Thursday, November 19, 2015

மருத்துவனின் பலிகடா நோயாளியா???

ஒவ்வொரு செயலையும், செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் நோக்கங்களை தெளிவான தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் வெற்றிக்கனியை எளிதாக எட்டி பிடிக்க முடியும். பல நேரங்களில், ” மற்றவர்கள் செய்கிறார்கள், நாமும் செய்து பார்ப்போம்….” என்று ஒழுகற்ற மனநிலையோடு தொடங்கிறோம்.

கல்வியின் நோக்கம் தான் என்ன?? ஒரு மனிதன் செம்மையாக வாழ்க்கை நடத்துவதற்கான வழிமுறைகள் கூறுவது எனலாம். ஆனால், நாம் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வதே என்று எண்ணி கொண்டிருக்கிறோம். பிறப்பின் நோக்கத்தை கண்டவர்கள் சித்தர்கள் ஆனார்கள். அந்த அளவிற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும், நோக்கத்தை தெரிந்து கொண்டு செயல் புரிவது  நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் தான் செய்யும் தொழிலின் நோக்கத்தையாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நான் மருத்துவனாக, ” நோயாளியின் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, படித்த சித்த மருத்துவத்தின் வழி தீர்வு காண முயல வேண்டும். இல்லையெனில் வேறொரு மருத்துவத்தில் நல்ல தீர்வு கிடைக்குமெனில், அந்த மருத்துவ முறைக்கு அனுப்பி விட வேண்டும் “ என்று எண்ணி செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். ஏனெனில் நோயாளிக்காகவே நான் சித்த மருத்துவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறனே தவிர, எனக்காக எந்த நோயாளியையும் பிறக்கவில்லை.

இன்றைய மருத்துவ உலகில், நடைமுறைகள் வெகுவாக மாறி விட்டது. நோயாளிக்காக மருத்துவன் என்ற நிலை மாறி, மருத்துவனுக்காக நோயாளி வாழ்வதும் பிறப்பதுமாக மாறி விட்டது  போல் தோன்றுகிறது. ” நான் கோடிகளை கொட்டி மருத்துவனாகி விட்டேன். ஆதலால், எனக்கு சிறு நூறுகளை பணிக்கொடையாக தர வேண்டும். நான் பல நூறு கோடிகளை போட்டு மருத்துவமனை கட்டி விட்டேன். ஆதலால், நோயாளி நிச்சயமாக அறுவை சிகிச்சைகளையும், பரிசோதனை செய்தாக வேண்டும் “ என்று நோக்கம்  மாறி விட்டது.

ஒவ்வொரு மருத்துவ முறைக்கு சில சிறப்பு அம்சங்களும் சில குறைகளும் இருக்கும். எந்தவொரு மருத்துவ முறையும், நோயாளிக்கு முழுமையான தீர்வை கொடுத்து விட முடியாது. எனவே நோயாளிக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முறையே (integrated system ) சிறந்த தீர்வாக இருக்கும். அதை விடுத்து, மற்ற மருத்துவ துறையை எதிரி போல் பாவிப்பது கடுமையானது. சீனாவில் இருப்பதை போல், பராம்பரிய சீன மருத்துவத்தோடு கூடிய ஆங்கில மருத்துவ முறை சிகிச்சை முறை இந்தியாவில் தோன்ற வேண்டும்.

அதெல்லாம் புரியாமல், என்னுடைய மருத்துவ முறையே சிறந்தது என்ற வெட்டி வேதாந்தகள் பேசுவதை நிறுத்த வேண்டும். மற்ற மருத்துவ முறைகளை போலிகள் என்று வாதிடுவது, மருத்துவ துறையை பணமாக மாற்றும் முயற்சியே தவிர வேறொன்று இல்லை. மருத்துவ படைப்பின் இலக்கணமே தவறாகி விடும்.

மருத்துவ படிப்பின் போது, மற்ற மருத்துவ துறை பற்றிய விவரங்களை கற்பிக்கப் பட வேண்டும். கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். அனைத்து மருத்துவ துறைகளும் இணைந்து, வெளிப்படையான கருத்து பரிமாற்றங்களோடு, ஒவ்வொரு நோயிற்கு வழி முறைகளை உருவாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.     
ஏற்கனவே இந்திய மருத்துவ துறையின் புள்ளி விவரங்கள் பல் இளிக்கின்றன. இந்தியன் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் 20 முதல் 30 சதவீதம் வரை மருத்துவதுறைக்காக செலவிடுவதாக கூறுகின்றனர். அதிலும் 70 சதவீதம் மக்கள் , தன்னுடைய சொந்த செலவிலே மருத்துவ சிகிச்சைகளை பெறுகின்றன. மருத்துவ துறைக்கு, 2014-15 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் அளவு நிதியே இந்தியா ஒதுக்கி உள்ளது. உலகின் அனிமீயா பாதிப்பில் இந்தியாவில் தான் பெருமளவு உள்ளனர்.

இல்லெயெனில், மருத்துவ துறை வளர்ச்சியடைந்தாலும், இந்தியா நோயாளி நிலை கவலைகிடமாகவே இருக்கும். இரண்டு திராவிட ஆட்சியின் லாபியினால் சென்னை மக்கள் வெள்ள நீரில் தத்தளிப்பதை போல், நோயாளிகள் மருத்துவர்களுக்கு இடையே பலிகடா ஆக்கப்படுவதை யாராலும் தடுக்க இயலாது.

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
  


No comments:

Post a Comment