Monday, June 27, 2016

புதிய காலணியும் புரிய புரிதலும்

கடந்த பத்து பதினைந்து நாட்களாக குதி காலில் வலி இருந்தது (மற்றவருக்கு வரும் போது நோயாக மட்டும் தெரிவது, நமக்கு வரும் போது தான், அதன் ஆழம் புரிகிறது). எப்போதாவது உணர்ந்த வலி, ஒரு கட்டத்தில் தொடர்ந்து வலிக்க ஆரம்பித்தது. ஆனால், அந்த வலிக்காக, உள் மருந்துகளோ, வெளிப்பூச்சுகளோ பயன்படுத்தவில்லை.
அதற்குள் குதி கால் வலியா?? என்று மனதிற்கு சிறிய பயத்தை கூட ஏற்படுத்தியது. நான் பல மணி நேரம் நின்று கொண்டு வேலை செய்தது கூட கிடையாது. படிக்கும் போது மட்டும், நடந்து கொண்டே படிப்பதுண்டு (தூக்கத்தை தவிர்க்க) அப்படியிருக்கையில், குதிக்கால் வலிக்கு காரணம் புரியாமல், சில நாட்கள் கடந்தன. எக்ஸ் ரே எடுத்து, குதி காலில் புதிய எலும்பு வளர்ச்சி ஏதாவது இருக்கிறதா?? என்று பார்க்காதது மட்டும் தான் பாக்கி.
நோயாளிகளிடம் கேட்க வேண்டிய, அனைத்து கேள்விகளையும், எனக்குள் நானே கேட்டு கொண்டேன். நோயிற்காக காரணமும், அறிய முடியவில்லை. குதி கால் வலியோடு வந்தவர்களுக்கு, நான் MCR காலணி வாங்கி அணிய சொல்வது வழக்கம்., நான் அணிந்திருக்கும் காலணியும், சிறிதளவு மென்மையாகவே இருந்தது.
சில குழப்பங்களுக்கு பிறகு, நான் அணிந்திருந்த காலணியின் மீது சிறிய சந்தேகம் வந்தது. அந்த காலணி வாங்கி, ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. காலணியின் அடிப்புறம், சற்று உயரமாக(அரை செமீ அளவுக்குள்) இருந்தது. நான் பெரும்பாலும், தட்டையான காலணியையே அணிபவன். ஆனால், இதில் சற்று உயரமான அடிப்பகுதியை பெற்றிருப்பதால், சந்தேக பொறி கிளம்பியது. புதிய காலணி வாங்கி, அணிந்த இரு தினங்களில், கால் வலியோ பறந்து போனது!!! சற்று விசித்திரமான புரிதல்!!! ஆனால் உண்மை.
இந்த நிகழ்வு, புதிய இரு புரிதலை தந்தது.
1. நான் மருத்துவராக, நோயாளிற்கு ஏற்படும் நோய்களை கண்டறிய, மிகவும் நுட்பமாக செயல்பட வேண்டும். இந்த இடத்தில் தான், குடும்ப மருத்துவரின் அவசியம் நன்கு புரிந்தது.
2. அரை செமீ உயரமுள்ள, அடிப்புறம் உடைய காலணிக்கே, இந்த வேதனை என்றால், இன்றைய நவநாகரீக பெண்களின் நிலை தான் என்ன???? 

நாகரிகம் என்ற பெயரில், நம் உடலுக்கு ஒவ்வாத எத்தனையே செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமான தொன்று ஹைகை கீல் காலணிகள். நாகரிகமென்ற பெயரில் ,நம்மை நோயாளிக்கி கொண்டிருக்கிறோம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, June 25, 2016

