Saturday, September 30, 2017

சித்த மருத்துவ தேர்வு கேள்விகள்- சில எதிர்வினைகள்


கோலம் போட வேண்டும் என்றால், ஒரு புள்ளியிலிருந்து தான் தொடங்க வேண்டும். ஆனால், அத்தொடக்க புள்ளியை, எவ்விடத்தில் ஆரம்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை!!!

சித்த மருத்துவ அலுவலர் தேர்விற்காக அறிவிப்பு வெளிவந்த உடனே, நண்பர்களுக்காக தொலைபேசி வழியாக கேள்விகளை கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்!!!

நடைமுறை சாத்தியங்களை, ஒப்பிட்டு பார்க்கும் போது, நிறைய பிரச்சனைகள் இருந்ததை உணர்ந்தேன். ஆதலால், பாடம் வரியாக வினாக்களை எடுக்கலாம் என்று எண்ணி ஆரம்பித்தேன்.

ஆனால் ,அனைத்து பாடங்களையும் எடுப்பேன் என்று நம்பிக்கையில்லை!!! ஆனால் மாதிரி வினாத்தாள் வரை சிறப்பாக முடித்து விட்டேன் என்று எண்ணி கொள்கிறேன்!!!

வினாத்தாள் எடுப்பதற்கு, காரணம் நண்பர்கள் மட்டுமல்ல!!! அதை தாண்டிய வெளி காரணம் உண்டு. அது பொதுவெளியில் வேண்டாம் .உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!!!

இது சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று எண்ணுவதில் உடன்பாடில்லை!!! தனி மனித வாழ்வியல் பொருளாதார வளர்ச்சிக்கே உதவும் !!! பொது நல சேவை என்பதெல்லாம் போலி பிம்பங்களே!!!

தேர்வுக்கு எப்படி படிப்பது, எவ்வகையில் ஆரம்பிப்பது, அதன் வரும் பிரச்சனைகளை களைவது எப்படி??? போன்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளை உடைய மருத்துவர்களுக்கான சிறிய தூண்டிலே!!! பயிற்சி மையங்கள் செல்ல முடியாதவர்களுக்கு சிறிய முன்னெடுப்பு!!! குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும், இருக்கும் நேரத்தில் சிறப்பாக படிப்பதற்கான சத்திராயுதம்!!! இதை தாண்டி ஒன்றுமில்லை

மாதிரி வினாத்தாளிற்கு உதவிய மருத்துவர்கள் வித்யாபதி மற்றும் விக்ரம் குமார் ஆகிய இருவருக்கும் நன்றிகள்!!! இச்செயலுக்கு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!!

மொத்த வினாத்தாளையும், ஒன்று திரட்டி, மின்னூல் வெளியிட திட்டமிட்டுள்ளேன்!! வருங்கால தேர்வுகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்!!!

இதற்கு இடையேயும், சில வன்சொற்களும் வந்து விழுந்தது.. “ இவ்வளவு கேள்விகளை எடுக்கும் அளவிற்கு வெட்டியாகவாக இருக்கிறாய்??” என்பது தான்!!!

எனக்கான பணிச்சுமை அதிகம் தான்!! அன்றாட அலுவல்களை கடந்து, வார இறுதி டின்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச வகுப்பும் எடுத்து கொண்டிருக்கிறேன். மருத்துவமனையின் சார்பில், 10-15 பள்ளிகளுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கி உள்ளேன்!!!

இருக்கின்ற நேரத்தை சிறப்பாக பயன்படுத்தினேன்!!! பெரும்பாலும் இரவு 11-12 மணிக்கு தான் தூங்க செல்வேன்!!! தமிழில் கணிணியில் தட்டச்சு மிகவும் எளிது!!! இதனால் தான் என்னால் விரைவாக செய்ய முடிந்தது... வாங்கிய சில புத்தகங்களும், வார பத்திரிக்கைகளும், தினசரிகளும் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கிறது, படிக்க படாமல்!!!

வாழ்க்கைன்னா சில அடிகள் வீழத்தான் செய்யும், அதை தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்!!!” என்று கடந்து செல்ல வேண்டியது தான்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, September 29, 2017

சித்த மருத்துவ தேர்வு- மாதிரி வினாத்தாள்


சித்த மருத்துவர்களுக்கு, அன்பு வணக்கங்கள் !!! வருகின்ற அக்டோபர் 8 ம் தேதி தேர்வு எழுத இருக்கின்ற மருத்துவர்களுக்கு, இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!!!

கடந்த இரு மாதங்களாக, பாட வாரியாக மாதிரி வினாத்தாளை தயாரித்து அளித்து வந்தேன். உடற்கூறு மற்றும் மருந்து செய் கலையும் இயலும் ஆகிய இரண்டை தவிர்த்து, பிற 17 மாதிரி வினா-விடைத்தாளை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறோம்!!!

இதன் கடை நிலையாக, முழுமையான மாதிரி வினா- விடைத்தாளை தயாரித்துள்ளேன்!!! என்னுடைய பல அலுவல்களுக்கு இடையேயும், இப்பணியை முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சித்தேன்!!! சில தவறுகள் இருக்கலாம்!! பொறுத்தருள்க!!

முடிந்தால், OMR sheet வாங்கி, 2.30 மணி நேராக தேர்வாகவே எழுதினால் சிறப்பு!!! இதிலுள்ள கேள்விகள் வரலாம்/வராமலும் போகலாம்!!! ஆனால், கேள்விகளின் வடிவடிப்பையும், கேள்விகளின் ஆழத்தையும் புரிந்து கொள்ளவே, இத்தகைய மாதிரி தேர்வுகள்!!!

https://drive.google.com/…/fol…/0B5w2UPmrNSHRUXZlZmV1QkxPWXM என்ற google drive இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலலாம். மேலும் MRB AMO SIDDHA 2017 என்ற முகநூல் குரூப்பிலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்.

தாங்களுடைய மேலான கருத்துகளையும், மதிப்பெண்களையும், 9344051031 என்ற தொல்லைபேசி எண்ணிற்கோ, rameshkumar@doctor என்ற முகவரிக்கோ தெரிவிக்கவும்!!!

கடைசியாக ஒன்று தான்!!!!

உலகம் விசலமானது!!! உங்கள் பார்வையை அரசு பணியை தாண்டியும் கவனம் செலுத்துங்கள்!! நாம் கடக்க வேண்டிய பாதைகள் ஏராளம்!!!! அரசு பணியே சுபிட்சமானது என்ற உங்களை சுருக்கி கொள்ளாதீர்கள்!!!! பாதை கரடுமுரடானது தான்!!! ஆனால், முதல் முள்ளை யார் தான் களைவது!!!

வாழ்க்கையும் சித்த மருத்துவமும் வளமாக…….
வாழ்த்துகளுடன்……

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, September 26, 2017

ஆசிரியர் பணியும் அசுசையும்


பன்னெடும் காலமாக, ஆசிரியரின் மீது அசுசை இருப்பது உண்மை. அந்த எண்ணம் இப்போது தொடங்கியது அல்ல!!! பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கிய புரிதல்.

என்னுடைய உறவினர்கள் பல பேர் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து பணியாற்றி கொண்டிருப்பவர்கள். ஆதலால், என்னையும் ஆசிரியர் பணிக்காக படிக்க சொல்லி வற்புறுத்தல்களும் நடந்தது. ஆனால், என் மனம் வளைந்து கொடுக்கவில்லை.

இப்புரிதலுக்கான காரணங்களை, இருவகையான பிரித்து புரிந்து கொள்ள முயல்கிறேன். ஒன்று அக காரணம், மற்றொன்று புற காரணங்கள்!!! புற காரணங்களுக்கான விளக்கங்களை, நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை!! ஆனால் அக காரணங்களை, நான் தான் விளக்க வேண்டும்.

எந்தவொரு விஷயத்தினை, என்னால் எளிதாக புரிந்து கொள்ள இயலும் (அப்படி தான், நான் நினைத்து கொண்டிருக்கிறேன்). ஆதலால், ஒரு விஷயத்தை விளக்கி சொல்லி கொடுக்கும் ஆசிரியரின் செயல், எனக்கு தேவையில்லாமலே போய் விட்டது!!!

இதற்கு நேர் எதிராக, எனக்கு தெரிந்த விஷயத்தை, மற்றொருவருக்கு விளக்க தெரியாது!!! என்னுடைய மிகப்பெரிய மைனஸாகவே கருதுகிறேன். இதனால் ஆசிரியர் தொழிலுக்கு செல்லவும் விருப்பமில்லை!!!

இதனை முழுவதும் உடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணினேன். அதற்கு ஏற்றாற் போல், வார இறுதி நாட்களில், இலவச TNPSC பயிற்சி வகுப்புகளை எடுத்து கொண்டிருக்கிறேன்!!!

இந்த இலவச வகுப்புகளால், சிறிதளவு மனநிம்மதியை பெற முடிகிறது. அது போல், பிறருக்கு கற்பிக்கும்/விளக்கும் திறனை மேம்படுத்தி உள்ளேன்!!!! இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஆனால், ஆசிரியர் தொழிலின் மீதான அசுசை மட்டும் இன்னும் மாறவில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, September 11, 2017

போட்டி தேர்வு குறித்த பயங்களும், அதன் உளவியலும்


வார விடுமுறை நாட்களில், அன்பு பாரதம் இலவச பயிற்சி மையத்தில் மூலமாக, வகுப்புகள் எடுப்பது வழக்கம்!!!! அதில் TNPSC யின் Group 2A, VAO, Group IV போன்றவற்றிற்கு இலவச பயிற்சி அளித்து வருகிறோம்!!!

TNPSC தாண்டி, மற்றைய தேர்வுகளையும் எழுதுங்கள் என்று சொல்வேன்!!! கடந்த முறை TNPSC Group 2A வந்த போது, PGTRB யும் வந்தது. அதற்கு பலர் தகுதியிருந்தும், அத்தேர்விற்காக தயாராக பலருக்கு விருப்பமில்லை. அதே போல், கடந்த TRB யில் வெளிவந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கான விரிவுரையாளர் தேர்வுக்கு யாருக்கும் விருப்பமில்லை.

பணிக்கொடையும் அதிகம்; பட்டப்படிப்பு படித்த துறையில் இருந்து தான் வினாக்கள் வரும். தேர்வுக்கு, B.E மட்டுமே கல்வி தகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வாளர்களில், பல பேர், B.E முடித்தவர்கள். அதிலும் தமிழ்நாட்டின் பல முண்ணனி கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு முடித்தவர்கள். எனக்கு ஒரே ஆச்சரியம்!!!!

இந்த பிரச்சனை….. இக்குறிப்பிட்ட மையத்திற்கான பிரச்சனை/ குறிப்பிட்ட மாணவர்களின் பிரச்சனையாக என்று எண்ண வேண்டாம். தமிழ்நாடு முழுவதுமே, இப்பிரச்சனை இருப்பதாகவே உணர்கிறேன். சமூகத்தில் பல நபர்களிடம் உரையாடிய போது, இப்பிரச்சனையின் வடிவம் புரிந்தது.

கல்வி கட்டமைப்பு, கற்றல் முறை, கற்பித்தல் முறை, சமூக பார்வை, வாழ்க்கை புரிதல் என்று கல்வித் துறையில் பல இடர்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது. அதன் வெளிப்பாடாகவே இதனை புரிந்து கொள்ள முயல்கிறேன். இதற்கு ஒரு புள்ளியே காரணம் என்று கூற முடியவில்லை என்றாலும், பல புள்ளிகளின் ஒன்றை பிரச்சனையாகவே, இப்புறக்கணிப்பை எடுத்து கொள்கிறேன்.

இப்பிரச்சனையின் உண்மையான ஆழத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால், சமீபத்தில் வெளியான PGTRB தேர்வு முடிவுகளே பார்த்து கொள்ளலலாம். சுமார் 2000 காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வில், தகுதி மதிப்பெண் பெற்ற தேர்வர்களின் சதவீதம் பாத்தால் புரியும்!!!

பள்ளி படிப்பை முடித்த பிறகு, ஏதேனும் ஒரு துறையை எடுத்து, இளங்கலையை முடிக்கிறோம். ஆனால், அந்த பாடத்தின் இருந்து வினாக்கள் கேட்கப்படுமானால், அத்தகைய தேர்விற்கு பின்வாங்கவே செய்கிறோம். இப்பிரச்சனையை, இரண்டாக பிரித்து ஆய்வு செய்வது அவசியம். ஒன்று மாணவன் சார்ந்தது; மற்றொன்று கல்வி துறையை சார்ந்தது;

இப்பிரச்சனையின் காரணங்களை பட்டியிடுவதில், பல்வேறு சிக்கல்களை உணர்கிறோம். ஆனால், இப்பிரச்சனையின் காரணத்தை களைவதே வளமான சமூகத்தின் தொடக்க புள்ளியாக இருக்கலாம்.

