Thursday, July 31, 2014

என்னை உணர்ந்த(தொலைத்த) தருணம்

இன்று காலை அவசரமாக கிளினிக்குற்கு கிளம்பி கொண்டிருந்தேன். அண்ணா!!! இன்னைக்கு வரும் போது சைக்கிள் டியூப்புக்கு மவுத் வாங்கிட்டு வா..என்றாள் தங்கை. அதென்ன மவுத் என்று மனதிலே அசை போட்டேன். மறந்திடாதே….” என்று மறுபடியும் கூறினாள். மவுத் பழையது எதாவது இருந்தால் கொடு, அதை வைத்து வாங்கி வருகிறேன்என்று பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சைக்கிள் என்னுடைய முக்கியமான பொருளாக இருந்தது. இன்று, “அது என்ன, மவுத்ன்ன என்ன? என்று யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்என்று மனசாட்சி உறுத்தியது.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு, ஆட்டோகிராப் சேரனை போல், சைக்கிள் கற்று கொண்ட நினைவுகள், சைக்கிள் சக்கரங்களாய் பின்னோக்கி பயணித்தன. நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரமிது. அப்போது வாடகை சைக்கிளில் தான்சைக்கிள் பழகினேன். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் என, நான்கைந்து நாட்களில் கற்று கொண்டேன்., சைக்கிள் ஓட்டுவதன் மீது அவ்வளவு ஆர்வமான இருந்ததால், படிப்பில் கூட நாட்டமில்லை. பல காயங்களை பெற்று, கற்று கொண்ட சைக்கிளை, இப்போது என்னவென்று கேட்கிறனே???

நண்பர்களோடு ஜாலியாக பேசி கொண்டு சைக்கிள் ஓட்டி கொண்டும், நடந்தும் சென்ற பள்ளிக்கூட நினைவுகள், இப்போது வீட்டின் வாசலில் வந்து அழைத்து செல்லும் பள்ளி பேருந்துகளில் இருப்பதாக தெரியவில்லை. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கிடைக்கலாம். பத்து பதினைந்து கி.மீட்டராக இருந்தாலும் நடந்தே படித்த, தந்தையர் மற்றும் தத்தாமார்களின் நினைவுகள் இன்னும் சிறப்பானவை.

ரோட்டில் நடுவில் வந்த நாயை கண்டு பிரேக் பிடித்து மெதுவாக சென்ற போது தான், நினைவலையிலிருந்து மீண்டு வந்தேன்.

மெயின் மார்க்கெட்டில் உள்ள ஒரு சைக்கிள் மார்ட்டில், மவுத் வாங்க போனேன். அங்கு இல்லையென்று பதில் வந்தது. நம்ம கடைக்கு மாத்தி வந்திட்டோமோ…. என்று மனதில் நினைத்தவாறு, கடையின் பெயரை மீண்டுமெரு முறை கடையின் போர்டை பார்த்தேன். அது சைக்கிள் மார்ட் தான். சைக்கிள் உபயோகம் குறைந்து போனாதால், மற்ற உபகரணங்களை வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார் அந்த கடைக்காரர்.

மூன்று தெரு தள்ளி இருக்கும் மற்றொரு சைக்கிள் மார்ட்க்கு போனேன். கடைக்காரர், “வால் டியூப் உள்ளது வேணுமாஇல்ல வால் டியூப் இல்லாதது வேணுமா?.....” என்று கேட்டார். நான் குழம்பி போய், “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல….: என்றேன். இரண்டு வகையான மவுத் உள்ளது தம்பிவால் டியூப் உள்ளது பழைய மாடல்….இப்போது வால் டியூப் இல்லாத மாடல் தான் அதிகம் வாங்குறங்க….அதையே நீங்களும் வாங்கிங்கோ …” என்றார் கடைக்காரர். பணத்தை கொடுக்கும் போது, “ இப்ப யாரு தம்பி சைக்கிள் ஒட்டுறஎதுக்கெடுத்தாலும் பைக் தான்.. அதான் உங்களுக்கும் மவுத் பத்தி தெரியல…” என்றார் கடைக்காரர்.

அவர் சொல்வது போல், கால ஒட்டத்தில் சைக்கிளின் உபயோகம் குறைந்து பைக்கின் உபயோகம் அதிகமாகி உள்ளது. அரசும் விலையில்லா சைக்கிள் வழங்கிய உடன் சைக்கிளுக்கு மதிப்பில்லாமல் போகி விட்டது. இயலாதவனின் வாகனமாக மாறி விட்டது. நண்பர் ஒருவர் படிப்பை முடித்து விட்டு ஊருக்கு கிளம்புகையில் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. நீ டாக்டர் ஆகிட்ட, பழக்க தோஷத்தில ஊருல போய் சைக்கிள் ஒட்டிடாதா…” என்றார் நண்பர்.

கடந்த நூற்றாண்டின் மிக சிறந்த போக்குவரத்து சாதனமான சைக்கிள் அறிவியல் வளர்ச்சியின் பிடியில் சிக்குண்டு, எங்கே மறைந்து விட்டது. சமுதாயத்தின் மேன் மக்கள் சைக்கிளை பயன்படுத்தினாலும், ” நீங்க போய் சைக்கிள் ஒட்டலமா….” என்ற ஒலக்குரல்கள் சமுதாயத்தில் இருந்து வரும்.

இப்படியாக எத்தனையே பொருட்கள், ஒவ்வொரு தினம் எதவாது ஒன்றை நம் வாழ்க்கையிலிருந்து தொலைத்து(விலக்கி) கொண்டு இருக்கிறோம் என்பது மிகப்பெரிய உண்மை. அவை அனைத்தும் நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. அம்மி, குழவி, வானொலி பெட்டி, டேப் ரெகாடர் இப்படியாக பட்டியல் நீளும். அடுத்த தலைமுறைக்கு பாடம் நடத்த வேண்டிய, பொருள் காட்சியில் காண வேண்டிய பொருளாக மாறி 
இருக்கிறது.  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


No comments:

Post a Comment