சுவாதி கொலையும் மனித மனநிலையும்

சென்னையில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....
இதையெல்லாம் தாண்டி, இன்னொரு விஷயமே மனதிற்கு வலியை தருகிறது. ஒசுரில் பகலிலே கொலை நடந்த போது, கண்டுக்கொள்ளாத சமூகம், இதை மட்டுமே பேரிழப்பாக வருந்துகிறது. அதற்காக சுவாதியின் கொலையை நியாயப்படுத்தவில்லை.
டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் தொல்லையினால் இறக்க போது, சமூகமே பதறியது. அதே சமயத்தில், தமிழ்நாட்டில் ஒர் மூலையில் நடந்த பாலியலில் தொந்தரவினால் இறந்த பெண்ணை கண்டு கொள்ளவில்லை. ஏதோ.... பத்து செய்திகளில், பதினொன்றாக கடந்து விட்டோம்...
சென்னையில் மழை வெள்ளம் வந்த பொது, இதே மனநிலையே இருந்தது. கடலூரின் மழை வெள்ளத்தை, கடைசி வரி செய்தியாக தான் மனதில் நின்றது. அதே சமயத்தில், சென்னை வெள்ளத்தை மட்டும் பார்த்து, வருத்தப்பட்டோம்...
இது என்ன மனித மனநிலையோ!!! புரியவில்லை... மேற்கண்ட அனைத்து சம்பவங்கள் கொடுத்த வலியை மறப்பதற்கில்லை. ஆனால், நகரத்தில் நடந்தால் மட்டும், முக்கியமான நிகழ்வு போலும், கிராமத்தில் நடந்தால், சாதாரணமாக நினைக்கும் மனநிலையே தவறென்கிறேன்.
மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே, பெரிதாக நினைக்கும் மனநிலையை பிரதிப்பலிக்கிறது. பொருளாதாரத்தினால் அதிகாரத்தினால் சாதியினால் மேல் மக்களின் பிரச்சனைகளை மலையாகவும், கீழ் மக்களின் பிரச்சனைகளை மடுவாகவும் நினைக்கும் மனித தன்மையே வலிக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் வலி என்பது எவராலும் நிரப்ப முடியாத வெற்றிடம். அதை உணார்ந்தவனுக்கு மட்டுமே புரியும். அந்த வலியில் மேல் தட்டு வலி ,கீழ் தட்டு வலி என்ற வேறுபாடெல்லாம் இல்லை.
உணர்வுகளை மதிப்போம்!!!! வலியை பகிர்ந்து கொள்வோம்!!! மாடிவீட்டு சுப்பனுக்கும் நடந்தாலும், குடிசை குப்பனுக்கும் நடந்தாலும் சரி!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, June 23, 2016

மழை- வருத்தப்படுவதா?? சந்தோஷப்படுவதா??

சில நேரங்களில், சில தருணங்களுக்காக, சந்தோஷப்படுவதா?? வருத்தப்படுவதா?? என்று தெரியவில்லை. மே, ஜீன் மாதங்களில் திடீர் திடீரென பெய்யும் வெப்ப சலன மழை, இத்தகைய சங்கட நிலையை மனதிற்கு ஏற்படுத்துகிறது.
மழை பெய்வது நல்லதுதா?? என்று நீங்கள் நினைக்கலாம். மழை நல்லது தான். ஆனால், காலம் தவறிய மழையே, நம்மை வருத்தப்பட வைக்கிறது.
திடீர், திடீரென மேகம் கருக்கிறது. மின்னல் ஒளியை முகத்தில் பாய்ச்சுகிறது. இடி ஒசை காதை செவிடாக்கிறது. கோடை வெயில் தருணத்தில், புதியதோர் கால சூழ்நிலையை ஏற்படுத்துகிறது,. நாம் கோயமுத்தூரில் இருக்கிறம?? இல்லை பெங்களூரில் இருக்கிறம?? என்று மூளையில் உதிக்கும் கேள்விக்கு கூட விடை இல்லை.
தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில், நான் இருக்கும் வேதாரண்யம், நாகை பகுதிக்கு, வடகிழக்கு பருவ காற்று மற்றும் கடலில் உண்டாகும் காற்றழத்த தாழ்வு நிலையை தவிர, வேறெதெனிலும் மழை இல்லை. அப்படியிருக்கையில், பருவம் தவறிய மழையே நம்மை யோசிக்க வைக்கிறது..
2021 க்குள் பசுமை இல்ல வாயுக்களை குறைக்க முயற்சி எடுப்பதாக பாரிஸ் உச்சி மாநாட்டில் உலகநாடுகள் முடிவு எடுத்தாலும், அது நடைமுறைக்கு வருமா?? என்ற கேள்வியே மேலோங்குகிறது.
விஞ்ஞானத்தை துணை கொண்டு, தன்னை மேன்படுத்துவதாக சொல்லி கொண்டு, இயற்கையை அழிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறோம்.
இதனால் தான், நான் சந்தோஷப்படுவதா?? வருத்தப்படுவதா?? என்று தெரியவில்லை என்றேன்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, June 22, 2016

புத்தகம் படிப்பது எதற்கு??

