Saturday, December 30, 2017

புத்தாண்டு வாழ்த்துகள்!!!


2017 ஆம் ஆண்டு எப்படி கடந்தது என்று எல்லோரும் எழுதுறாங்க!!! நானும் எழுதுலாம் பார்த்தா…. ஒன்னுமே நியாபகம் இல்லை!!! எதாவுது உருப்புடியா பண்ணா தானே வரும்!?!?!?!?

எந்த எதிர்ப்பார்ப்புகள் இல்லாத தொடக்கத்தினால், எவ்வித வருத்தங்களும் பெரிதாக இல்லை!!! தினம் ஒரு மேனியாய், விடுமுறைகள் கூட அற்று, வருடம் உருண்டோடியது!!!

வருடத்தின் ஆரம்பத்தில், மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைத்தேன். மூலிகைகளின் எண்ணிக்கையை அதிகமாகவில்லையே தவிர, இருக்கும் மூலிகைகள் சிறப்பாகவே உள்ளது!! அதை இன்னும் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம்!!!

செம்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பரவிய டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு குடிநீர் வழங்கினோம்! பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையங்கள் என பட்டியல் நீண்டது. மனநிறைவு தந்தது!!! நிறைய அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததால், என்னுடைய நட்பு வட்டம் விசாலமாகியது!!!

மருத்துவ துறையின் தனிப்பயிற்சியில் பெரியளவு முன்னேற்றம் இல்லை. மந்த நிலையிலேயே தொடர்கிறது.

குடும்பத்தின் பொருளாதார சுமையை, பெரியளவு குறைந்ததுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் தங்கைக்கு ஆய்வக உதவியாளர் பணி கிடைத்தது. கூடுதல் மன மகிழ்ச்சியை தந்தது!!

புத்தக வாசிப்பில், நினைவில் வருவமளவிற்கு பெரிய பட்டியல் இல்லை. எமோஷனல் இண்டலெஜிண்ட், இந்திய ஞானம், கெளதம சித்தார்த்தனின் சில நூல்கள் என்ற சில மட்டுமே நினைவில் வருகிறது. படிக்க ஆரம்பித்து, பாதியில் நிற்பவை பல!!! இன்னும் வாசிப்பை கூட்ட வேண்டும்புத்தக வாசிப்பை தாண்டி, பொது வெளியில் வாசிப்பை அதிகமானால், புத்தக வாசிப்பு குறைந்துள்ளது!!!!

ஆண்டின் மத்தியில், மருத்துவ தேர்வு வாரியத்தின் மருத்துவ அலுவலர் தேர்வுக்காக, சுமார் 18 வினா-விடை தொகுப்பை எடுத்து தந்தேன்!! பல மருத்துவர்களுக்கு உதவி இருக்கும் என்று எண்ணுகிறேன்!!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின், group II A மற்றும் group IV ஆகிய இரு தேர்வுகளுக்காக இலவச வகுப்புகள் நடத்தினோம்!! அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு பாடங்களை எடுத்தேன்/ எடுத்து கொண்டிருக்கிறேன். இதுவும் மிகவும் மன நிறைவு தருகிறது. வார இறுதி விடுமுறை நாட்கள், பெரும்பாலும், இப்படியாகவே கழிகிறது!!!

தமிழ்நாடு அரசின் நிர்வாக துறை சார்ந்த நிறைய தகவல்களை கற்று வருகிறேன். திரைப்படங்கள் பார்த்து மாதங்கள் கூட ஆகிவிட்டது. முகநூல் மற்றும் கட்செவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்!!!

நண்பர்கள் குருமணிகண்டன் மற்றும் வித்யாபதி திருமணத்தினை தாண்டி, வெளி பயணங்கள் செல்லவில்லை. சுனில் அண்ணனின் தாத்தா நூற்றாண்டு விழாவிற்கு செல்லவும் வாய்ப்பு கிட்டியது!!! சென்னைக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், இரண்டு ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது!!!

புகைப்படம் சார்ந்த ஆர்வம் அதிகமாகி இருக்கிறது!! அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும்!!! ஒவிய தாகத்தை இன்னும் தொடங்கவே யில்லை!!! தமிழ் எழுத்து நடையில் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக எண்ணுகிறேன்

வெளியுலகத்தின் பார்வையில் வெற்றியின் குறியீடாக இருக்கும் எதுவும், என்னுடைய கால பெட்டகத்தில் இருக்காது!!! என்னுடைய தேடல் வெளியுலகம் சார்ந்தல்ல!! அக புரிதல் நோக்கியே பயணித்து கொண்டிருக்கிறேன்!!! 2017 ஆம் ஆண்டில், அகம் சார்ந்த புரிதலில் சற்று தன்னிறைவை அடைந்தாகவே உணர்கிறேன்!!!

வெற்றிகளை விட தோல்விகளே, என்னை அர்த்த படுத்துவதாக எண்ணுகிறேன்!!! அடுத்த வருடம் குறித்து, எந்த திட்டமும் இல்லை. பார்க்கலாம்!!! என்ன நடக்க போகிறது என்று!!!

அனைவரும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, December 12, 2017

புனைவுகளும் சமூக சிக்கல்களும்


எனக்கு புனைவுகள் மீது நம்பிக்கை எப்போதும் இருந்ததில்லை. ஆதலால், சிறுகதைகளுக்கும் பெரும் நாவல்களுக்கும், எனக்கு வெகு தூரம்!!!! ஆனால், வாழ்க்கையை அழகாக்க பல புனைவுகள் தேவைப்படுகிறது என்பதே நிதர்சனம்!!!

அதில் காதலும் திருமணமும் முக்கியம் என்பேன்!!! மனிதன் வாழ்க்கையில், பல விதமான வாழ்வியல் நடைமுறைகளை கடந்தே வருகிறான். அதில் ஒன்று தான், காதலும் கல்யாணமும்!!!

இதை, தினசரி செய்கைகளில் ஒன்றாக நினைத்து கடந்தால், ஒன்றும் பிரச்சனையிருக்காது. காதல் மற்றும் திருமணம் சார்ந்த சமூக புனைவு, அதனை சிக்கலாக்கி விடுகிறது. இதனை சார்ந்த வணிகமும், அதீத புனைவையே விரும்புகிறது.

காதல் சார்ந்த புனைவு இல்லையென்றால், இன்றைய திரைப்பட வளர்ச்சியும் கவிதை தொகுப்புகளும் இல்லாமல் இருந்திருக்கும். திருமணம் சார்ந்த புனைவு இல்லாமல் இருந்திருந்தால், அதனை சார்ந்த வணிகமும், ஜோதிடமும், திருமண அமைப்பாளர் முறை வளர்ந்திருக்காது….

ஆனால், மேற்கண்ட புனைவு இல்லாமல் இருந்திருந்தால், வாழ்க்கை ரசத்தை சுவைத்திருக்க முடியாது என்பதும் உண்மை!!!

புனைவுகள் தான், வாழ்க்கையை அழகாக்கின்றன. அந்த புனைவுகளே அதிகமாகும் போது, வாழ்க்கையை சிக்கலாகி விடுகின்றன. எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக்கி, காதலையும் திருமணைத்தையும் கேலி கூத்தாக்கி விடுகின்றன.

இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டியது அவசியம் தான்!!! ஆனால், இன்றைய அதீத புனைவு சார்ந்த புரிதல், இரத்த சர்க்கரை அளவை அதிகமாக்கி, வாழ்வியலையும் சமூகத்தையும் சிக்கலாக்கி விடுகிறது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, December 7, 2017

மன நிறைவும், மன கிலேசங்களும்


” மனநிறைவை தந்து விடும் செயல், உலகில் உண்டோ??? ” என்று பல நேரங்களில் எண்ணுவது உண்டு. நிரந்தரமாக மனநிறைவை தந்து விடும் செயல் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். ஆனால், தற்காலிகமாக, மனநிறைவை தந்து விடும் செயல்/நிகழ்வு உண்டென்றே கருதுகிறேன்.

வேலை தேடி கொண்டிருப்பவனுக்கு, அரசாங்க வேலை கிடைக்கும் போது, மனநிறைவு உண்டாகும். திருமணத்தினை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பவனுக்கு, திருமண நிகழ்வு மனநிறைவை தரலாம். அது போல், பிள்ளை பேறு, போட்டியில் வெல்லுதல், விளையாட்டில் சிறப்பு நிலை பெறுதல் என பட்டியல் நீளும். ஆனால், இவையெல்லாம், தற்காலிக மன நிறைவையே தரும்!!!

