Thursday, January 10, 2019

பொருளாதார நீதியும் சமூக நீதியும்


இந்திய அரசியலமைப்பு, ஒரு கருத்தினை தனது முன்னுரையில் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்தியர் அனைவருக்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நீதியை அளிக்க வேண்டும்!!!! …..என்பதே அது!!!!

அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைய, ஒற்றை தீர்வும் வாய்ப்பில்லதாக தோன்றுகிறது. கால ஒட்டத்திற்கு ஏற்ப, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப கட்டமைக்க வேண்டிய நிலையும் உள்ளது.

இதுவரையில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசியலில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளது. பாலினம் அடிப்படையிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளது. இவை சமூக மற்றும் அரசியல் நீதியை நிலைநாட்டுவதாக புரிந்து கொள்ளலலாம். இன்றும் அரசியலில் பாலினம் சார்ந்த இட ஒதுக்கீடு இல்லாத நிலையே உள்ளது. புதிதாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சமூக கட்டமைப்பில் உள்ள பிரச்சனையினால், நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதுகிறேன். அதே சமயத்தில் , குறிப்பிட்ட சதவீதத்தை தாண்டும் போது, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையவும் வாய்ப்புள்ளது. அதனால் தான், 50 சதவீத்தை தாண்ட கூடாது என்று இந்திர சகானி வழக்கில் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த இட ஒதுக்கீடு முறைகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.. அதை முறையாக செய்யாத போது, அதன் குறை மற்றும் நிறைகளை அறிய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

ஒரு குறிப்பிட்ட சாதி/மதம்/ பாலினம்/ பொருளாதாரம் சார்ந்து இட ஒதுக்கீடு பெறுவதில் தவறில்லை. குறிப்பிட்ட ஒரு நபரே மீண்டும் மீண்டும் பெரும் போது சிக்கல் ஆரம்பிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டில் எண்ணிக்கையை வரைமுறை செய்வதை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

சாதி, மதம் மற்றும் பாலினம் போன்றவை பிறப்பினால் அமைவதால், கணக்கீடுவதில் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் பொருளாதாரத்தை கணக்கீடுவதில் பிரச்சனைகள் நிறையவே உள்ளது.

உலக வாழ்வியலில் ஏற்ற தாழ்வுகளற்ற சமூகம் சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதியமும் மதமும் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தினால், குறிப்பிட்ட காலம் கடந்து, பொருளாதாரம் சார்ந்த ஏற்ற தாழ்வினை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளி விடுகிறது. சில இடங்களில் இனம் சார்ந்த பாகுபாடுகளும் அதிகமாகி விடுகிறது.

இதில் எது சரி என்பதே, பகுத்தறிவிற்கு உட்பட்டது. இதனை பொது புத்தியில் யோசித்தால் பயன் ஏதுவுமில்லை. போட்டி உலகில் சமூக நீதி சாத்தியமா? என்பதையும் சேர்த்தே யோசிக்க வேண்டியுள்ளது.

சமூக நலத்தை முழுவதுமான மறந்த நிலையில், தனக்காக குரல் கொடுக்க ஒருவன் இருக்கிறான் என்ற புரிதலை மட்டும் எப்படி புரிந்து கொள்வதென்று புரியவில்லை.

சமூக நீதிக்கும், பொருளாதார ஒதுக்கீடு முறைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. யாராவது விளக்கினால்…. அடியேன் தெரிந்து கொள்வேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment