நண்பர் ஒருவர், கையில் மளிகை கூடையுடன் வீட்டிற்கு வந்தார்.
”மளிகை சாமான்களின் விலை எப்படி இருக்கு?” என்று கேட்டேன்.
”முன்பெல்லாம் 100 ரூபாய் கொண்டு போனால், பல பொருட்களை வாங்கி வரலாம். இப்போ ஓரு வேளைக்கு கூட வாங்க முடியல ”
என்று புலம்பியவாறு சேரில் அமர்ந்தார்.
”பெட்ரோல் விலை மாதத்திற்கு இரு முறை ஏறுது, சிலிண்டர் எண்ணிக்கை
தினமும் மாத்துரங்க, மாளிகை சாமான் விலையும் நொடிக்கு நொடி மாறுது, இப்படியே போனா குடும்பம்
நடத்த முடியாது போலிருக்கு!! மாத மாதம் பட்ஜெட் துண்டு தான் விழுது ” என்றவாறு தொடர்ந்தார்.
‘ம்ம்ம்ம்……..’என்ற மெளன மொழியோடு கேட்டு கொண்டிருந்தேன்.
”கம்பெனில சாம்பளம் அதிகமாக கேட்க முடியல!!! கேட்டா, வேலையை
விட்டு போக சொல்றாங்க!!!!, அரசாங்க வேலை மாதிரி, 6 மாதத்திற்கு ஒரு முறை சாம்பளம் ஏத்த
மாட்டாங்கிற!!! ” என்று புலம்பி தீர்த்து விட்டார்.
பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் கேட்கப்படுகின்ற வார்த்தைகள்
இவை. நடப்பு கணக்கு பற்றாகுறை, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு,
அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை போன்ற பொதுமக்கள் புரியாத வார்த்தைகளை மத்திய அரசு
காரணங்களாக அடுக்குகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணமென எதிர்கட்சிகளும்
தன்பங்கிற்கு குறை கூறி வருகின்றதன. மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி குறை கொள்வதும்
தினசரி பத்திரிக்கை செய்தியாக வலம் வருகிறது.
1991 ஆம் ஆண்டிற்கு பிறகு பொருளாதாரம் தாராளமய மாக்கப்பட்ட
பிறகு, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
வளரும் நாடுகளில் விலைவாசி ஏற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த காரணங்களால்
விலைவாசி தவிர்க்க முடியாததாகி விட்டது.
இந்தியர்களிடம் சேமிக்கும் பழக்கம் காலம் காலமாக தொன்று தொட்டு
வருகிறது. இந்த பழக்கம், இந்திய பொருளாதாரத்தை கீழே போகாமல் பிடித்து கொண்டது என்றால்
மிகையாது. மேலை நாடுகளில் சேமிக்கும் பழக்கம் இன்மையால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு,
பல வங்கிகளை பூட்டிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம்
குறைந்து வருகிறது என்பது வருத்தமான செய்தி.
சேமிக்கும் பழக்கத்தை தனி மனிதனின் நலம் சார்ந்த விஷயமாக
பார்க்கப்படுவதால், நல்ல பண்பாகவே சமுதாயம் கட்டமைத்து வைத்து இருக்கிறது.. சேமிக்கும்
தன்மை தனிமனித தேவை பூர்த்தி செய்வதாக அமைந்தால், நல்லதொரு சமூகத்தை ஏற்படுத்தும்.
வருங்கால தலைமுறை, தன் பெற்ற துன்பத்தை பெற கூடாது என்பது
பெற்றோரின் பொதுவான மனநிலை. இந்த மனோநிலையே, தன் தேவையை தாண்டி சேமிக்கும் தன்மையை
பெற்றோரிடம் உண்டாக்கியிருக்கிறது. பணத்தின் தேவை இல்லாத காரணத்தினால் ,வருங்கால தலைமுறையினர்
உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மறைமுகமாக சோம்பேறி ஆக்கப்படுகின்ற
நிலை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியும் தடைபடுகிறது .பணம் ஒரு இடத்தில் மட்டும்
மொத்தமாக குவியும் போது முதலாளி தொழிலாளி ஏற்றதாழ்வும் ஏற்படுகிறது
வளர்ந்த நாடுகளில், சேமிக்கும் தன்மை குறைவாக இருக்கும் போது,
ஒவ்வொரு தனிமனிதனும் உழைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வளர்ச்சியை எளிதாக எட்ட முடிகிறது.
பழங்காலத்தில் கருவூலங்களில் கூட, அளவுக்கு அதிகமாக பொன்னையும்,
தானியங்களையும் சேமித்து வைத்து இருந்தனர். போர் மற்றும் பஞ்சம் ஏற்படும் காலங்களில்
மக்களின் தேவைக்காக மட்டுமே, மன்னரின் கருவூலம்
பயன்பட்டது. இன்றைய தலைவர்கள் கூட, பணத்தை பல்வேறு வழிகளில் சேர்க்கின்றனர். லஞ்சம், ஊழல் போன்ற சமூக சாக்கடைகள் வழியே செல்வத்தை
பெருக்குகின்றனர். நாட்டின் பொருளாதாரம் சுவிஸ் வங்கிகளிலும் அரசியல்வாதிகளின் வீட்டிலிலும்
பெரும்பாலும் முடக்கப்படுகிறது. ”இந்தியா பணக்கார நாடு, ஆனால் இந்தியர்கள் ஏழைகள்”
என்ற வார்த்தைகள் மிகையாது.
சேமிப்பு என்பது வாழ்வியல் நல்லொழுக்கமாக கருத வேண்டியதை
தாண்டி, பொருளாதாரமாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சமூக நலனின் பார்வையில் சேமிப்பை
கடைப்பிடிப்போமானால், இந்திய பொருளாதாரம் நல்லதொரு நிலையை எட்டும் நாள் வெகு தொலைவில்
இல்லை.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்

No comments:
Post a Comment