Sunday, September 7, 2014

தமிழனின் உணர்ச்சி குவியல்---

நேற்றைய நீயா நானாவில், தமிழர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள், அதனை விட்டு வெளியே வந்தால் விரைவில் முன்னேறலாம். என்ற விவாதம் நடந்தது. நல்ல கருத்துகள் நிறைந்து காரசாரமான விவாதமாக அமைந்தது. உணர்ச்சிகளை விடுத்து, அறிவின் வழியே பேசியதால், நல்லதொரு கருத்து களமாக அமைந்தது என்றால் மிகையாது.

அவையில் இரு பக்கங்களிலும், முன் வரிசையில் அமர்ந்த பேச்சாளர்களை பார்க்கும் போது, சிறு ஒற்றுமை காண நேர்ந்தது. உணர்ச்சிகளை தவிர்க்க வேண்டாமென்றவர்கள், பெரும்பாலும் 40 வயதிற்கு குறைந்தவர்களே. உணர்ச்சியும் மனிதனினுக்கு முக்கியம் என்று வாதிட்டவர்கள் பெரும்பாலும் 50 வயதினை கடந்தவராக தெரிந்தது. இது ஒர் தலைமுறை இடைவெளியை வெளி கொணர்ந்தது. இது ஏதர்ச்சையானது என்று தெரியவில்லை. இப்போது உள்ள சமூகம், உணர்ச்சிகளை புறக்கணிப்பதையும், பழைய சமூகம், உணர்ச்சிகள் நிறைந்தாக இருந்தது.

அதே சமயத்தில், தமிழர்கள் செண்டிமெண்டல் இடியட் என்பதை என்னால் ஒத்த கொள்ள இயலவில்லை. தமிழனை தவிர, மற்றவர்கள் யாரும் அழுவதில்லையா? அல்லது சிரிப்பதில்லையா? அல்லது அன்பு கொள்வதில்லையா? . எல்லாரும் ஏதேனும் ஒரு கட்டத்தில், தனது உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் வேண்டுமானால், உணர்ச்சி குவியல் குறைந்திருப்பதாக சொல்வதை ஒத்து கொள்ளாலமே தவிர, தமிழன் மட்டும் தான் செண்டிமெண்டல் இடியட் என்பதை ஒத்து கொள்ள மனம் இடம் தரவில்லை.

திருமணத்திற்கு பின், புகுந்த வீடு கிளம்பும் போது உள்ள பிரிவும், கல்லூரி காலங்களில் உள்ள பிரிவையும், இறந்தவர்களின் பிரிவையும் அதிகமாகப்படியான உணர்ச்சி குவியலாக பார்ப்பது நல்லதல்ல என்றே நினைக்கிறேன். இவையெல்லாம், வாழ்க்கை நியதி என்று கொண்டாலும், அதை தாண்டிய பந்தம் நம்மை தூண்டு விக்கிறது.

காதலில் தோல்வி அடைந்த காதலர்கள் துயரிலே வாழ்க்கை தொலைப்பதையும், அதிகப்படியான அன்பினால் கோபமான வார்த்தைகளை வெளியிடவதும், தன் பிள்ளை கஷ்டப்பட கூடாதென்று, அவனுக்காக அதிகப்படி சொத்து சேர்த்து, அவனை சோம்பேறி யாக்குவதையும் வேண்டுமானால், அதிகப்படியான உணர்ச்சி குவியலாக வைத்து கொள்ளலாம்.

உலகம்  சூரியனின் ஈர்ப்பு சக்தியினால் சுற்றுகிறது என்று அறிவியல் சொன்னாலும், அன்பு என்ற அச்சாணி இல்லையென்றால் என்றே சுடுகாடாய் மாறி இருக்கும் என நினைக்கிறேன். ஆண்-பெண், அண்ணன்தங்கை, அம்மா-மகன், கணவன்- மனைவி, அப்பா- மகள் இப்படியாக உறவு முறைகளில் அன்பு என்ற உணர்வு மட்டுமே, வெவ்வேறு பந்தமாக வெளிப்படுகிறது. அவையை நட்பு, பாசம், நேசம், காதல் என்று நாம் பெயரிட்டு கொள்கிறோம்.  

உணர்ச்சிகளை விடுத்தால், நன்றாக யோசிக்கலாம் என்பது உண்மையே. ஆனால், நாம் எல்லா நேரமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டே இருப்பதில்லை. மனமும் அப்படி செய்வதில்லை.

ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளை விடுத்தால், தனித்துவம் ஒங்கும் என்பதை என்னால் ஏற்று கொள்ள கூடாத தெரியவில்லை. நீ எப்போது சமூகத்திற்காக உணர்ச்சிகளை விட்டு விட்டாயோ, அப்போதே நீ உன் தனித்துவத்தையும் விட்டு விட்டு, உணர்ச்சிகளற்ற மனித ஜடமாக மாறியிருப்பாய். உனக்குள்ளே கட்டுபாடுகளை இட்டு கொண்டு, அன்பிற்கு அளவு கோலிட்டு, உணர்ச்சிகளை கட்டுபடுத்தி வாழ்ந்தால், தனி மரமாக நிற்பாயே தவிர, தோப்பாக தெரிய மாட்டாய்.

எனக்குள்ளே ஒரு கட்டுபாடு, விதித்து கொண்டு நானும் வாழ்ந்து இருக்கிறேன். நீ ஒரு மருத்துவர்., நீ அதிகம் அழுத கூடாது. நீ அதிகம் சிரிக்க கூடாது என்றேல்லாம் என்னை நானே நிர்பந்தி இருக்கிறேன். அது கூட தவறு என்றே நினைக்கிறேன். கிராம புரங்களில் போய் பார்த்தால், அழுகைக்கும் சிரிப்பும் வஞ்சனை வைப்பதில்லை. நாம், 1 லிட்டர் கண்ணீர் தான் விட வேண்டும். வாய் 10 மீட்டருக்கு அதிகமாக திறந்து சிரிக்க கூடாது. சிரிப்பின் சத்தம் 100 டெசிபலை விட அதிகமாக இருக்க கூடாது என்று அறிவின்  வழியே கணக்கீடுகிறோம் என்று நினைக்கிறேன். அளவு கோலில் அன்பினை கணக்கீடுவதும் ,அதனை வெளிப்படுத்துவதில் கணக்கீடுவதையும் தவிர்த்தலே, உன் தனித்துவம் பூமியில் நிலைத்து நிற்கும்.

திருமணத்தில் தாலி என்ற பொருளிற்கு மதிப்பு எவ்வளவு அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பந்தத்தில், நாம் என்ற வார்த்தை விட்டு, நான் என்ற வார்த்தை என்று வந்ததோ, அப்போதே கோர்ட் வாசலுக்கு நடக்க வேண்டிய வந்ததை யாரும் மறுக்க இயலாது.

இந்தியாவில் சேமிப்பு தன்மை அனைவரும் அறிந்த்தே. ஆனால், அதன் பின்புலம் என்ன??? தன் மகன் அல்லது மகள் கஷ்டப்பட கூடாது என்ற பாச பிணைப்பு தானே!!! அந்த பந்தம் இல்லாமல், ”நீ கஷ்டப்பட்டு நீ சாப்பிடு, நான் எனக்கு மட்டும் சம்பாதித்து கொள்கிறேன் “  என்ற வெளி நாட்டவரின் கொள்கை தன்மை தான், பொருளாதார சீர்கேடுக்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் ,அந்த பந்தம் தான் ஊழலுக்கு காரணம் என்பதும் உண்மை.

எப்போதும் மனதினை கொண்டே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அறிவை பயன்படுத்த வேண்டிய இடங்களில் அறிவையும், மனதை பயன்படுத்த வேண்டிய இடங்களில் மனதையும் உபயோகிக்க வேண்டும். அலுவலகத்தில் செய்ய வேண்டிய மூளைப் பணியை வீட்டில் பயன்படுத்தினால் தான் தவறு.    
    

குடும்பங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். அதே சமயத்தில் அலுவலக பணிகளில், உணர்ச்சிகளை கொண்டு வராதீர்கள்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  

No comments:

Post a Comment