கடந்த இரு தினங்களில் நடந்த இரண்டு நிகழ்வுகள், எனக்கு மன நெருடலை தந்தது.
1. புற நோயாளர் பிரிவில் மருத்துவம் சம்பந்தமான புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன். ஒய்வு பெற்ற ஆசிரியர், இந்த நிகழ்வை பார்த்து, ” பரீட்சைக்கு படிக்கிறீங்க சார்??” என்றார்.
2. வீட்டில் சமூகவியல் புத்தகத்தை படித்து கொண்டு இருந்தேன். அப்போது வந்த உறவினர் ஒருவர், “ என்ன தம்பி!!! எக்ஷமா?? “ என்றார்.
என் நண்பர் சொன்ன நிகழ்வையும், இந்த இடத்தில் நினைவு கூர்தல் நலம் என்று நினைக்கிறேன். வேலை கிடைத்த பிறகு, ”ஏன் புத்தகங்களை வாங்குகிறாய்??” என்று அப்பா கேட்டு இருக்கிறார்.
மேற்கண்ட அனைத்தும், ஒரு தட்டையான புரிதல் இருக்கிறது. அதாவது புத்தகம் படிப்பது என்பது எக்‌ஷம் எழுவதற்கு மட்டுமே!!! வேலை பெறுவதற்கு மட்டுமே!!! இந்த எண்ணத்திற்கு மேல்குடி, கீழ்த்தட்டு மக்கள் என்ற வரையறை கிடையாது. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு கூட கிடையாது.
கல்வி பயில்வது எதற்கு??.... சற்று சிந்தித்து பாருங்கள்…. நிச்சயமாக, 10ல் 8 பேர் வேலைக்கு செல்வதற்காக…. என்றே பதிலளிப்போம்!!! இவையெல்லாம் தவறான புரிதல்…..
எதிர்கால பிரச்சனைகளை, எளிதாக வெல்லத்தக்க அறிவை தரக்கூடிய கருவியே கல்வி ஆகும். அந்த அறிவை புத்தகங்கள் மூலமே பெற முடியும். அதையெல்லாம் விட்டு விட்டு, புத்தகம் படிப்பதே, தேர்விற்காக மட்டுமே என்ற சமூகத்தை வைத்து கொண்டு, நான் என்ன செய்வது???
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, June 16, 2016

எவன் பணக்காரன்

ஒருவர் பொருளாதரத்தினால் செல்வந்தவரது, இரண்டு வகையில் நடைபெறும். ஒன்று..... அதிகமான அளவு பொருளீட்டல். மற்றொன்று..... குறைவாக சம்பாதித்தாலும், தேவையான செலவுகளை மட்டுமே(கஞ்ச தனம் செய்வதை சேர்க்க வேண்டாம்) செய்வதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவது ஆகும்.
இன்றைய சூழ்நிலையில், இரண்டாவது வகையான பொருளீட்டலே அதிகமாகி வருகிறது. செலவு செய்யும் முறையில் கவனம் இருப்பதில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தினை உள்வாங்கியதன் பின் விளைவு. சேமிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் போல் சொகுசாக வாழ வேண்டுமேன, தன்னுடைய தகுதிக்கு அதிகமாக செலவு செய்ய ஆரம்பித்து விட்டோம்.
முற்காலத்தில், இதற்கு நேர் எதிரான மனநிலையே இருந்தது. பெற்ற பொருளாதாரத்தை, தேவையான அளவு செலவு செய்தனர். மற்றவர்கள் போல் பகட்டாக வாழ வேண்டும் என்று எண்ணாவில்லை.(மாறாக கஞ்சத்தன்மை அதிகமாக இருந்தது என்பது வேறு கதை).
இன்றைய நிலையில், தன் தேவையை நிறைவேற்றி கொள்ள,கடன் வாங்குவதை பெருமையாக எண்ண ஆரம்பித்து விட்டோம். அரசாங்கம் முதல் தனி மனிதன் வரை, இந்த வரைமுறைக்கு விதிவிலக்கல்ல.
பணம் படைத்தவர்கள், தன்னுடைய சுய லாபத்திற்காக, கடன் கொடுப்பதை தொழிலாக மாற்றி, அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததன் நீட்சியே!!! இதற்கு உலக நாடுகள் முதல் கூலி வேலை செய்யும் பொதுமக்கள் வரை ஆட்கொள்ளப்பட்டனர்.
கடன் வாங்குவதை முழுவதும் தவறொன்று, நான் சொல்லவில்லை. தேவையற்ற செலவுகளை குறைக்கும் வாழ்க்கை நடைமுறையை கைவிட்டு, தேவையற்ற செலவுக்காக கடன் வாங்குவதையே தவறு என்கிறேன்.
பட்ஜெட் போடும் அமைச்சரை குறை கூறுவதற்கு முன்னர், நம் வீட்டு பட்ஜெட்டை பற்றியும் சற்று யோசியுங்கள்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, June 15, 2016

திருமண எதிர்பார்ப்புகள் மாறி விட்டதா??

திருமண பந்தத்திற்கான எதிர்பார்ப்புகள், காலத்திற்கேற்ப மாறி வருவதாக தெரிகிறது.
வருங்கால மனையாள் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆணின் மனம், சற்றே மாற்றம் அடைந்துள்ளது. அழகிற்கான முக்கியத்துவம் சற்றே குறைந்து, பொருளாதார முக்கியத்துவம் பெற்றுள்ளது. பணத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, படித்த/வேலைக்கு செல்லும் பெண்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அது போல், பெண்ணின் மனநிலையும் மாறி உள்ளது. பொருளாதாரத்தை முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை மாறி உள்ளது. வருங்கால மணவாளன், தன்னொத்த அழகிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இன்றைய சூழ்நிலையில், பெண்கள் வேலைக்கு செல்வதால், பொருளாதாரத்திற்காக ஆணை எதிர்பார்க்கும் மனநிலையும் மாறி, அழகு முக்கியத்துவம் பெற்று.விட்டது.
மேற்கண்ட இரு வகையான மனமாற்றங்களிலும் எந்தவித தவறும் இல்லை. கால மாற்றத்திற்கு
ஏற்ப, மணமக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், எதிர்பாலினத்தின் எதிர்பார்ப்புகளையும், மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், இல்லறம் நல்லறமாக இல்லாமல், துறவறமாக மாறும்!!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, June 8, 2016

மனிதம்-பிரச்சனைகள்

கீழ்க்கண்ட இரண்டில், ஏதேனும் ஒன்றிலே பெரும்பலான மனிதர்கள் இருக்கிறார்கள்...
1. பிரச்சனையை புரிந்து கொள்ளாதவர்கள்/ கொள்ள முடியாதவர்கள்- ஒரு பிரச்சனையின் மூல காரணத்தை அறியமுடியாததால், தீர்க்க இயலாதவர்கள்.
2. பிரச்சனையின் காரணத்தை அறிந்தவர்கள்- ஒரு பிரச்சனையின் மூலக்காரணத்தை நன்கு அறிந்தவர்கள். அதனை தீர்க்கும் வழிமுறையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால், பிரச்சனையை தீர்க்காமலே, வாழ்பவர்கள்.
இன்றைய நிலையில் முதல் நிலையினரே அதிகம். ஆனால், இவர்கள் சமூகம் முன்னேறும் போது, பிரச்சனையும் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
இரண்டாவது வகையினர், சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ப, இவர்களும் அதிகமாகி வருகின்றனர். இவர்களே சமூகத்திற்கு பிரச்சனைகளாக மாறி வருகின்றனர் என்பது நிதர்சனம்.
சமூகம் முன்னேறும் போது, முதல் வகையினர், இரண்டாவது வகையினராக மாறி விடுவதை தடுக்கவும் முடியவில்லை.... மது போதையை போல்.....
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்