Saturday, February 13, 2016

பணவீக்கமும் பொருளாதார கொள்கையும்

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கொள்கையிலும், ஒரு கோட்பாடு உண்டு. அதில் முக்கியமானது பணாவீக்கம்(விலையேற்றம்). இந்த பணவீக்கம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, அதிகபட்சமாக 5 சதவீதம் வரை இருக்கலாம். ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், 2 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

இன்னும் புரியம்படி சொல்கிறேன். உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஒரு பொருள் வாங்க கடைக்கு செல்கிறீர்கள். அந்த பொருள் 105 ரூபாய் என்றால், நண்பனிடம் 5 ரூபாய் கடன் வாங்கி, அந்த பொருளை வாங்கலாம். அதனால், உங்கள் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதில்லை ; நணபனின் பொருளாதாரமும் பாதிக்கப்படாது. மாறாக, உங்கள் இருவரின் வளர்ச்சிக்கும் உபயோகமாகும்.

எப்படியென்றால், நீங்கள் பெற்ற 5 ரூபாய்க்காக, சற்று அதிகமான உழைப்பை இட்டு, உங்கள் வருமானத்தை பெருக்குவீர்கள். உங்களிடம் கொடுத்த 5 ரூபாய் என்பது, நண்பனின் சேமிப்பாக மாறி விடும்.

அது போல், 5 சதவீதம் வரையிலான பணவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. அதாவது வேலைவாய்ப்புகள் உருவாகும்; தேவை அதிகமாகும்; நாட்டின் பொருளாதாரம் உயரும். இந்த நிலையென்பது விரலுகேற்ற வீக்கமாகவே இருக்கும்.

மாறாக, பணவீக்கம் 10-20 சதவீதமாக உயரும் போது, பொருளாதாரம் பாதிக்கப்படும். உங்கள் தகுதி மீறிய கடன், உங்களை கெட்ட வழியையே காண்பிக்கும். நாட்டிற்கு மட்டுமல்ல; வீட்டிற்கு பொருந்தும். ஆனால், நாம் இத்தகைய நிலையே அதிகமாக பின்பற்றுகிறோம் என்பது கண் கூடான உண்மை. தன்னிறைவு கலாச்சாரத்தை விட்டு, நுகர்வு கலாச்சாரத்திற்கு மாறி இருக்கிறோம். விரலை விட இரண்டு மடங்கு வீக்கத்தை உடல் தாங்குமா???

இது மாதிரியான நிலை, அமெரிக்காவிற்கு 2000 ல் ஏற்பட்டது. அமெரிக்கா முற்றிலும், நுகர்வு கலாச்சாரத்திற்கு உட்பட்டது. வங்கி கடன் மூலம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் தன்மை கொண்ட நாடு. அதை குறிப்பிட்ட சதவீதத்தை விட அதிகமாகும் போது, வாங்கிய கடனை கட்ட முடியாமல், அமெரிக்க மக்கள் திணறீனர். அமெரிக்க மத்திய வங்கி திவலானது. பொருளாதார மந்தம் ஏற்பட்டது.

இத்தகைய நுகர்வு கலாச்சாரம், இந்தியாவில் ஊடுருவ விட்டது. தொழிற்துறை நிறுவனங்கள், சந்தை வழியிலான நுகர்வு கலாச்சாரத்தை புகுத்துகிறது. நுகர்வு கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறில்லை. ஆனால், நுகர்வின் தன்மை, நம்முடைய பொருளாதாரத்தில் 5-10 சதவீத்தை தாண்டாமல் இருந்தால் நல்லது. மாறாக, 50 சதவீதமாக இருந்தால், கடன் காரன் வீட்டின் வாசலில் நிற்பதை யாராலும் தவிர்க்க இயலாது.

இந்திய வங்கிகளிலும், வாரா கடன் அதிகமாகி வருகிறது. இத்தகைய நிகழ்வு, நுகர்வு கலாச்சாரத்தின் பின் விளைவே. இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், தனிமனித பொருளாதாரத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. செயல்பாட்டளவில் இரண்டும் ஒன்றே.

பொருளாதாரம் என்பது மனித வாழ்வியலுக்கு தேவை தான். அதை நானும் ஒத்து கொள்வேன்; பொருளாதாரம் மட்டுமே, மனித வாழ்வியலை சீர்படுத்தும் என்பது மூட்டாள் தனம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல்; ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment