Sunday, November 23, 2014

சதுரகிரி மலைப்பயண அனுபவம்

நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற விதியிருந்தால் தான், வைத்தீஸ்வரன் கோயிலில், உன் கை ரேகைக்கான கட்டு இருக்கும் என்று சொல்வது உண்டு. அது போலத் தான், மகாலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று விதியிருந்தால் மட்டுமே, சதுரகிரி மலையை அடைய முடியும். அப்படியோரு வாய்ப்பு, எனக்கும் கல்லூரி பருவத்தில் கிட்டியது.

2005 ஆம் ஆண்டு தாவரங்களை சேகரிப்பதற்காக கல்வி சுற்றுலாவாக பல இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம். எங்களுடன் தாவரவியல் ஆசிரியர் சங்கர் சார்மருத்துவர்கள் கண்ணன் சார், ராஜேந்திர குமார் சார், உதவியாளர் மோகன், மற்றும் சக மாணவ- மாணவிகள் சென்றோம். அதில் முதல் நாளாக, சதுரகிரி மலையின் அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு பகுதியில், எங்களது களப்பணியை மேற்கொண்டோம்.

மலையில் இருந்து, சுமார் இரண்டு கிலோ மிட்டர் உயரம் வரை சென்று, தாவரங்களை கண்டறிந்து, எடுத்து கொண்டோம். மதிய வேளையை அடைந்ததும், கொண்டு வந்திருந்த உணவுகளை உட்கொண்டு களைப்பாறினோம். மேற்கொண்டு, களப்பணியை மீண்டும் துவங்கினோம். 

இவ்வளவு தூரம் வந்து விட்டு, மகாலிங்க தரிசனம் பெறாமல் இருந்தால், நன்றாக இருக்குமா?? “ என்ற கேள்வி, எங்களுக்குள் எழ, மலையில் ஏறி மகா லிங்க தரிசனம் பெறுவது என்று முடிவு செய்தோம்.

மதியம் இரண்டு மணிக்கு மேல், மலையேறி சென்று சாமி தரிசனம் பெறுவது கடிமான செயல் என்று தெரிந்தும் கூட, ஏதே ஒரு நம்பிக்கையில், பயணத்தை தொடங்கினோம். மலை பாதையை பற்றியும், எவ்வளவு தூரம் ஏற வேண்டி இருக்கும் என்பதை பற்றியும், எந்தவித முன்னுபவமும் இல்லாமல், ஏற வேண்டி இருந்தது. அமாவசை தினமாக இருந்திருந்தால், நிறைய நபர்களின் நடமாட்டம் இருந்திருக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை.

எங்களின் கண்களிற்கு பட்ட, பாதம் பதிந்த தடத்தில் எங்களது பாதங்களின் பயணமும் தொடங்கியது. இரண்டு மூன்று நபர்களாக வந்திருந்தால், மிக எளிதாக பயணித்து செல்லலாம். ஆனால், ஆண்-பெண் என சுமார், 35 பேர் கொண்ட குழுவாக இருந்ததால், பயணத்தின் பாதையை சற்று சவலாகவே இருந்தது.

நானும் சில நண்பர்களும் முன்னேறி செல்வதும் , பாறைகளிலும் சிறிது நேரம் உட்கார்ந்து களைப்பாறுவோம். பின்னர், மெதுவாக நடந்து வரும் குழுவுடன், இணைந்து செல்வோம். சில கிலோமீட்டருக்கு பின்னர், சிலரது மனமும் உடலும் ஒத்துழைக்காததால், ஒரு ஆசிரியரும் ,சில மாணவிகளும் மலை அடி வாரத்தை நோக்கி பயணித்தனர்.

சாமி தரிசனம் முடித்து விட்டு வரும் சிலரிடம் கேட்ட போது இன்னும் கொஞ்சம் தூரம் தான், ஒரு ஐந்து கிலோ மீட்டர் தான் இருக்கும் …… நீங்க சீக்கிரம் மேலே ஏறுங்கஆறு மணிக்குள்ள சாமி நடையை சாத்திடுவாங்க…” என்றனர். 