மாஸ்லோ படிநிலை தேவை(Maslow's hierarchy of needs ) அடிப்படையில், மேற்கண்ட அனைத்தும், தற்காலிக தீர்வுகளே!!! ஒரு தேவை கிடைத்து விட்டால், மற்றொரு தேவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.

எ.கா. வேலை கிடைத்தால் போதும் என்று போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்போம். போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று விட்டால், நல்ல துறை வேண்டும் என்று எண்ணுவோம். அந்த வேலை எளிதாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். அந்த வேலை, நமது விட்டுக்கு அருகிலோ இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். இப்படியாக விருப்பங்கள் மாறி கொண்டோ இருக்குமே தவிர, நிலைபெற்று முடிவாக, எதிலும் மனநிறைவு அடைய மாட்டோம்!!!

இது மனித எண்ணத்தின் தவறன்று!!! கால சூழ்நிலையில் அகப்பட்டு கொள்ளும், சுழ்நிலை கைதியின் தவறு!!! எதிர்ப்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை பெற, நாம் ஒன்றும் முனிவரல்ல!!! இத்தகைய முரண்பாடுகளே, வாழ்க்கை சுவராசியம் அடைகிறது. சரி அதை விடுங்கள்!!!

எனக்கும், மேற்கண்ட தற்காலிக மனநிறைவு ஏற்பட்ட தருணங்களும் உண்டு!!! இதையெல்லாம் தாண்டி, மனநிறைவு தரும் இன்னொரு விஷயமும் உண்டு!!! அது வேறொன்றுமில்லை!! புத்தக வாசிப்பு தான்!!!

தினமும் வாசிப்பின் மூலம், பல்வேறு தகவல்களை பெற்று கொண்டே இருப்பேன்!!! அதற்கு எல்லையும் கிடையாது!!! தகவல்கள் பெறாத நாள், முழுமையற்ற நாளாக கடந்து போனதாக உணர்ந்த தருணங்களும் உண்டு!!!

அதற்கு நேர் எதிர் மாறாக, சில தினங்கள் மனநிறைவினை பெற்று, தூக்கமற்ற இரவுகளாக கடந்த தருணங்களும் உண்டு!!! நேற்றைய தினம், தமிழ்நாட்டு நிர்வாகம் சம்பந்தமான தகவல்களை சேகரித்த போது, அம்மனநிறைவு ஏற்பட்டது.

இத்தகைய நிலை, ஏற்கனவே பல தருணங்களில் ஏற்பட்டதுண்டு. சித்த மருத்துவ தத்துவம், உளவியல், வாழ்வியல் புரிதல், இறை நம்பிக்கை புரிதல், மூடநம்பிக்கை சார்ந்த இறையியல், இந்திய தத்துவ ஞானம் என்று பட்டியல் அதிகமாக உள்ளது.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் –”

என்ற குறள் கூட உண்மை தான் போலும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, November 30, 2017

விளம்பரங்களும், அதன் மீதான வெறுப்புகள்


விளம்பர உத்திகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன என்பது உண்மை. ஆனால், அந்த உத்தி முறைகள், தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளதை, நிச்சயமாக ஏற்று கொள்ள முடியாது.

வேறொருவரை நபரை போன் மூலமாக தொடர்பு கொள்ள நினைத்தால்….. ரிங்க் போவதற்கு முன்னரே, சில விளம்பரங்கள் வருகின்றன. இது மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது. அதாவது 100 ரீசர்ச் செய்தால், இத்தனை நிமிடங்கள் இலவசம் என்கிறது. அவசரத்திற்கு போன் செய்யும் போது, இப்படியாக வந்தால்….. போன் செய்ய நினைத்தவரின் மனநிலையை எண்ணி பாருங்களேன்!!!

நிறுவனங்கள் தன்னுடைய ஆபர்களை, குறுங்செய்தி மூலம் அனுப்பி வந்தது. அதனை பெரும்பாலும் படிக்காமலே அழிக்கும் நிலை தான் இருக்கிறது. ஆதனால், அடுத்த படிநிலையாக, போன் செய்து ஆபர் சொல்லும் நிலையும் உள்ளது. இந்த தொல்லைகளினால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போன் என்றாலே, யாரும் எடுப்பதில்லை.

