Friday, January 26, 2018

குடியரசு தின வாழ்த்துகள்!!!!


இந்தியனாய், இந்தியாவை ஆள்வதற்கு அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்திய நாளை, இத்தருணத்தில் நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன்!!!

இந்தியனின் தலைமைப்பண்பு மீது, மேற்கத்திய உலகத்திற்கு இருந்த ஏளனப்பார்வை இன்று வரை மாறியதாக தெரியவில்லை. இதே மாதிரியான கேள்வியும் சுதந்திர வேட்டை தருணத்தில் இந்தியாவின் மீதும் வைக்கப்பட்டது. 1920-30 வாக்கில், அதற்கான பதிலடியும் இந்தியாவிலிருந்து அளிக்கப்பட்டது.

நம்மை.... நாமே ஆள்வதற்கான அரசியலமைப்பு சட்டத்தினை வடிவமைப்பதற்கு சுமார் 3 வருடங்கள் ஆகின. பல்வேறு நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டது என்ற விமர்சனம் இருந்தாலும், பல்வேறு இனம், மொழி, மதம், கலாச்சாரம் உள்ள மண்ணை சட்டத்தின் வயிலாக கட்டமைப்பது என்பது எளிதான செயலன்று!!!

காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை அரசியலமைப்பு சட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிகழ்கால உண்மையையும் மறுக்க இயலாது!!!

இத்தருணத்தில், இரு விஷயங்களை முக்கியமாக கருதுகிறேன்.

1. சாதி,சமய, அரசியல் சார்பற்ற மற்றும் நேர்மையான மக்கள் பிரிதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. மற்றவர்கள் தவறு பண்ணுகிறார்கள் என்பதற்காக, நாமும் தவறு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய பணியை சிறப்பாகவும், நேர்மையாகவும் சிறப்பாக செய்தாலே போதும்.

சமூக மாற்றம் என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் தனிமனித மாற்றங்களால் மட்டுமே வெற்றியடைய முடியும்.

நண்பர்களுக்கு..... இனிய குடியரசு தின வாழ்த்துகள்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

இன்றைய பொருளாதார சூழ்நிலை


தேசிய பங்கு சந்தையான நிப்டி 11,000 புள்ளிகளையும், மும்பை பங்கு சந்தை 36,000 புள்ளிகளை கடந்து நிற்கிறது. சின்ன சின்ன சரிவுகளை சந்தித்தாலும், மெதுவாக, பங்கு சந்தை புள்ளிகள் அதிகரித்து வருகின்றன. கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான்!!!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மீது முதலிட்டாளர்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதே!!!! இதற்கு ஏற்ப உலக பன்னாட்டு நிதியம், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்பதே உண்மை.

உலக பொருளாதார நிலைமை மந்தமாகவே இருக்கிறது. இந்தியாவிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மந்த நிலைமை போக்க,நிதி முதலீடு அவசியம் என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன்.

ஏற்கனவே வரா கடன்களினால் பாதிக்கப்பட்ட வங்கிகள், மீண்டும் கடளிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை குறைந்தபட்சமாக ஈடுகட்ட, மத்திய அரசும் ஒன்றரை லட்ச கோடிகளை வங்கிகளுக்கு அளித்துள்ளது. மேலும் பொது துறை நிறுவனங்களுக்கு பண உதவி அளித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையால், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. அதிக மனித ஆற்றல் கொண்ட இந்தியாவில், வேலையில்லா திண்டாட்டம் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தவே வாய்ப்பு உள்ளது.

பொருளாதார மந்தமும், பண முதலீடு இல்லாத நிலையால், வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

ஏற்றுமதி குறைவு, கச்சா பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு, பண முதலீடு குறைவு, அமெரிக்காவின் பொருளாதார நடவெடிக்கைகள், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு என பல பிரச்சனைகள் உள்ளன. உலகமாயமாக்கலுக்கு பிறகு, இப்பிரச்சனைகளுக்கு தவிர்க்க முடியாது என்பதும் உண்மை!!!

