Friday, July 28, 2017

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்


வாழ்க்கை சார்ந்த புரிதலில், ஆயிரம் குழப்பங்கள் இருக்கும் போது, சிந்தனை திறனிலும் குழப்பங்கள் பல!!! சரியான புரிதலில் சிந்திக்கிறோனா என்பதே குழப்பமாகி விடுகிறது. (இப்ப நீ என்ன சொல்ல வர்ற என்று நீங்கள் நினைப்பது புரிகிறது)

நமது சிந்தனை திறனின் பரப்பெல்லை, குறுகியதா அல்லது திறந்த மனந்தோடு பெரியதா?? என்பதும், அதில் நம்முடைய துறை சார்ந்த அறிவு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?? என்பதை பற்றியது; “ ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்எனபது போல் இருக்கிறேனா??? (இன்னும் தலையை சுத்துகிறதா)

நான் சார்ந்த சித்த மருத்துவ துறையை எடுத்து கொள்வோம். எனக்கு சித்த மருத்துவம் சார்ந்த நம்பிக்கையும் இருக்க வேண்டும்., அதுபோல் சித்த மருத்துவத்தின் மீதான விமர்சனத்தையும் ஏற்று கொள்ள கூடிய மனநிலையும் வேண்டும்.
இல்லையென்றால், சித்த மருத்துவத்தின் வளர்ச்சியை குறித்து சிந்திக்க இயலாது.

மாறாக, சித்த மருத்துவத்தின் மீதான கண்மூடத்தமான நம்பிக்கைகள் இருக்குமானால், என்னுடைய சிந்தனை பரப்பெல்லை என்பது குறுகியதாக மாறி விடுமோ என்று எண்ணுகிறேன் . பொது சமூகத்தின் விமர்சனங்களை மறுக்க ஆரம்பித்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது.
அவ்வாறு சித்த மருத்துவத்தின் நம்பிக்கை மீதான எல்லையை, நான் சரியாக வரையறுக்க முடிகிறதா??? அல்லது தவறான முறையில் சிந்திக்கிறேனா??? என்ற கேள்வி எழுகிறது.

ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும், பல மனிதர்களினை சந்தித்து இருக்கிறேன். அவர்களால், அத்துறையை தாண்டி சிந்திக்க முடியவில்லை. அத்துறையின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும், அதன் மீதான பற்று/காதலும் அதிகமாகி விடுகிறது. ஆகையால், அத்துறையில் படிக்கின்ற/புரிந்து கொள்கின்ற அனைத்தும் உண்மை என்பது போல், நம்மையறியால் நாமே புரிந்து கொள்கிறேன்

ஒருவர் ஜோதிட துறையில் விற்பன்னர் என்று வைத்து கொள்வோம். அத்துறையை தாண்டி, அறிவியல் சார்ந்த வளர்ச்சியினை உள்வாங்கி கொள்ளாமல் , அறிவியல் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துவார். மாறாக, ஜோதிடத்தின் எல்லைகளை தெரிந்து கொண்டு, அத்துறையின் மீதான விமர்சனத்தை பரிபூர்ணமாக ஏற்று கொள்ள கூடிய மனநிலை வேண்டும்.

அறிவின் எல்லைகளை குறுக்காமல், திறந்த மனநிலையோடு இருக்க வேண்டும். மேலும் அறிவியல் மீதான நம்பிக்கை இருக்க வேண்டும். இத்தகைய புரிதல் என்பது பெரிய ஜோதிடர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.( இருந்தால், மிக்க மகிழ்ச்சியே!!!!)

துறையின் மீதான நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கு இடையேயான மெல்லைய கோட்டினை அடையாளம் காண முடியவில்லை. மேற்கண்ட அனைத்திலும், ஒரு விதரெண்டு கெட்டான்மனநிலையோடு இருக்க வேண்டியுள்ளது. அதாவது ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்எனபது போல் இருக்கிறேனா??? என்று தோன்றுகிறது.

இவ்வாறாக, ரெண்டு கெட்டான் மனநிலையோடு இருக்கும் போது மட்டுமே, பல்துறை சார்ந்த அறிவும் பெற முடிகிறது. பொது ஜனங்களின் விமர்சனங்களை ஏற்று கொள்ள முடிகிறது; மேலும் பல்துறை சார்ந்த அறிவின் பரப்பல்லையும் அதிகரிக்க முடிகிறது. எதாவது ஒரு துறையிலும் ஆழ்ந்த புரிதலையும் அடைய முடியவில்லை.

இது சரியா என்று அடையாளப்படுத்த முடியவில்லை; அதே சமயத்தில் முற்றிலும் தவறு என்று சொல்லவும் இயலவில்லை. எதுவும் புரிதலற்ற மனநிலையொடு கடக்கிறேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Saturday, July 22, 2017

பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒவியாவும்


ஒவியா குறித்து புரிதல்கள் அதீதமாகவே தெரிகின்றது. பிக்பாஸில் ஒவியா போன்ற குணமுள்ள மனிதர்களை ஆதரிக்கும் மனம், நிகழ் காலத்தில் ஒவியா போன்ற குணமுள்ள மனிதர்களை வெறுப்பதாகவே இருக்கும்.

நாமெல்லாம், பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்றாவது நிலையில் இருந்து பார்க்கிறோம். அதில் நேரடியாக கலந்து கொள்வதில்லை. அதே சமயத்தில், நாமெல்லாம் கலந்து கொண்டிருப்போமானால், நமக்குள் இருக்கும் காய்த்ரியும், நமிதாவும், சினேகனும் சக்தியும் ஜீலியும் வெளிப்படுவார்கள் என்பது கண் கண்ட உண்மை...

மேற்கண்டவை அனைத்தும் , நம்மை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாதவை. ஆதலால், ஒவியாவிற்கு ஆதரவு அளிக்கிறோம். சூழ்நிலை தான், மனிதனின் உண்மை குணத்தை வெளிப்படுத்தும். தர்ம சங்கடமான சூழ்நிலை வராத வரை, நாமெல்லாம் நல்லவனாகவே நடித்து கொண்டிருப்போம்!!! ஒவியாக்கள் நல்லவரென்றும் காயத்ரிக்கள் கெட்டவரென்றும் புரிந்து கொண்டிருப்போம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


பிக் பாஸ் நிகழ்ச்சியும், பிரச்சனை குறித்த புரிதலும்


பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து புரிந்து கொள்ள கூடிய/கற்று கொள்ள கூடிய செய்திகள் ஏராளம். அதிலிருந்து நாம் எதை எடுத்து கொள்கிறோம். எதை நீக்க விரும்புகிறோம் என்பது தனிப்பட்ட மனிதனின் புரிதல் நிலையை பொறுத்தது!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியின் அஸ்திவாரமே…. அதன் பிரச்சனைகளே!!! நிகழ்ச்சியில் உள்ளவர்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி…. அல்லது நிகழ்ச்சியை வழி நடத்துகிற கமல்ஹாசன் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி……….

மொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு- பரணி என்ற பிரச்சனையை தாண்டி, மற்றவையெல்லாம் பெண் சார்ந்த பிரச்சனைகளாகவே அமைகின்றன அல்லது முன்னிறுத்தப்படுகின்றன . அதாவது ஜீலி, ஆர்த்தி, காயத்ரி, ஆர்த்தி, நமிதா போன்ற பெண் சார்ந்த போட்டியாளர்கள் சார்ந்த பிரச்சனைகளே அதிகமாக இருக்கின்றன.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். இந்நிகழ்ச்சிக்கு பெண் வாசகர்களை அதிகமாக்கி விரும்பி பெண்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்க, இயக்குநர் முடிவு செய்திருக்கலாம். மற்றொன்று…. பெண்களுக்கு இடையே சண்டை எளிதாக உண்டாகும். அதாவது ஆண்களுக்கு இடையே சகப்பு தன்மை அதிகமாக இருக்கும். ஆனால், பெண்களுக்கு சகிப்பு தன்மை என்பது மிக குறைவு.

ஒரே இடத்தில் கூடி வாழுதலே, இந்நிகழ்ச்சியின் மையப்புள்ளி. அவ்வாறு கூடி வாழுதல் என்பது பெண்களுக்கு இயலாத காரியம். (இதில் பல மாற்று கருத்துகள் இருக்கலாம்).

சக பெண்களுக்கு இடையே சகிப்பு தன்மை குறைவு என்பது சமகாலத்தில் மிக அதிகமாக இருக்கிறது. பழங்காலங்களில், இத்தகைய பிரச்சனைகள் இருந்ததா?? என்று தெரியவில்லை. மாமியார்-மருமகள் பிரச்சனை, மருமகள்- நாத்தனார் போன்ற பிரச்சனைகளும், இதன் வேறு வடிவங்களாக கூட இருக்கலாம். காரணம் தான் விளங்க இயலவில்லை!!!!