ஆனால் தான், நாம் மற்றொருவரை தொடர்பு கொள்ள நினைக்கும் போது, ரீங் வருவதற்கு முன்னர் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது மாதிரியான விளம்பரங்களை கேட்டு பிறகு தான், ரீங்க் போகும். இதெல்லாம் அப்பட்டமான தனி மனித மீறல்!!! அரசியலமைப்பு சட்டம்- சரத் 21 மீறுவதாகவே எண்ணுகிறேன். இது கண்டிக்க தக்கது!!!

அதன் அடுத்த படிநிலையாக, வேறொரு வகையான விளம்பரங்களை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

நான் ஏர்செல் நெட்வெர்க்கையை பயன்படுத்தி வருகின்றேன். அந்நிறுவனம் ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆதலால், தன்னுடைய சேவையை நிறுத்த போவதாக கூட புரளிகள் வெளிவந்தன. இது அனைவரும் அறிந்ததே!!!

நான் போன் செய்யும் போது, ரிங்க் ஆவதற்கு முன்னால், “ நீங்கள் நம்பரை மாற்றாமலே, ஐடியா/ வோடபோன் நெட்வெர்க்கை மாற்றி கொள்ளலலாம்என்று விளம்பரம் வருகிறது.

எந்த நெட்வெர்க்கை தேர்வு செய்ய வேண்டும் என்பது என்னுடைய தனி மனித உரிமை!!! இந்த நெட்வெர்க்கை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று யாராலும் கட்டளையிட முடியாது!!! ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரம், மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்று புரியவில்லை!!!

இந்த விளம்பரத்தை, ஏர்செல் நிறுவனமே, முன்னின்று செய்கிறதா?? அல்லது, ஐடியா/ வோடபோன் போன்ற நிறுவனங்கள் செய்கிறதா??? புரிந்து கொள்ள இயலவில்லை!!!

விளம்பரம் என்பது, நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்ட நிலையில், விளம்பரங்கள் செய்வதை தவறென்று கூறவில்லை. அதே சமயத்தில், அடுத்தவரின் தனிமனித உரிமை மீறுவதாக இருப்பது்ம், இதனை வாங்கியே ஆக வேண்டும் என்பது போன்ற வியாபார உத்திகளை, எவ்வகையில் சேர்ப்பதோ????

நிச்சயமாக!!! இன்னும் பத்தாண்டுகளில், விளம்பரங்கள் மீது அளவிட முடியாத வெறுப்பு வரும் என்பது மட்டும் உண்மை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, November 28, 2017

சினிமா நகைச்சுவை- சில புரிதல்


திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளை உற்று நோக்கும் போது, தற்காலத்தின் பல நகைச்சுவை காட்சிகள் அசுசை ஏற்படுத்துவதாக உள்ளது. சம காலத்தில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. (சந்தனத்தின் நகைச்சுவையே சிறந்தது என கொடி பிடிப்பவர்கள் சண்டைக்கு வர வேண்டாம்)

பொதுவாக நகைச்சுவை என்பது இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கருத்துரு சார்ந்தது; மற்றொன்று உடல் மொழி சார்ந்தது. பொதுவாக இரண்டுமே நகைத்தல் சுவையை தரக்கூடியது தான்!!!!!
ஆனாலும் இரண்டுமே கலவாத, அதே சமயத்தில் ஒட்டாமல் தண்டவாளத்தை போல் பயணிக்க கூடியது. விவேக்- வடிவேல், சந்தானம்- சூரி போன்ற இரட்டைகள், இதனை தெளிவுப்படுத்தும்.

கருத்துரு சார்ந்தது என்றால், பேசுவதின் மூலமாக நகைச்சுவை உண்டாக்கக் கூடியவை!!! அதில் விவேக் வல்லவர். அவரிடமிருந்து உடல் மொழி சார்ந்த நகைச்சுவையை அதிகமாக எதிர்பார்க்க இயலாது.