ஏற்கனவே ஏறும் களைப்பில் இருக்கும் எங்களுக்கு, சற்று வேகமாக ஏற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. தண்ணீர் தாகம் அதிகரித்த போதிலும், எங்களிடம் போதிய அளவிற்கு தண்ணீரும் இல்லை. எப்படியே சமாளித்து, சாமியின் தரிசனம் பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஒங்கி இருந்தது. சிவனின் ஆசி தான், எங்களை வேறு எதை பற்றியும் யோசிக்க வைக்கவில்லை போலும்.

சில இடங்களில் மண் பாதைகள், சில இடங்களில் பாறையில் செய்த படிக்கட்டுகள், சில இடங்களில் கயிற்றை பிடித்து ஏற வேண்டிய பாதை, சில இடங்களில் தண்ணீர் பாதைகள், சில இடங்களில் செங்குத்தான பாதைகள் என பலகட்ட படி நிலைகளை தாண்டி, நீர் அருவியாக கொட்டி ,ஆறாய் உருவெடுப்பதை போல், எங்களது பயண அனுபவமும் அமைந்தது என்றால் மிகையாகாது. சில இடங்களில் மலையை குடைந்து பாதையாக மாற்றி, அடுத்த அடி வலமோ அல்லது இடமாகவோ வைத்தால், அதள பாதாளத்தில் வீழ வேண்டி இருக்கும்

தண்ணீர் முழுவதும் தீர்த்து விட்ட நிலையில், அங்கு பாயும் ஆற்றில் பிடித்து குடித்தோம். அதுவும் சுவையாகத்தான் இருந்தது. மூலிகை கலந்த நீர் என்பதால், கெடுதல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எது எப்படியோஐந்தரை மணி அளவில், மகாலிங்க கோயிலினை அடைந்தோம்.

சாமி தரிசனம் முடிந்து வெளியேறும் போது, கதிரவன் தலை சாய்த்து, சந்திரன் தலை எடுப்பதற்கு நேரம் சரியாய் இருந்தது. இதற்கு மேல் ,கீழே இறங்குவது கடினம் என்பது தெரிந்தாலும், இறங்குவதை தவிர ,எங்களுக்கு வேறு வழியும் இல்லை. இறங்குவதற்கு தேவையான டார்ச் லைட்டுகளை வாங்கி கொண்டோம். சில பாட்டில்களில் தண்ணீரை பிடித்து கொண்டோம்.     

கீழே உள்ள ஆசிரியர், எங்களிடம் உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. ஏறியதை போல், இறங்குவது என்பது அவ்வளவு எளிதாக காரியமல்ல. மேலும் மலைப்பாதையில் ஒரு கால் தவறினாலும் மரணம் நிச்சயம். சற்று எச்சரிக்கையாகவும் நிதாதனத்துடனும் பயணத்தை தொடர வேண்டி இருந்தது. இவ்வளவு பயமும் இருந்தாலும்,” நிச்சயமாக பத்திரமாக கீழே இறங்கி விடுவொம் என்று உள்மனம் தன்னம்பிக்கையுடன் சொல்கிறது.

முன்னால் சில நண்பர்களும் ,அதற்கு பின்னால் பெண் நண்பர்களும் செல்ல, கடைசியாக மற்ற நண்பர்களும் பின் தொடர, எறும்புகள் சரை சரையாய் செல்வது போல, எங்களின் பாதங்கள், பாறைகளில் முத்தமிட்டு பயணிக்க தொடங்கியது. முன்னால் நானும், அதற்கு பின்னால் எனது நண்பனும் பாதையை, டார்ச் லைட்டால் வழிக்காட்டி செல்ல, பின்னால் ஆசிரியர்கள் வழிகாட்டி பயணித்தோம்.

மலைப்பாதைகளில் பயணிக்கும் போது, செடிகளை ஒடித்து விட்டு சென்றால், பிறகு திரும்பி வருவதற்கு எளிதாக இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால், அத்தகைய அறிவு அப்போதைக்கு இருக்கவில்லை. சிவனே வழியே!!! சித்தன் வழியே என்று தைரியத்தால் மட்டுமே, கீழே இறங்கினோம்.

லெப்டல வாங்க…. ரைட்டுல வாங்க…. “ என்று, நான் சொல்லி அழைத்து வந்ததாக, இன்றும் சொல்லி கலாய்ப்பதும் உண்டு. அப்படியென்றால், நான் எத்தனை தடவை சொல்லி இருப்பேன் பாருங்களேன்!!!

இப்படியாக பாதி மலையை கடந்து வந்திருப்போம். தீடீரென்று ஒரு குரல்,” இதுல யாரு கெட்டுஎன்று கேட்டது. சார்.. பின்னாடி வந்துகிட்டு இருக்காருஎன்று பதிலளித்தேன்.

உங்களுக்கு 6 மணிக்கு வரைக்கு தானே பர்மிஷன் கொடுத்திருக்கு…. அதுக்குள்ள இறங்கி வந்திடணும் சொல்லி இருக்குள்ளஇப்படி இருட்ல இறங்கி வரும் போது, உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சின்னாயாரு பதில் சொல்றது…..” என்று காட்டமாய் பேச ஆரம்பித்து விட்டார். கீழே உள்ள ஆசிரியர், வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்லி இருக்கிறார். ஊர் மக்கள் சிலரும், அதிகாரிகளும் சேர்ந்து டார்ச் லைட்டு மற்றும் பெட்டர்மாஸ் லைட்டு கொண்டு வந்து இருக்கிறார் என்று பிறகு தான் தெரிந்தது.

சற்று ஸ்தம்பித்து நின்ற நாங்கள், மீண்டும் புது தெம்புடன் பயணத்தை தொடங்கினோம். நானும் ,ஊரை சேர்ந்த இன்னொருவரும் சேர்ந்தே பயணத்தை முன்னிறுத்தி சென்றோம். அப்போது, அவர் சொன்ன தகவல்கள் சற்று என்னை திகிலக்கி விட்டது. சிறுத்தை நடமாட்டம் உண்டு தம்பி…  தீடீர்ன்னு….. உங்க முன்னாடி வந்து நின்னா என்ன பண்ணுவிங்க…….”, “ சில மந்திர வாதிகள் இருப்பாங்க.. அவங்க உங்கள வேற வழிக்கு அழைச்சிட்டு போய்டுவாங்க….” என்று  பல கதைகளை சொன்னார்.

பல வழிகளை கடந்து சென்று கொண்டிருக்கும் போது, டார்ச் லைட்டுகள் பல செயலிழக்க தொடங்கி விட்டன. ஏதே பெட்டர்மாஸ் லைட் மட்டும், சற்று உயிரோடு இருந்தது. அதனை நடுவில் வைத்து, இருட்டான பாதையிலே நடந்தோம். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம், இருட்டிலேயே நடந்து, சுமார் 10 மணி அளவில் மலையாடிவாரத்தை வந்தடைந்தோம்.   

வந்த களைப்பில், பஸ்ஸில் தஞ்சமனோம். அரை மணி நேர தூக்கத்திற்கு பிறகு ராஜபாளையம் அடைந்தோம். இறங்கி, தெரு தெருவாக அலைந்தோம். வேறு என்ன??? சாப்பிட்டிற்கு தான்!!! வயிறு இருக்கிறதே…. அப்போது தான் ஞாபகம் வருகிறது.

பயணங்கள் என்பவை ஒவ்வொருவருக்கும், நிறைய விஷயங்களை கற்று தந்திருக்கும். அது மாதிரியே, சதுரகிரி மலைப்பயணம் என்பது ஒட்டு மொத்த வாழ்வியல் தத்துவத்தை கற்று கொடுத்தாக உணர்கிறேன். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் குணம், தைரியம், முடிவெடுக்கும் திறன், திட்டமிடுதல், கடவுள் பக்தி, எல்லாவற்றிற்கு மேலாக தன்னம்பிக்கை என்று பல குணங்களை கற்று தந்தாக உணர்கிறேன்.

என்னாடுடைய சிவனே போற்றி!!!
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


டைலரின் வெகுமானமும் மனித மனமும்

நேற்று, ஒரு டைலரிடம் பேசி கொண்டிந்தேன். தீபாவளி வியபாரம் எப்படி இருந்தது?? என்று கேட்டேன். எப்போதும் போல, சிறப்பாக இருந்தது என்றார்.

கடையில், 200 ரூபாய்க்கு நல்ல ரெடிமேட் சட்டை கிடைக்குது…. ஆனால், உங்களுக்கு மட்டுமே, தைக்கிறத்து 200 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளதே??? ஏன் ??? “ என்ற என்னுடைய நீண்ட நாள் கேள்வியை கேட்டேன்.

ஒரே அளவுள்ள நிறைய சட்டைகள் தைப்பார்கள். அதனால், அதன் அளவுப்படி வெட்டுவது எளிது. முழு சட்டையும் ஒரே ஆள் தைக்க மாட்டார்கள். கையை மட்டும் ஒருவர், பாக்கெட் மட்டும் ஒருவர் என தனித்தனியாக செய்வர். அதனால், மிக குறைந்த விலையில், விரைவாகவும் தைத்து விட முடியும். இது அனைத்தையும், நாங்களே செய்வதால், அதிக  நேரம் எடுத்து கொள்கிறது. எனவே விலை உயர்வு தவிர்க்க முடியாதாகி விடுகிறது என்றார்.

நல்ல கஷ்டப்பட்டு தைச்சா…. ஒரு நாளைக்கே 1000 ரூபாய் கூட சம்பாதிக்கலாம். அதாவது மாதம் 30,000 ரூபாய் கூட சம்பாதிக்கலாம். அரசாங்க வேலையை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஆனால்………………………………………. என இழுத்தார்.

ஒரு மாசத்துகு 5,000 ரூபாய் கூட கையில மிஞ்ச மட்டாங்குது சார்….. எனக்கு தண்ணி பழக்கம் இல்லை, சிகரெட் பழக்கம் இல்லை….. ஏன் டீ, காபி கூட அதிகம் குடிக்க மாட்டேன்ஆனாலும், கையில காசு தங்க மாட்டாங்குது சார்

யாரும் காசு கொடுக்கும் போது, மன நிம்மதியோடு கொடுக்கிறது இல்ல….. இந்த சட்டை தைக்கிறதுக்கு, 200 ரூபாயா?? என்று நினைத்து கொண்டே கொடுக்கிறார்கள். அப்புறம் எப்படி சார்?? காசு தங்கும். நூத்துல, பத்து பேர் தான், நிம்மதியா கொடுக்கிறாங்கமத்தவங்கஎல்லாம், மனசுக்குள்ளே திட்டி கொண்டே கொடுக்கிறாங்க….

அவர் சொல்வது உண்மை….. நாம் யாரும் மன நிம்மதியோடு கொடுக்கிறது இல்லைஎனக்கு அந்த மனநிலை உண்டு…. இந்த நிகழ்வு டைலர் தொழிலுக்கு மட்டுமில்லாமல், எல்லா வகையான அன்றாடம் கூலி வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்கும் போது ஏற்படும்.

கொத்தனார் வேலைக்கு, ஒரு நாளைக்கு 600 ரூபாயா??

மூடி வெட்டுறத்துக்கு 100 ரூபாயா??

ஒரு டீ விலை 7 ரூபாய், அதுல என்ன அப்படி செலவு இருக்கு??

இப்படியாக பல கேள்விகள், ஒவ்வொருவரும் மனதிலும் தினமும் ஏற்படுபவை தான். ஆனால், மற்றவர்களின் தொழில் செய்வதை பற்றியோ, அதில் உள்ள கஷ்டங்கள் பற்றியோ நாம் யாரும் யோசிப்பதில்லை. இனி வரும் காலங்களிலாவது மன நிம்மதியோடு, வேலைக்கான சம்பளத்தை அளிப்போம்.

சாபத்திற்கு, இவ்வளவு மதிப்பு இருக்கிறதா????…. இன்று தான் தெரிந்து கொண்டேன்……….. இதுனால தான்….. கூலி தொழிலாளர்கள்இன்னும் ஏழையா இருக்காங்களோ!!!!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


கல்லூரியின் முதல் நாள் அனுபவம்

இன்று காலையில்-28/10/14 (பேஸ்புக்கை திறந்த போதும் தான்) இதே நாளில் தான், நாமெல்லாம் கல்லூரியில் சேர்ந்தோம்  என்று விக்ரம் குமார் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அரசு கல்லூரியாக இருந்திருந்தால், அந்த நாளை batch day என்ற பெயரில், அனைவருக்கும் நினைவில் இருந்திருக்கும். தனியார் கல்லூரியில் படித்தால் என்னவோ, அந்த வாய்ப்பு கிட்டவில்லை. ¾ மதிப்பெண் அதிகமாக பெற்றிருந்தால், அந்த வாய்ப்பும் கிடைத்திருக்கலாம். ஆனால், இத்தகைய நட்பு கிடைத்திருக்குமா?? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

கல்லூரி தொடங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் காலில் சிறிது அடிபட்டு விட்டது. அதனால் கட்டு போட்டு கொண்டே, சென்னைக்கு கிளம்பினேன்.