பல நூற்றாண்டுகளாக ஆண் சமூகம் பொருளீட்டல் சார்ந்தும், பெண் சமூகம் குடும்பத்தை வழி நடத்துவதுமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், பெண் ஹார்மோன், ஒவ்வொரு விஷயத்தையும் உணர்ச்சி பூர்வமாக அணுக வைக்க கூடியது. ஆண் ஹார்மோன் அறிவு சார்ந்து அணுக கூடியது. (இதில் மாற்று கருத்தும் உண்டு).

அவ்வாறு பெண் குடும்பத்திற்குள்ளே மட்டுமே இருப்பதனால், உறவு சார்ந்த சிக்கல்களே அதிகமாக இருந்தது. உறவு சார்ந்த சிக்கல்களில், எது சரி/எது தவறு என்பதை…….. எப்போது அறுதியிட்டு சொல்ல இயலாது. மாறாக, ஆண் உறவு சார்ந்த சிக்கல்களில் சிக்கி கொள்ள விரும்பவது இல்லை. பெண்ணுக்கே குடும்பமே வாழிடமாக இருப்பதால், உறவு சார்ந்த சிக்கலகளில், அவளையறியாமல் சிக்கி கொள்கிறாள். சக பெண்ணும், இந்த மனநிலையில் இருக்கும் போது, பிரச்சனைகள் மட்டுமே தொக்கி நிற்கிறது,

ஆனால், வருங்காலங்களில் பெண்களுக்கு கல்வியறிவும் வெளியுலக வாய்ப்புகளும் அதிகமாகி வருவதால், பெண்கள் இச்சூழ்நிலையிலையை, எளிதாக எதிர் கொள்வார்கள் என்று நம்புவோம்!!!!

பின்குறிப்பு : பெண் சமூகத்தின் மீதான குற்றசாட்டாக, நான் வைக்க விரும்பவில்லை. சமகால பிரச்சனைகளை யோசிக்கும் போது, பிக்பாஸின் பிரச்சனை கூறுகளும், சமகால பிரச்சனை கூறுகள் ஒத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதில் என்னுடைய புரிதலை முன் வைத்தேன். மாற்று கருத்துகள் இருப்பின், முழு மனதோடு ஏற்று கொள்கிறேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, July 20, 2017

அரசியலும் பங்களிப்பும்


அரசியல் என்ற வார்த்தையை கேள்விபாடாதவர்/பயன்படுத்தாதவர் எவரும் இலர்!!!! இப்பூலகில் அனுதினும் ஒலிக்கும் சொற்களில் முக்கியமானது. ஆனால், இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை எந்தளவிற்கு புரிதலோடு இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய கேள்வி குறி!!!!

அரசியல் என்றாலே, அரசியல் கட்சி ஆரம்பித்து நேரடியாக மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். இது தவறான புரிதல் என்பேன்!!!

நேரடியாக அரசியல் கட்சி மூலம், மக்களுக்கு சேவை செய்வது ஒரு வகை என்றால், மறைமுக அரசியல் என்பதும் விசாலமானதே!!!!

அது ஒரு தனிமனிதனாக இருக்கலாம்/ சங்கமாக இருக்கலாம்/ அமைப்பாக இருக்கலாம்/ தத்துவர்ந்த கொள்கையாக இருக்கலாம்.

ஒரு குடிமகன் குடிதண்ணீருக்காக அரசிற்கு, ஒரு மனு எழுதுவதாக இருக்கலாம். அல்லது 100 பேர் சேர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியலாக இருக்கலாம். மேற்கண்ட இரண்டுமே ஒருவகையான அரசியலே!!!!

சாதி, இனம், மொழி, இனம் மற்றும் சாதியற்ற சமூக கட்டமைப்புக்காக போராடுவது ஒரு வகையான அரசியல் அழுத்தமே!!!! எடுத்து காட்டாக, தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியே வந்துள்ளது.

அரசியல் சார்புள்ள/சார்பற்ற சங்கங்கள் என்று நிறைய உள்ளன. எடுத்து காட்டாக அரசு ஊழியர்கள்/அலுவலர்கள் சங்கம்/ஆசிரியங்கள் போன்றவை. மேலும் கூட்டுறவு சங்களும் மக்கள் பணியை செய்து வருகின்றன.

இதை தாண்டி, பெரும்வணிகர்கள் செய்யும் மறைமுக அரசியல் தந்திரம் ஊரறிந்த உண்மை!!!!

அரசியல் கட்சிகள் என்பது ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து மக்களுக்கு நல்லது செய்வதென்றால், மேற்கண்ட அமைப்புகள் நேரடியாக ஆட்சி கட்டிலில் அமராமல், மக்களுக்கு சேவை செய்பவை. மேற்கண்ட அனைத்தும் மக்களுக்கு நேர் மறையான விளைவுகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை;சில அமைப்புகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்!!!!

