சுமார் 6 மணிநேரம் நடந்த விவாதத்தினை, ஒரு மணி நேரமாக கத்திரித்து
விஜய் டிவி ஒளிப்பரப்பியது. எல்லா டிவிக்களும் தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்காக, பல கத்திரிகளையும்,
பல நாடகங்களையும் நடத்துவது உண்மை. இந்த காரணத்திலே, ” நான் நீயா நானாவில் கலந்து கொள்வதில்லை
“ என்று உளவியல் மருத்துவர் ரூத்ரன், தனது முக நூலில் தெரிவித்து இருந்தார். இந்த நிதர்சனத்தை
யெல்லாம் தாண்டி தான், விவாத்தை காண வேண்டியுள்ளது.
” பொது மக்களின் நல்லதோரு புரிதலை ஏற்படுத்தும் ” என்ற மனநிலையோடு,
நேற்றைய இரவு பொழுது கழிந்தது. சமூக பார்வையாளர்கள் மத்தியில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தியதாக
உணர்கிறேன். ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது,
சித்த மருத்துவர்களின் பார்வை எதிர்மாறான நிலையே உள்ளது.
” சித்த மருத்துவன் என்ற புரிதலை தாண்டி, சித்த மருத்துவத்திடம்
சமூகம் என்ன எதிர்ப்பார்க்கிறது ” என்ற தெளிந்த
நிலையும் தேவை என நினைக்கிறேன். இந்த புரிதலை கொண்டததால் தான், எதிர்தரப்பு கேட்ட வினாக்களுக்கு
சிவராமன் சார், திருநாராயணன் சார் மற்றும் குட்டி ரேவதி மேடம் போன்றவர்கள் தெளிவான
பதிலை அளிக்க முடிந்தது. பொதுவாக சித்த மருத்துவன் என்பவன், சமூகத்தோடு ஒட்டி வாழாத,
சித்த மருத்துவன் என்ற சுய கர்வத்தோடு வாழ்வதாகவே நினைக்கிறேன். இதுவே சித்த மருத்துவனை
அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதை தடுக்கிறது என்று நினைக்கிறேன்(இதில் மாறுபாடுகள்
இருக்கலாம்).
” மூட்டி வலிக்கு மருந்து இல்லை என்று சொல்லிட்டாங்க??”
” சிறுநீரக செயலிழப்பிற்கு மருந்து இல்லை என்று சொல்லி விட்டார்கள்??”,
“ அறிவியல் வளர்ச்சி இல்லாத மருத்துவம் சித்த மருத்துவன்”
” ஹார்ட் அட்டாக் கல்லுப்பே போதும்???”
போன்ற உரையாடல்கள், பொது மக்களிடம் சென்று அடையும் போது,
சித்த மருத்துவத்தின் மீது அவநம்பிக்கை எழும் என்று நினைக்கிறார்கள். அதை நானும் ஒத்து
கொள்கிறேன். அந்த அவநம்பிக்கை மக்கள் மனதில், சில வாரத்தை கடந்து நிற்காது; மறந்து விடுவார்கள்.
சித்த மருத்துவத்தில் அனைத்திருக்கும் மருந்து உண்டு என்று
நம்புவதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. உங்களிடம் எல்லாவற்றிற்கும் மருந்து
இருக்கிறது என்பதை உண்மையென்றால், அதை சமூகத்தின் முன் முறையான பிண்ணனி தகவல்களோடு
எடுத்து சொல்லுங்கள். அதை சொல்லாமல், என்னிடம் மருந்து உள்ளது!!மருந்து உள்ளது!!! என்று
நீங்களே சொல்வது எவ்வளவு நகைப்பிற்கு உரியதாக இருக்கும்.
சித்த மருத்துவத்தின் limitation பற்றி, நாம் தெளிவாக தெரிய
வேண்டியது அவசியம்
சித்த மருத்துவத்தில் உள்ள பிரச்சனைகளை இளங்கோ கல்லனை தெரிந்த
அளவிற்கு, நம்மில் எந்தளவு தெரிந்து இருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுப்பும்
நிதியை நாம் எந்தளவிற்கு, உபயோகம் செய்திருப்போம். நிதியாண்டின் கடைசி நாளில் செலவு
செய்ததாக கணக்கு காட்ட மட்டும், மாநாடு நடத்திய
அவலங்களை எங்கு போய் சொல்வது??
பி ஏ கிருஷ்ணன் கேட்ட yes or no போன்ற கேள்விகள், விவாதங்களில்
நிச்சயமாக தவிர்க்க பட வேண்டியவை. அவற்றின் பதிலை வைத்து, ஒரு மருத்துவத்தின் மீதான
விவாத்தை நகர்த்தி செல்வது அபத்தமானது. அந்த கேள்விகளை, சிவராமன் நிதானத்துடன் அருமையாக .கையாண்டார்.
தேள்கடிக்கு ஒத்த மருந்துகளை சித்த மருந்துவர்களிடம் ஏதிர்பார்க்க
முடியுமா?? என்று ஒருவர் கேட்டார். ” நிச்சயம் முடியாது ” என்று சட்டென்று சொல்லி இருப்பேன்.
பரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையை புரியாமல் கேட்கப்பட்ட கேள்வி என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு நிலப்பகுதிகளுக்கு கிடைக்கும் மூலிகைகளை பொருத்தே, ஒவ்வொரு நோயிற்கான மருந்துகள்
தீர்மானிக்க படுகின்றன. எடுத்துகட்டாக, சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு vitex agnus
castus என்ற ,மூலிகை மருந்து வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்ட மூலிகை
நமது ஊரில் கிடைக்காது. எனவே, நொச்சியை பயன்படுத்தி, அதே நோயினை குணப்படுத்தலாம்: குணப்படுத்தியும்
இருக்கின்றனர்.
நிச்சயமாக மருந்து செய்முறைகளையும், மூலிகை மற்றும் தாது
சரக்குகளையும் ஒழுங்கு முறைப்படுத்த அரசு ஆவணப்படுத்த வேண்டும்.
எழுத்தாளர்கள் பி.ஏ கிருஷ்ணன், ஆழி செந்தில்நாதன் மற்றும்
மருத்துவர் முருகன் வைத்த கருத்துகளை முழுவதும் புறக்கணிக்க இயலாது. நவீன உலகத்திற்கு
ஒட்டத்திற்கு ஏற்ப, நமது மருந்துகளையும் அறிவியலுக்கு உட்படுத்த வேண்டும். அதை விடுத்து,
சித்த மருத்துவத்தை ஏன் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்கேள்வியினால் புண்ணியமில்லை.
அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை மருத்துவர் சிவராமன் தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்தியாவில் ஆராய்ச்சி துறைக்காக செலவிடப்படும் தொகை GDP
யில் 1 சதவீத்த்திற்கு குறைவு. அப்படி இருக்கையில், அறிவியல், விஞ்ஞானம், வானியல் ஆகிய
துறைகளை தாண்டி சித்த மருத்துவத்திற்கு மிக சொற்ப பணமே கிடைக்கும். அதை கொண்டு எவ்வாறு
ஆய்வு செய்வது??? தனியார் நிறுவனங்களுடன் அரசும் கூட்டு முயற்சியாக ஆய்வு செய்ய வேண்டும்.
அறிவியல் பூர்வமான ஆய்வுகளை சித்த மருத்துவர்களால் மட்டும்
எடுத்து செல்ல இயலாது. மற்ற துறை வல்லுனர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.
அதோடு மட்டுமல்லாமல், நவீன ஆய்வுகளுக்கு ஏற்ப நமது உள்கட்டமைப்பு வசதிகள் பெருகவில்லை.
சித்த மருந்துகளை அறிவியலுக்கு உட்படுத்துவதில் உள்ள கடினத்தை
அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர் குறைந்த பட்ச புரிதலை, இந்த
நீயா நானா ஏற்படுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
சித்த மருத்துவம் என்ற தேரினை சித்த மருத்துவர்கள் எனும்
வடத்தினால் மட்டும் இழுத்தால் நகராது. சித்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள், வரலாற்று
ஆய்வாளர்கள் ஆகிய வடங்கள் அனைத்தும் சேர்ந்து இழுத்தால் மட்டுமே சித்த மருத்துவம் வள(நக)ரும்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்