாட்டாக கூட காட்டப்படும். ஆனால், பிக்பாஸில் பைத்தியகாரனாக இருக்கும் ஐஸ்வர்யா, ரன்னர் அப் வரை கொண்டு செல்வார்கள். Diplomatic செயல்படுவது என்பது பிக்பாஸில் தோல்வியை தரும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஐஸ்வர்யா, மகத், மும்தாஜ், பொன்னம்பலம், நித்யா போன்ற சிற்சில பிரச்சனைகள் வைத்து, பிக்பாஸினை ஒட்டினார்கள். பிரச்சனைகளே பிக்பாஸ் வெற்றிக்கு ஆதாரங்கள்!!!

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமலின் பணி சிறப்பானது என்பேன்!!! சொல்லப்போனால், இவர் இல்லாமல் இருந்தால், நிகழ்ச்சி தோல்வியை சந்திக்க கூட வாய்ப்புள்ளது!!! அறிவுரைகள், வாழ்க்கை புரிதல்கள், சினிமாவின் நினைவுகள் என அனைத்து நிலைகளிலும் செவ்வானே பணியாற்றினார்.

பிக்பாஸின் பிம்பங்கள் அனைத்தும் உண்மை என்று நினைக்க வேண்டாம். பல நேரங்களில், அடுத்தவர்களின் எதிர்மறை பிம்பம். இன்னொருவரை நல்லவராக எடுத்துரைக்கிறது. அதில் ஒவியா, மும்தாஜ் போன்றவர்களை சொல்லலாம். சிலர் எப்போதும் நல்லவர்களாக வலம் வருவார்கள். அது ரித்விகாவை சொல்லலாம்.

எனக்கு எந்தளவில், பிக்பாஸ் உபயோகம் என்றால், மனித உணர்வுகள், உணர்வு சார்ந்தவை உளவியல் ரீதியாக புரிந்து கொள்ள உபயோகமாக இருந்தது!!!!

நாம் எப்போது கருத்தியலோடு மட்டுமே பயணிக்க
இயலாது. வாழ்க்கை போரடிக்க ஆரம்பிக்க விடும். இது மாதிரியான ஒன்றுமில்லாத விஷயங்களை சேர்த்தே பயணிக்க வேண்டும்.

முக்கியமாக……எழுத்தாளர் சுரேஷ் கண்ணன், பிக்பாஸ் 2 பற்றி, முடிந்தவரை நடுநிலையோடு எழுதினார். அவருக்கு வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Sunday, September 30, 2018

கருத்தரங்கு ஆய்வு கட்டுரைகளும் , புத்தகமும்

நேற்றைய தினம்... கருத்தரங்கு முடிந்து ரயிலுக்காக, கால் நடை பயணமாக செல்லும் போது, ஒரு யோசனை தோன்றியது.

இது என்னுடைய யோசனை அல்ல!!! மற்ற துறையில் நடக்கும் முயற்சி தான்!!! காலத்தின் முக்கிய தேவை என்பதாலும் சொல்ல வேண்டியுள்ளது.

கருத்தரங்கில் பகிரப்பட்ட கட்டுரைகளை, முழு எழுத்து வடிவமாக்கி..... ஒரு முழு புத்தகமாக வெளியிடலாம்...

கருத்தரங்கிற்கு வர முடியாதவர்களுக்கும் பயன்படும். மேலும், ஒரே நேரத்தில் பல கட்டுரைகளை வாசிக்கப்படும் போது ,முழு சராம்சத்தை உள்வாங்க முடியவில்லை!! இதில் உள்ள அனைத்தும் கட்டுரைகளையோ அல்லது சிறப்பாக கருதும் 40 கட்டுரைகளையோ புத்தக வடிவாக்கினால், சித்த மருத்துவ வளர்ச்சிக்கு படிக்கல் என்பதில் ஐயமில்லை!!!

பொதுவாக கருத்துரங்குகளில் விழா மலர் வெளியிடப்பட்டாலும், அது Abstract ஆக இருக்கும்.