பணவீக்கமும், சற்று அதிகரிப்பது போல் தோன்றினால், கட்டுக்குள்ளே இருக்கிறது. நடப்பு கணக்கு பற்றா குறையும், வருவாய்- செலவு இடைவெளியும் கட்டுக்குள் இருப்பதால், எதிர்காலத்தில் சீரடையும் என்று நம்புவோம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, January 23, 2018

புத்தக விற்பனையும், அதன் பின்புலமும்


////கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வாசகர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர். சுமார் 15 லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள், மாணவர்கள் ஆவார்கள். சராசரியாக கண்காட்சியில் 13 லட்சம் புத்தகங்கள் விற்றுள்ளது. ரூ.15 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.10 கோடி அளவுக்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது- பத்திரிக்கை செய்தி//////

ஒரு புத்தக வாசிப்பவனாக, மேற்கண்ட செய்தி பார்த்தவுடன், உடல் மெய் சிலிரித்து போய் விட்டது. மனம் பரவச நிலைக்கு சென்று விட்டது. புத்தக கண்காட்சி செல்லாமல், தவறு செய்து விட்டோமோ??? என்று எண்ண தோன்றுகிறது.

ஆனால், மூளை கசக்கி பிழிந்து காய போட்டு யோசித்தால், சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. புத்தக படிப்பவன், புத்திசாலி/அறிவாளி என்ற பொதுபுத்தியில் யோசித்தால், சற்று நகைச்சுவையாகவே தோன்றுகிறது.

சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும், புத்தக கண்காட்சிகள் நடைபெற்று தான் வருகிறது. எப்படி கணக்கிட்டாலும், மாத மாதம் எதாவது ஊரில் புத்தக கண்காட்சி இருக்கும். குறைந்தபட்சமாக, வருடத்திற்கு 20 லட்சம் புத்தகங்கள் விற்பனை வாய்ப்புகள் உண்டு. அதில் எப்படியும் 10 லட்சம் பேராவது புத்தகம் வாசிப்பார்கள் என்றால், தமிழர்கள் ஏன் வாழ்வியல் ரீதியாக/அறிவு சார்ந்து முன்னேறவில்லை????

தமிழன் அறிவு சார்ந்து முன்னேறி விட்டான் “ என்று சண்டையெல்லாம் போட வர வேண்டாம். தொழிற்நுட்ப சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் வளர்த்திருப்பது போன்று தோற்றமளித்தாலும், அறிவு தளத்தில் இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள் ஏராளம்.

தமிழ்கத்தில் வெளிவரும் புத்தகங்களில், 60-70 சதவீதத்திற்கு மேல், புனைவு சார்ந்தவையே!!! அதாவது சிறுகதை, நாவல், கவிதை. அபுனைவு சார்ந்த நூல்கள் என்பது மிக குறைவு. அபுனைவு நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போதும், அதற்கான வாசகர்கள் அதிகமாகும் போது, தமிழகமும் அறிவு சார்ந்து முன்னேறும் என்பதில் ஐயமில்லை!!!

நானும், அதிகமாக புத்தகம் வாசிப்பவன் தான்!!! அதற்காக, என்னை அறிவாளி என்று நீங்கள் நினைத்தால், கொஞ்சம் கஷ்டம் தான்!!!!

அறிவாளிகளில் அதிக பேர் புத்தகம் வாசிப்பவர்களே!!! ஆனால், புத்தகம் வாசிப்பவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்லர்!!! எந்த புரட்சியையும் ஏற்படுத்தாத, எந்த எழுத்தும்/புத்தகமும் (மன)குப்பையில் இடப்பட வேண்டியவையே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, January 17, 2018

மூலதனம்- மனித ஆற்றல் முக்கியம்


பொருள், பணம், தங்கம், நிலம் போன்றவற்றை முக்கியமான மூலதனங்களாக, நாம் எண்ணி கொண்டிருக்கிறோம்!!! அதனை தாண்டிய முக்கியமான மூலதனம், மனித சக்தி/ ஆற்றல். அதனால் தான், இந்தியாவை பார்த்து முன்னேறிய நாடுகளும் பொறாமை கொள்கின்றன. இந்தியா 2020 ல் வல்லரசாகும் என்று அப்துல் கலாம் சொல்லியிருந்தார்.

பணத்தை கடனாக பெற்று கூட, தொழில் தொடங்க முடியும். ஆனால், தொழிலுக்காக மனித ஆற்றல் உருவாக்க, குறைந்தபட்சமாக 18- 20 ஆண்டுகள் காத்திருங்க வேண்டும்.