உடல்மொழி என்றால் வடிவேல் தான்!!! தனது உடல் நெளிவுகளினால் , நகைச்சுவையை ஏற்படுத்தியவர்; இவரிடமும் கருத்துரு இருக்கும்; ஆனால் குறைவாக இருக்கும்.

வடிவேலும் விவேக்கும் சம காலத்தில், திரைப்பட உலகத்தில் கோலோச்சியவர்கள்.. இருந்த போதிலும், காலங்கள் கடைக்கையில், விவேக்கினை விட, வடிவேலின் நகைச்சுவைகள் தான் அதிகமாக ரசிக்கப்படுகின்றன. அதாவது உடல் மொழி நகைச்சுவைகளே காலம் கடந்தும் நிற்கும். சார்லி சாப்ளின் இதற்கு உதாரணம்!!!

நடிகர் நாகேஷ்ஷின் நகைச்சுவையில் உடல் மொழி அதிகமாக இருக்கும். அடுத்த தலைமுறையில், கவுண்டர்-செந்தில் ஆகியோரின் நகைச்சுவை இருந்தது. இதிலும் கவுண்டமணியின் நகைச்சுவையில் கருத்துரு அதிகமாக இருக்கும். அதிலும் சிலவற்றில் வக்கிர புரிதல் நிலை உண்டு!!!

சம காலத்தில், அந்த இரட்டை நிலையாக, சந்தானம்- சூரியை எடுத்து கொள்ளலலாம். பெரும்பாலும் சூரி உடல் செய்கை சார்ந்த நகைச்சுவை செய்கிறது. சந்தானத்தின் நகைச்சுவை கருத்துரு சார்ந்தது. அதிலும் மற்றவரினை சிறுமை படுத்துவதன் மூலம், பொது மக்களினை சிரிக்க வைப்பது!!!

பெரும்பாலும் கருத்துரு சார்ந்த நகைச்சுவைகள் தான், காலத்தினால் அதிகமாக மாற கூடியவை. நகைச்சுவை வறட்சி/வெற்றிடம் ஏற்பட வாய்ப்பும் அதிகம்.

கருத்துரு சார்ந்த நகைச்சுவையின், சம கால புரிதல், ” மற்றவரை கீழ்நிலைப்படுத்துவதுஎன்ற புரிதல் நிலை நிற்கிறது!!! இந்த காரணத்தினால் தான், சந்தானம் உச்சம் பெற்றார் என்றாலும், இதுமாதிரியான நகைச்சுவை தரத்தினாலே, சந்தானத்தின் மீது வெறுப்பு நிலையும் வந்துள்ளது. சற்று ஆழ்ந்து நோக்கினால், நகைச்சுவையின் வக்கிர நிலையாகவே எடுத்து கொள்ளலலாம்!!!

இது மனநிலை என்பது, சந்தானம் என்ற நகைச்சுவையாளனின் புரிதல் நிலை மட்டுமல்ல!!! ஒட்டு மொத்த சமூகத்தின் நகைச்சுவை புரிதல் நிலையாக உள்ளது!!! அதிலும் இளைஞர் சமூகத்திடம் அதிகமாக உள்ளது!!!

ஒரு கூட்டத்தில் உள்ள ஒருவரை சிறுமைப்படுத்தப்படுவன் மூலம், தன்னை பெரிய ஆளாக/ சிறந்த நகைச்சுவையாளானக உருவகப்படுத்த முயற்சிக்கும் நபர்கள் அதிகம்!!!. மேலும், பெண்களிடம் வீரத்தை காட்டும் நிகழ்வாகவும், இப்புரிதல் நிலை நடைபெறுகிறது. இது கீழ்த்தரமான மனநிலைக்கு………. சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத நிலையே காரணம்!!!!

ஒரு செயலின் வெற்றி, ஒரு நல்லெண்ணத்தினால் முழுமை அடையுமே தவிர, கீழ்த்தரமான எண்ணங்கள் அல்ல!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, November 27, 2017

சிறு தெய்வ வழிபாடும், கலைகள் அழிவும்


நேற்றைய தினம், அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். கனமான மழைக்கு பிறகு, சிறுவர்- சிறுமியர்களின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனமான மழையினால், கூட்டங்கள் குறைந்து சேர்கள் காலியாக காட்சியளித்தது!!! மழை மட்டுமே காரணமா??? என்றால் நிச்சயமாக கிடையாது. மழை இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் 200 பேர் அதிகமாக வந்திருக்கலாம்!!!!