மிக சமீபத்தில் படித்த, தொல்லியல் சார்ந்த புத்தகமும், சித்தர்களின் பன்முக பார்வை என்ற புத்தகமும் .... இந்த மாதிரியானவை!!! இதில் பல நன்மைகள் இருப்பதாக கருதுகிறேன்.

ஒரே கட்டுரைகள் பல கருத்தரங்களில் சமர்பிக்கப்படுவது ஒழியும். கட்டுரைகளின் quality அதிகமாகும்.

புத்தகமாக வெளியிடும் பட்சத்தில், அது குறித்த விவாதங்களும், மாற்று கருத்துகளும் அதிகளவில் வெளிப்படும். இது சித்த மருத்துவ வளர்ச்சிக்கும் உதவும் !!!

சித்த மருத்துவத்தில், முறையான ஆவணப்படுத்துதல் குறைவு என்ற குற்றசாட்டு களையப்படும். சித்த மருத்துவ துறையினை தாண்டி, மற்ற துறையினருக்கு முக்கியமாக பயன்படும்.

எல்லாவற்றிக்கும் மேலான,.... இது ஒரு வியாபார யுக்தி!!! அரசிற்கு பணம் ஈட்டும் வழிமுறை!!! இல்லையேல், தனியார் பதிப்பகத்தின் மூலமாக தொகுப்பாசிரியர் கொண்டு செய்ய இயலும்!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, August 25, 2018

பொது மக்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியும்


100 நாட்கள், 60 கேமராக்கள், 15 பிரபலங்கள்(?) என்பது பிக்பாஸின் sub- title.. அந்த 15 பிரபலங்களை, வெளியுலக தொடர்பற்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அவர்களின் உணர்ச்சி குவியலை வைத்து விளையாடும் வாழ்வியல்  விளையாட்டு!!! இது 15 மனிதர்களுக்கு மட்டுமல்ல!!!

உலக மக்கள் அனைவரை வைத்து ,மற்றொரு பிக்பாஸ் நிகழ்வை நவீன உலகம் நடத்தி கொண்டிருக்கிறது. இதனை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை!!!

முகநூலில் தரவுகள் களவாடப் பட்டதாக, ஒரு விஷயம் வெளிவந்த போது, இணைய உலகமே ஆச்சரியமாக பார்த்தது. ஆனால், முகநூலில் நிறுவனர் எப்படி உலகில் முக்கிய பணக்காரராக இருக்கிறார் என்று யாரும் யோசிக்கவில்லை. இத்தனைக்கு முகநூல் இலவச வலைதளம்!!!

கூகுளில் ஒரு பொருளை தேடி விட்டு…. முகநூலிற்கோ/ அல்லது மற்றொரு தளத்திற்கோ சென்றால், நீங்கள் கூகுளில் தேடிய பொருளில் விளம்பரமாக…. உங்களது பக்கத்தில் வந்து நிற்கும்!!!

யூடியுப்பில் ஒரு வீடியோ பார்த்து விட்டு, மற்றொரு நாள்….. அதே யூடியுப்பிற்கு செல்லும் போது, முந்தைய நாள் பார்த்த விடியோக்களுடன் தொடர்புடையவை அதிகமாக தென்படும்!!!

இன்றைய சூழ்நிலையில் டிவியின் வெளிவரும் விளம்பரங்கள் அனைத்தும், பெண்களினையும் குழந்தைகளினையும் குறி வைத்து வெளியிடப்படுகிறது. அதை பற்றி சிந்தித்திருக்கிறேமா???

இவைக்கு பின்னால், விஜய் டிவியின் பிக்பாஸ் போல… வணிக நிறுவனங்கள்/பெரு நிறுவன முதலாளிகள் இருக்கிறார்கள். யார் பிக்பாஸ் என்று தெரியாது போல்… இவர்களும் யாரென்று தெரியாது. நீங்கள் இல்லுமினாட்டி என்று கூட வைத்து கொள்ளுங்கள்(எனக்கு இல்லுமினாட்டி மீதும் நம்பிக்கையில்லை)

இதற்கு பின்னால்…. பெரும் தரவு என்னும் பிக் டேட்டா இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் artificial intelligence முக்கிய பங்கு வகிக்கின்றன.