பெரும்பாலும், 20-60 வயது வரை, உற்பத்தி செய்ய கூடிய வயதாக கருத இயலும். அதாவது நாட்டிற்கும்/வீட்டிற்கும் தேவையான முழுமையான உழைப்பினை தர முடியும். மேற்கத்திய நாடுகளில், பிறப்பு விகிதம் குறைந்து, வயதானர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இப்பிரச்சனையின் தன்மை விஸ்வருபம் எடுத்துள்ளது.

ஆனால், இந்திய மக்களின் சராசரி வயது 30 க்கு குறைவாகவே உள்ளது. இந்த இளைஞர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பினை அளிக்கவில்லையென்றால், சமூக பிரச்சனைகளை அதிகமாகவும் வாய்ப்புள்ளது என்பதும் நிதர்சனம்.

மேலை நாடுகளில் மனித ஆற்றல் குறைவாக இருப்பதால் தான், இந்திய நாட்டின் மனித ஆற்றல்/சக்தியை நாடி வருகின்றன. ஆனாலும், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. .கா. அமெரிக்கா நாடு, இந்திய மனித ஆற்றலை அதிகம் உபயோகித்து வந்தது. அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு குறைய ஆரம்பிக்க, H1B விசாவில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இன்றைய இளைஞர்கள்,இத்தகைய உண்மையான மனித ஆற்றலை புரிந்து கொள்வதில்லை. எதிலும் அவசரம்; யோசித்து முடிவெடுப்பதில்லை; பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்பதில்லை; இதனால், பல இளம் மனித உயிர்கள் /ஆற்றலை இழக்கிறோம்.

நேற்று வேதாரண்யம் ஆறுகாட்டு துறை பகுதியை சேர்ந்த 5 இளைஞர்களின் இழப்பு, இதன் தொடர்ச்சியே!!! அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி கொள்கிறேன். குடும்பத்திற்கு அனுதாபங்கள்!!!

செல்பி எடுக்கும் போது உயிரிழப்பு, ஆறு, குளம் மற்றும் கடல்களில் ஏற்படும் உயிரிழப்பு, பைக்கில் செல்லும் போது ஏற்படும் உயிரிழப்பு….. இப்படியாக பட்டியல் நீளும். தற்சமயத்தில், பெரும்பாலான பெற்றொர்கள், ஒரு குழந்தையே போதும் என்று முடிவெடுத்து விடுகிறார்கள். அத்தகைய குடும்பங்களில், இளம் தளிர்களின் உயிரிழப்பு, குடும்பத்தையே நிலை குலைய செய்து விடுகிறது.

இந்திய சமூகம், மனித ஆற்றலை அதிகம் பெற்று விட்டதாலோ என்னவோ, மனித ஆற்றலை புரிந்து கொள்ளவே இல்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, January 11, 2018

உழைப்பை மதிக்க தெரிந்த மனிதம் வேண்டும்


சில புரிதல்கள் எப்போதும், குழப்பம் நிறைந்தவை. ஒவ்வொரு மனிதனுக்கும் உழைப்பு ஏற்ப ஊதியம் கிடைக்க வேண்டியதை, பொருளாதார நீதி எனலாம். எந்த சமூகத்தினாலும், முழுமையாக பொருளாதார நீதியை கொடுத்து விட இயலாது. பிபிசியில் பணிபுரிந்து, தனது பதவியை ரஜினாமா செய்த கேரி கிரேசி தான், மிக சமீபத்திய எடுத்துக்காட்டு!!!! மிகச்சிறந்த நிறுவனமாக கருதப்படும் பிபிசியில் கூட, பாலினம் சார்ந்த பொருளாதார சமத்துவமின்மை நிலவுகிறது.

அப்படியிருக்கையில், இந்தியா போன்ற மூன்றாம் தர உலக நாடுகளில், பொருளாதார சமத்துவமின்மை மிக கடினமானதே!!!

நாம் பெரும்பாலும் உழைப்பை இரண்டு வகைகளில் புரிந்து கொள்கிறோம். ஒன்று. உடலுழைப்பு; மற்றொன்று மன உழைப்பு. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் இணைந்து உழைக்கின்ற புரிதலை, மூன்றாவது நிலையாக கூட எடுத்து கொள்ளலாம்.

இந்திய சமூகத்தில், உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு, குறைவான ஊதியமும், மன உழைப்பு சார்ந்த பணிகளுக்கு, அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது. இவ்வகையான சமத்துவமின்மை சரியா?? என்றால் நிச்சயமாக கிடையாது. ஆதலால், சமத்துவத்தை நோக்கிய பயணம் அவசியமாகிறது.