ஒரு தனிமனிதனோ/அமைப்போ தன்னுடைய தேவை சார்ந்து சலுகை பெறுவதற்காக போராடுவதில், அரசியல் கலந்து இருக்கிறது.

(மேற்கண்டதில் நன்கு புரிதல் உள்ளவர்களுக்கு, ”ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்என்று கேள்வி கேட்க மாட்டர்கள் என நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று!!!! )

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Wednesday, July 19, 2017

மனப்பாடம்- ஒரு திறமையா? மாயையா?


எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்ததாக நினைவு!!! திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், எனக்கு தெரியாமலே என் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. மொத்தம் 8 அதிகாரங்களாக, 80 குறட்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும்!!!!

70 குறட்பாக்களை கூட தாண்டவில்லை என்று நினைக்கிறேன். மனப்பாடம் செய்வதென்றால் எவ்வளவு கடினம். ஆனால், இன்றைய குழந்தைகள், இதையெல்லாம் சிறப்பாக செய்கின்றார்கள்.

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில்…… இரண்டாம் வகுப்பு மாணவன் கூட திருக்குறள், குறிஞ்சுப்பாட்டில் உள்ள மலர்கள், அறுபது தமிழ் வருடங்கள் என பட்டையை கிளப்புகின்றனர். பரிணாம வளர்ச்சியினால், மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் திறனும் அதிகமாகி வருகிறது.

இந்த குழந்தைகளின் திறமையை பாராட்டும் அதே நேரத்தில், இத்திறமை மீது மாற்று பார்வையை வைக்க விரும்புகிறேன்!!! ( இது சரியா தவறா என்று தெரியாது. ஆனால், சிந்தையில் உதித்ததை கேள்வியாக, உங்கள் முன் வைக்கிறேன் )

இத்தகைய செயல்களால் மனப்பாடம் செய்யும் திறன் அதிகமாகி வருகிறதே தவிர, சிந்தனை திறன் வளர்ந்ததாக தெரியவில்லை. இத்தன்மையின் நீட்சியே….. இன்றைய மனப்பாட செய்து வாந்தியெடுக்கும் 10,12 வகுப்பு மாணவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

இவ்வாறு மனப்பாடம் செய்யும் திறமையையே….. வாழ்க்கையின் வெற்றி புள்ளி என்று குழந்தை மனதில் பதிய வைக்கிறோம். அதையும் குழந்தைகளும் உண்மை என நம்பி வளர்கின்றன.

ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களில், நன்றாக மனப்பாடம் செய்து பரிட்சையில் நூறு சதவீதம் எடுக்கும் மாணக்கரையே, வகுப்பின் சிறந்த மாணவன் என்று மெய்ப்பிக்கிறோம். மாறாக சிந்தனை திறன் மிகுந்த மாணவனையும், படிப்பினை தாண்டி மற்றவற்றில் ஆர்வம் இருக்கும் மாணவனையும், திறமையற்றவன் என்ற புரிதல் மறைமுகமாக மெய்ப்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தினை தாண்டி, திறமையை மதிப்பீடுவதில் உள்ள குறைபாடே!!!!

இதையெல்லாம் செய்து விட்டு, வேலை தேடி அலையும் போதும், குடும்ப வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் போதும், இளைஞர்கள் கஷ்ட படுகின்றனர். இந்நிலையை வைத்து கொண்டு, கற்ற கல்வியின் மீது நம்பிக்கை குறைகிறது; விமர்சனம் வைக்கப்படுகிறது; ஏட்டு சுரக்கரை கறிக்கு உதவாது என்ற பழமொழி யெல்லாம் உதாரணம் காட்டப்படுகிறது.

மனப்பாடம் ஒன்றே வெற்றிக்கான வழி என்ற புரிதலை, காலம் காலமாக (பள்ளி கல்வி, கல்லூரி கல்வி மற்றும் வேலை பெறுதல்) மறைமுக போலிப்பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, திடீரென்று கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எத்தனை அபத்தங்கள்!!!

இந்த போலிபிம்பத்தை குழந்தையிலேயே தொடங்கி, மழலைகள் மழங்கடித்து விடுகிறோமோ என்ற கேள்வி என்னுள் எழுகிறது. விடைகள் ஏதும் கிடைக்குமா????

(சித்த மருத்துவத்தின் வழி சொல்ல வேண்டுமென்றால், கப உடம்பினர் மனப்பாடம் செய்வதில் வல்லவர்கள்; ஆதலால், அந்த உடம்பினரே வெற்றியாளராக சமூகம் நம்பிக்கை கொள்கிறது )

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்