அமெரிக்க தேர்தலில், டிரம்ப்பின் வெற்றியில், பெரும்தரவின் பங்கு முக்கியம். இணைய வாசிகளும், பொது மக்களும் என்ன மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களை எப்படியெல்லாம் மனநிலையை மாற்றலாம்??? என்பதை யும் பெரும் வணிகம் நன்றாக புரிந்து வைக்கிறது. இது தேர்தலுக்கு மட்டுமல்ல!!!! உலகில் உள்ள அனைத்து பண்டங்களும் சேவைகளும் அடக்கம்!!!

பழைய பண்டங்களை முழுமையாக அழித்து விட்டு, புதிய பண்டங்களை அறிமுகம் செய்து, அதன் பயன்பாட்டை அதிகப்படுத்தி, பழைய பண்டத்தை முழுமையாக மறைய செய்வதே…..  வணிக நிறுவனத்தின் திறமை!!! அதையும் உண்மை என நம்பி, நாமும் வங்கி கொண்டிருப்போம்!!!!

பழங்காலத்தில் முக்கியமான/நல்ல ஊட்ட சத்து மிக்க கடலைமிட்டாய், முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் வணிக நிறுவனத்தின் உத்தியே!! ஆனால், அதே கடலை மிட்டாய் வணிகத்தை தூக்கி நிறுத்தியதும் ,அதே வணிக மூளை என்பது நகை முரணாக விஷயம்!!! இதே நிலையில் வேட்ஷ்யிலும் நடந்தது!!

இன்றைய இந்திய பொருளாதார சூழ்நிலையில், குடும்பத்தின் தலைவராக ஆண்களே இருக்கிறார்கள். ஆதலால், செலவு செய்ய பயப்படுவார்கள். ஆதலால் செலவு செய்ய தாயராக இருக்க கூடிய குழந்தைகளினையும் பெண்களினையும் திட்டமிட்டு விளம்பர படுத்துகின்றனர். ஆண்களுக்கு என்றால், வேட்டியும், பேர்னஸ் கீரிம் மட்டும் தான் மிஞ்சும்!!!

பழங்காலத்தில் நிலவுடமை சமுதாயம், பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ,வர்க்க ரீதியாகவும், சாதிய படிநிலைகளை வைத்தும் முடிவு செய்தது. இன்றும் அந்த அமைப்புகள் மட்டுமே மாறி இருக்கிறது. இன்று அது வணிக நிறுவனங்களாக மாறி நிற்கிறது. இன்றும் பொது மக்கள் என்ன உடை உடுத்த வேண்டும், காலையில் என்ன சாப்பிட வேண்டும், விடுமுறை நாட்களில் எங்கு செல்ல வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்வது கார்பரேட்டே!!!!

பகுத்தறிவு புலிகளாக சொல்லி கொள்ளும் நாம்…. என்றுமே சுயமாக சிந்தித்ததில்லை!!! மற்றவரின் புரிதலை, நம்முடைய புரிதலாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!!

இன்று நீங்கள் வேண்டுமானால், மகத்தையும், ஐஸ்வர்யாவைவும், யாஷிகாவையும் திட்டி கொண்டிருக்கலாம். ஆனால், நாமும் அவ்வாறாக தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது புரிந்து கொள்வோம்!!! மகத் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது புரிந்து கொள்ளலலாம். நமக்கு அந்த வாய்ப்பை... வாழ்வியல் எப்போதும் தந்ததில்லையே !!!

அந்த 15 நபர்களுக்கும், பிக்பாஸ் யாரென்று தெரியாது… அது போல், நம்மை இயக்கும் பிக்பாஸ்களும் யாரென்று தெரியாது. அது தெரிந்தால், வாழ்க்கை சுவராசியம் இருக்காது!!!  

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்