அறிவு திறன் மிகுந்த வேலைகளில் ஈடுபடுவர்களுக்கு, ஊதியம் அதிகம் என்பது இயல்பானதே!!! அவர்களின் திறமை, கல்வி ஆகியவற்றால், ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு, மேற்கண்டவை பெரும்பாலும் எதிர்பார்க்க படுவதில்லை. ஆதலால் ஊதிய நிர்ணயமும் குறைவு.

இன்றைய சூழ்நிலையில், அன்றாட கூலிகளின் தினசரி வருமானம் 250-500 வரை வேறுபடும். ஆனால், சேவை துறைகளில் ஈடுபடுவர்களின் தினசரி வருமானம், 500-1000 வரை உண்டு.

மேற்கத்திய நாடுகளில், பொருளாதார இடைவெளி குறைந்து காணப்படுகிறது. அதற்காக, உடலுழைப்பு மற்றும் மன உழைப்பு ஆகிய இரண்டுக்கும் சம ஊதியம் என்று எடுத்து கொள்ள கூடாது. இந்தியாவில் இவ்வகையான மாற்றங்களுக்கு சில காலங்கள் எடுத்து கொள்ளும்.

ஆரம்ப காலங்களில், மன உழைப்பு சார்ந்த பணிகளை நோக்கி அனைவரும் படையெடுப்பார்கள். அடுத்த நிலையாக, உடலுழைப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறையும். தொடர்ச்சியாக…….. உடலுழைப்பு பணியாளர்களின் தேவை அதிகமாகி, ஊதியமும் அதிகமாகும். இத்தகைய சமத்துவ நிலையை, சமூகம் தன்னை தானே சுவகரித்து கொள்ளும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடத்தில், இன்னொரு விஷயத்தை புரிந்து கொள்வது அவசியம்!!! உடலுழைப்பு என்பது கண்ணால் காண கூடியது. மன உழைப்பு என்பது கண்ணால் காண முடியாது. ஆதலால், உடல் உழைப்பு மட்டுமே கஷ்டம் என்ற புரிதல் பொது சமூகத்திடம் உள்ளது. இது தவறான புரிதல்!!! மன உழைப்பு சார்ந்தவர்களுக்கான கஷ்டங்கள் வெளி புரிதலுக்கு அப்பாற்பட்டது. அதனால் என்னவோ, மன உழைப்பு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகம் என்று எண்ண தோன்றுகிறது.

உழைப்பு சார்ந்த ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டிய அவசியம். ஆனால், வளரும் நாடுகளில், இச்சமநிலையை உடனே எதிர்ப்பார்க்க கூடாது. அதே போல், உடலுழைப்பு சார்ந்தவர்களை குறைத்து மதிப்பீடு செய்வதும் கூடாது; மன உழைப்புள்ளவர்களுக்கு, அதீத புகழ்ச்சியும் தேவையில்லாதது;

உழைப்பை மதிக்க தெரிந்த மனிதம் வேண்டும்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, January 10, 2018

உண்மையான திறமையை அங்கீகாரம் செய்யுங்கள்!!!


இந்தியா போன்ற பிற்போக்கு சமூகங்களில் உள்ள பிரச்சனைகள் ஏராளம்!!! அதில் ஒன்று திறமையை அங்கீகாரம் செய்தல்!!! ஒருவன் திறமையானவன் என்ற அங்கீகாரத்தை, ஏதேனும் ஒரு புள்ளியில் சமூகம் முன்னிறுத்துகிறது. அத்திறமையை, எந்தவித கேள்விக்கு உட்படுத்தப்பாடமல் மற்றையை அமைப்புகளாலும் எடுத்து கொள்ளப்படுகிறது.

ஒரு வகுப்பில் பல திறமையாளர்கள் இருப்பார்கள். ஆனால், நன்றாக மானப்பாடம் திறமையும், அழகான எழுத்து திறனும் மிக்க ஒருவரை திறமையானவன் என்ற அங்கீகாரத்தோடு பள்ளி வெளியே அனுப்புகிறது. அதே வகுப்பில், சதுரங்கம் விளையாட்டில் திறமையாக உள்ள ஒருவரை, நாம் அங்கீகாரம் செய்வதே இல்லை.