ஆக மொத்தத்தில்…… கோயில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை காண வரும் பொது மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சற்றே, 15-20 வருடங்களுக்கு முன் திரும்பி பார்க்கையில், சூழ்நிலையே வேறு!!!!

சரித்திர நாடகங்கள், குடும்ப நாடகங்கள், கூத்து பாடல்கள், சிலம்பாட்டம், திரைப்படம் என கலை நிகழ்ச்சிகளை காண வரும் கிராம மக்களின் எண்ணிக்கையை கணக்கிட இயலாது. ஏன்…. நானே, திரைப்படங்களை காண கோவிலுக்கு சென்று, இடம் பிடித்த தருணங்கள் கூட நினைவில் உள்ளது.

சுமார் 15-20 வருடங்களில், இத்தகைய கலாச்சார, பண்பாடு சார்ந்த சமூக மாற்றங்கள், நாம் அறியாமலே நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்நுட்ப வளர்ச்சியினால், கலைத்துறையில் பெரியளவு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை அறிவியலின் வளர்ச்சி என்பதா??? சமூக மாற்றம் என்பதா???? கலாச்சார, பண்பாட்டு சீரழிவு என்பதா?? புரியவில்லை. ஆனால் நடக்கும் மாற்றங்களை ஏற்று கொண்டே ஆக வேண்டும்.

பல சரித்திர நாடகங்கள், குடும்ப நெடுந்தொடர்கள் என அனைத்தும் தொலைக்காட்சிகளில் நிரம்பி வழிகின்றன. திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கள் மற்றும் இணையம் வழியே பெற்று கொள்ளலாம். மேலும் youtube வழியே அனைத்தும் கலைநிகழ்ச்சிகளையும், செல்போன் வழியே பார்க்கலாம். இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே, அனைத்தும் கலைநிகழ்ச்சிகளும், பரவி கிடக்கும் போது, எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்???? அதிலும் மிக துல்லியமான, தரத்தோடு கிடைக்கும் போது, எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்????

மேலும், மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த புரிதலில், சிறிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. சிறு தெய்வங்கள், காட்டு தெய்வங்கள், ஊர் தெய்வங்கள் ஆகியவற்றின் மீதான் நம்பிக்கை சற்று தாழ்ந்துள்ளதாக எண்ணுகிறேன். அதே சமயத்தில், பெரு தெய்வ வழிபாட்டில் இறை நம்பிக்கை அதிகமாகி உள்ளது., சமகாலத்தில், கார்ப்பரேட் சாமிகளின் வளர்ச்சிகளே, இதற்கு உதாரணம்!!!!

இதையெல்லாம் தாண்டி, மேற்கண்ட கலை நிகழ்ச்சிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்படுவதோ என்னவோ........ தமிழகத்தின் பராம்பரிய கலைகளும், தொழில்களும் தான்!!!! குயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கூத்து என எத்தனை பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் முழுவதும் அழியும் நிலையில் உள்ளது,

ஒரு கோயிலில் திருவிழா நடைபெறுகிறது என்றால், அதனை சார்ந்து ஒரு இணை பொருளாதாரம் இயங்கும். பல சரக்கு கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் என்று பல குடும்பங்களின் வாழ்க்கை, அந்த இணை பொருளாதாரத்தை சார்ந்திருந்தது. அந்த பொருளாதார சங்கிலி
அறுக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் மாறாக, மகா சிவராத்திரியில் நடைபெறும், மகா உற்வசம், இணை பொருளாதாரத்தின் மற்றொரு வடிவமாக மாறி உள்ளது.

மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாது!!!! மற்றெல்லாம் மாறுகின்ற உலக தத்துவம்!!! இவையெல்லாம் நல்லவையா??? கெட்டவையா??? என்பதனை காலம் தான் முடிவு செய்யும்.

முடிந்தால்….. கலைகளை அழியாமல் பாதுகாப்போம்!!! இல்லையென்றால், கலைகள் அழிக்கப்படுகிறது என்பதனை மட்டுமாவது தெரிந்து கொள்வோம்!!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்