கால் கட்டோடு, புதுசாய் வாங்கிய shoe வோடு, கஷ்டப்பட்டு நடந்த நினைவுகள் கூட மறையவில்லை. அறிமுக விழாவும் நடைபெற்றது. புது புது சொந்தங்கள், நட்பின் ஊடே கிடைத்தது.

இதோடு டாய்பாய்டு காய்ச்சல் சேர்த்து கொண்டது. மற்றவர்களின் பார்வையில், ”ஹோம்சிக்என்ற கூட தெரிந்தது. சில நாட்களுக்கு, கல்லூரிக்கு போக முடியாத நிலை ஏற்பட்ட போது, புது வகுப்பில் தனி ஆளாய் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டது.

பள்ளி பருவ காலங்கள் எல்லாம், அரசு பள்ளியிலே முடிந்து போயின. வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்றதால், ஹாஸ்டல் வாழ்க்கை என்னவென்று தெரியாமல் இருந்தது. இதை தான் படிக்க வேண்டும் என்ற திட்டமிடல் கூட சரியாக இருந்ததில்லை. இதை படித்தால் நல்லது என்ற முறைப்படுத்த கூட சரியான வழிகாட்டுதல் கூட இல்லை. எதோ படிக்கிறோம் என்ற  புரியாத மனநிலையோடு, பள்ளி பருவ காலம் முடிந்தது.

கல்லூரியை பற்றியும், ஹாஸ்டலை பற்றியும், எந்த்தொரு எதிர்ப்பார்ப்பு இல்லாததால், கல்லூரி காலங்கள் பெரியளவுக்கு வெறுப்பை தந்ததில்லை. மாறாக அனுபவத்தை தந்து இருக்கிறது. 

கல்லூரி வகுப்பறை, ஹாஸ்டல் வாழ்க்கை, தனியாக ரூம் எடுத்து தங்கியது, கல்வி சுற்றுலா, மருத்துவமனை பயிற்சி என்று ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு வகையான புத்தக அறிவையும், அனுபவ அறிவையும் தந்தது. சக மாணவர் நட்பு, ஆசிரியர்- மாணவர் நட்பு என்று பல புரியாத புதிருக்கெல்லாம் விடை கிடைத்தது.

தாவரங்களில் தேடி அலைந்த தருணங்கள், மருந்து தயாரிக்கும் போது நடந்த சுவையான நிகழ்வுகள், ரோகிணி, வி.ஹச். எஸ் பயிற்சி, சதுர கிரி மலையேற்றத்தின் போது நடந்த நிகழ்வுகள், வருட வருட கலை நிகழ்ச்சி, NSS கேம்ப் என ஒவ்வொரு தருணங்களும் நினைவில் இருந்து நீங்க மறுப்பவை.

நாங்க ஒன்பது பேர், ஒன்பது பேரும் நவகிரகங்கள் மாதிரி என்று  அடிக்கடி சொல்லி கொள்ளுவது உண்டு. ஒவ்வொருவரும் வேறு மாதிரியான மனநிலையோடு இருந்தாலும், நட்பு என்ற ஒன்றில் ஒருமைப்படுத்த கூடியவர்கள்.

காலங்கள் கடந்தாலும், சூழ்நிலை மறந்தாலும், நினைவுகள் தான் வாழ்வினை அழகாக்க கூடியவை. எத்தனையே துன்பங்களையும், இன்பங்களையும் கல்லூரி வாழ்க்கை தந்திருந்தாலும், இவையெல்லாம் பசுமை பொருந்திய நினைவுகளாக வலம் வந்திருக்கிறது.

இன்றோடு, கல்லூரி வாழ்க்கையில் நுழைந்து பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையில், காயம் பட்ட நேரத்தில், மருந்திட்ட நட்புகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||