இல்லையென்றால், 12 வருட பள்ளி பருவ படிப்பு தவிர்த்து விட்டு, IIT_-JEE, NEET போன்ற தேர்வுகள் வருவது காலத்தின் கட்டாயமாகி விடுகிறது. இத்தேர்வுகள் திறமையான மாணவனை தேர்ந்தெடுத்து விடுமா??? என்பது மற்றொரு விவாதமே!!!

நடைமுறைக்கும், புத்தக புழுவிற்கு இடையேயான இடைவெளியை குறைப்பதன் அவசியத்தை உணர வேண்டி உள்ளது!!!

TNPSC VAO தேர்விற்கு, ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வரை தான் கேள்விகள் கேட்கப்படும் என்றாலும், அதற்கு பயிற்சி நிலையங்கள் செல்ல வேண்டிய நிலையிலே, நாம் உள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் ஒரு திட்டத்தின் நோக்கம் தோல்வியடைவது, அதன் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளே!!! அதை புரிந்து கொள்ளாமல், புதிது புதிதாக திட்டங்கள் தீட்டுவதில் பயனில்லை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, September 7, 2017

இடையில் தொய்வு ஏன்???


       மருத்துவ தேர்வு வாரியம் அறிவித்த, உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதமே மீதமுள்ளது. தேர்வு அறிவித்த நாளிலிருந்து கணக்கிட்டால், 40 நாட்களை கடந்து விட்டோம். பாதி கிணற்றை தாண்டி விட்டோம்!!! மீதியை எப்படி தாண்டுவது??

தேர்வு அறிவிப்பு வெளிவந்தவுடன், தன்னம்பிக்கை மிகுந்து படிக்க ஆரம்பித்து இருப்பீர்கள்!!! ஆனால், காலங்கள் கடந்து செல்ல செல்ல, தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து, பூஜ்ய நிலையை உணர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம்!!! அனைவருக்கும் இம்மனநிலை வந்திருக்காது. ஆனால் மூன்றில் இருவர், இம்மனநிலைக்கு வந்திருப்பீர்கள்!!!

அதிலும் குடும்ப வாழ்க்கையில் இணைந்தவர்கள், பொருளாதாரத்திற்காக வேறொரு பணியில் இருப்பவர்கள், இளமை வயதை கடந்தவர்களுக்கு, எளிதாக நம்பிக்கை இழந்து விட வாய்ப்புகள் அதிகம்!!! மாறாக, கல்லூரிகளில் தங்கி படிப்பவர்கள், முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, இம்மனநிலை வர வாய்ப்புகள் குறைவு!!!

இத்தகைய மனநிலை, நம்முடைய தேர்வுக்கு மட்டுமல்ல!!! ஒட்டு மொத்த போட்டி தேர்வாளர்கள் அனைவருக்குமான மனநிலை!!! மற்ற தேர்வாளர்களுக்கு வெவ்வேறு தேர்வுகள் இருக்கும். ஆனால், அரசு மருத்துவராக பணிபுரிய ஆசை பூண்டால், இதை விட்டால் வேறு வழியும் இல்லை!!!! எதிர்காலத்தில் வரும் அடுத்த தேர்வை நோக்குவதை விட, இன்றைய தேர்வை மட்டும் நம்புவோம்!!!

இம்மனச்சோர்விற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்!!!

முதலில் நம்முடைய பாடங்களை சொல்லலாம். நிறைய தரவுகள் மானப்பாடம் செய்யும் முறையிலே உள்ளது. மேலும் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையான தரவுகளையும், நாம் மனப்பாடம் செய்தே பழகி விட்டோம்!!!! நம்முடைய பாட நூல்களை பலமுறை படித்திருப்போம்!!! மேலும் மேலும் அதையே படிக்கும் போது, அதன் மீதான வெறுப்பு எளிதாக தொற்றி கொள்ளும்!!!! நமக்கு பிடித்த திரை இசை பாடலாக இருந்தாலும், தொடர்ந்து கேட்கும் போது, அதன் மீது வெறுப்பு வந்து விடும் அல்லவா???

அடுத்தது….. படிக்கும் முறை- நாம் பெரும்பாலும், மனப்பாடம் செய்தே பழகி விட்டோம்!!!! பாடங்களை புரிந்து கொண்டு, படிக்க வேண்டும் என்று எண்ணியதே இல்லை!!! மானப்பாடம் செய்வதையே திறமையானவன் என்ற புரிதலும், சமூகத்தின் அழமாய் பதிந்துள்ளது!!!! பல்கலை கழக தேர்வுகளுக்கும் படிக்கும் முறையும், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் முறையும் வெவ்வேறானவை!!! இரண்டும் ஒன்றே என்ற புரிதல் அபத்தமானவை!!!!