பொது சமூகம் சிலவற்றை திறமை என்று அங்கீகாரம் செய்துள்ளது. அதை தவிர்த்து பிறவற்றை கண்டு கொள்வதில்லை. இவையெல்லாம், இந்திய போன்ற வளரும் நாடுகளில் உள்ள முக்கியமான சமூக பிரச்சனை!!

இவ்வாறாக திறமையிருந்து அங்கீகாரம் கிடைக்காத நபர்கள், மனதளவில் பலவீனமடைந்து, பொது சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர். மாறாக, பொது சமூகத்தினால், அங்கீகாரம் செய்யப்பட்ட திறமைகளை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதனால், சமூகம், நல்ல திறமையாளர்களை இழந்து தவிக்க ஆரம்பித்து விடுகிறது.

சிறு வயதிலேயே நல்ல நீச்சல் வீரராக அறியப்பட்ட குற்றாலிஸ்வரன், இன்று தொழிற்நுட்ப துறையில் பணிபுரிந்து வருகிறார். இதே ஐரோப்பா போன்ற மேலைநாடுகளில் பிறந்திருந்தால், இன்று மிகப்பெரிய நீச்சல் வீரராக அறியப்படுவார். மேலைநாடுகளின் அத்தனை பண்புகளை பின்பற்ற துடிக்கும், இந்திய சமூகம், பகுத்தறிவை உபயோகம் செய்வதில்லை.

கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்து விட்டால் போதும்!! அந்த கிரிக்கெட் வீரரை, நன்றாக விளையாட விட்டாலும், பல போட்டிகளில் நிலைத்திருப்பார். நம்முடைய டிசைன் அப்படி!!!

சி என் ராவ் அவர்கள், பாரத் ரத்னா விருது பெற்ற பிறகு, அவரை யாரென்று தெரிய ஆரம்பித்தது. கைலாஷ் சத்யார்த்தியின் கதையும் அப்படி தான்!!! இந்த தேடலில் நானும் விதிவிலக்கல்ல!!!

இன்றைய சூழ்நிலையில், கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர், அரசியல் வாதி ஆகியோரை மிகச்சிறந்த திறமையாளர்களாக, இந்திய பொது சமூகம் வகுத்துள்ளது.

சமையல் துறையிலும் ,மிக சிறந்த வல்லுநர்கள் உண்டு!!! ஏன் தார் சாலை போடும் தொழிலாளர்களிலும் நேர்த்தியானவர்கள் உண்டு!!! இன்னும் சொல்ல போனால், கழிவுகளை தூய்மை செய்வதிலும் வல்லவர்கள் உண்டு !!! ஆனால், இங்கு மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொறியியல் வல்லுநர்களை மட்டும் திறமையானவர்களாக அடையாளம் காண்கிறேன். அனைத்தும் துறையிலும் வல்லுநர்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக, கைதட்டலாக கூட இருக்கலாம்.

இதை தாண்டி, இன்னொரு பிரச்சனையும் பொது தளத்தில் உண்டு!!! ஒரு துறையில், பல பேர்கள் திறமையாளர்களாக இருப்பர். கால ஒட்டத்தில், ஒருவர் மட்டும், திறமையாளராக அறியப்படுவர்!!! “ யார் ஒருவருக்கு, திறமையை பொதுயுலகத்திற்கு வெளிக்கொணர தெரிகிறதோ, அவரையே திறமையானவன்என்று பொது சமூகம் ஒத்து கொள்ளும்.

தனது திறமையை, வெளிப்படுத்த இயலாத மனிதனை, எளிதாக புறக்கணிக்கும். இத்தகைய புறக்கணிப்பு, சமூக வளர்ச்சியின் மோசமாக நிலையையே எடுத்து காட்டுகிறது.

ஒரு மனிதனின் திறமையை, பொது சமூகம் சொல்வதை அப்படியே ஒத்து கொள்ளாமல், நமது பகுத்தறிவை பயன்படுத்தி ஆராய்வது முக்கியம்!!!
இதில் ஆச்சரியமாக விஷயம் என்னவென்றால், இதை புலப்படுத்த வேண்டிய ஆசிரிய சமூகமே, பகுத்தறிவற்று இருப்பதே அவலத்தின் உச்சம்!!!

உண்மையான திறமையை அங்கீகாரம் செய்யுங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்