அடுத்ததாக படித்து விட்டு, புத்தகத்தை திருப்பி பார்க்கையில், படித்தவைகள் அனைத்தும் மறந்து விடுதல்!!!! மாதிரி தேர்வுகள் எழுதும் போது, மதிப்பெண் குறைதல்!!!!

மறப்பது மனித இயல்பு, அதிலும் பாட புத்தகங்களை படித்து நினைவில் வைத்து கொள்வதென்றால் எளிதான என்ன???? ஒரு புத்தகத்தை படித்து விட்டு, மூன்று நாட்களில் திருப்பி பார்க்கையில், 30-50 சதவீதம் மட்டுமே நினைவில் இருக்கும் என்பது உளவியல் கூறும் உண்மை. அதிலும் ஒரு வாரம் கழித்தால், 10 சதவீதம் மட்டுமே நினைவில் நிற்கும். தேர்வு நாளன்று காலையில், புத்தகங்கள் அனைத்தும் வெறுமையாக இருப்பது போன்று தோன்றும்!!! ஆனால், தேர்வு அறைக்கு சென்றதும், அனைத்தும் நினைவுக்கு வரும்!!! பதற்றம் அடையாமல் இருந்தால்!!!

இது உங்களுக்கு மட்டுமான பிரச்சனையாக கொள்ள வேண்டியதில்லை. ஒட்டு மொத்த சமூகத்தில் உள்ள அனைத்தும் தேர்வாளர்களுக்கு உள்ள பிரச்சனை!!!! அதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்!!! இப்படி குழப்பி கொள்ளாமல் இருந்தாலே, மாதிரி தேர்வுகளை எளிதாக கடக்க இயலும்!!! மேலும் மாதிரி தேர்வுகளில் வரும் வினாக்களே, உண்மையான தேர்வில் வர வேண்டும் என்று அவசியமில்லை!!!!

அடுத்தது…. தனிநபர் பிரச்சனைகள் ஏராளம். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, குழந்தைகள், பொருளாதாரம், கணவன் மனைவி, வீட்டு பிரச்சனைகள் என ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் உண்டாகும் கவன சிதறல், தன்னம்பிக்கை குறைக்க செய்யும்!!! பணிக்கு செல்பவர்களுக்கு இதே மனநிலை தான்!!!

அதுபோல்…. முதுகலை படிப்பவர்கள் மற்றும் சமீபத்தில் படித்த முடித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள் என்றும் எண்ண வேண்டாம்!!! கடந்த தேர்வில் சரிபாதியாக தேர்ச்சி பெற்றவர்கள், பட்ட படிப்பு முடித்து சில காலம் கடந்தவர்களே!!!

இவைகள் களைவது என்பது சற்று சவலான காரியம்!!! இது தேர்வுக்கு மட்டுமல்ல!!! வாழ்க்கையின் அனைத்தும் இடங்களில் வரும்!!! முக்கியமான மண வாழ்க்கையில்!!!

ஒன்று. ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை களைய முற்படுவது. மற்றொன்று. வேறொன்றை வைத்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது!!!!

ஏற்கனவே சொன்ன இரண்டு விஷயங்களை தான் திரும்ப சொல்ல போகிறேன். ஒன்று. எதிர்கால கிடைக்கும் போகும், சம்பளம், மரியாதை, அங்கிகாரம் ஆகியவற்றை மனதில் நிறுத்தினால், தன்னம்பிக்கை கிடைக்கும்!!!! மற்றொன்று. சக போட்டியாளர்களின் மீதான பொறாமை குணம்( இது தவறான எண்ணமே. வேறு வழியில்லையே)!!!

நீங்க எளிதாக சொல்லிட்டு போய் விடுவீங்க!!!! படிக்கிற எங்களுக்கு தானே தெரியும்!!! அறிவுரை சொல்வது எளிது!!! அதை கடைபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நன்கறிவேன்!!! முயற்சிக்கு பாருங்கள்!!! முயன்றால் முடியாதது எதுவுமில்லை!!!!

சில அறிஞர்களின் பொன்மொழிகள்

/////இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது.-- ஸ்டீபன் ஹாக்கிங்///////

///////இந்த நொடியில் உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்துவிடுகிறது.---- ஒப்ரா வின்ஃபிரே/////

அப்புறம் என்ன!!! வெற்றிக்கனி கண்களுக்கு புலப்படுகிறதா!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்